குடியரசுத் தலைவர் தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவானது
- நாட்டின் 16-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
- இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்குச் சீட்டு முறையில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.
- எம்.பிக்கள் வாக்களிப்பதற்காக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநில சட்டமன்றத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்து வாக்குப்பதிவை தொடங்கி வைத்தார்.
- மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 771 பேரும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,025 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இதில், ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 சட்டப்பேரவைகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றிய அரசு குழு அமைப்பு
- ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.
- அதனால் போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
- குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட மற்ற பிற கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்திருந்தனர்.
- இந்நிலையில், வேளாண் சட்டம் ரத்து செய்து 8 மாதங்களுக்குப் பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசு குழு அமைத்துள்ளது.
- இதில் முன்னாள் வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மாநில அதிகாரிகளும், விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்தா கிசான் மோர்சா சங்க உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு திருநாள் விழா 2022
- தமிழ்நாடு திருநாள் விழா இன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழறிஞர்களுக்கு விருதுகளும் மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
- பேரறிஞர் அண்ணா அவர்கள் நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் நாளைப் போற்றும் வண்ணம் தமிழ்நாடு திருநாள் என்ற பெயரில் மாபெரும் நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
- இவ்விழாவின் முதல் நிகழ்ச்சியாக மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களின் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
- இதில் 'தமிழ்நாடு உருவான வரலாறு' என்ற தலைப்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும், 'மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்' என்ற தலைப்பில் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்களும், 'தமிழகத்துக்காக உயிர்கொடுத்த தியாகிகள்' என்ற தலைப்பில் திரு. வாலாசா வல்லவன் அவர்களும் 'தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன்' என்ற தலைப்பில் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களும் 'முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு' என்ற தலைப்பில் மருத்துவர் நா. எழிலன் அவர்களும் கருத்துரையாற்றினர்.
- மேலும், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது திரு. கயல் (கோ) தினகரன் அவர்களுக்கும், கபிலர் விருது பாவலர் கருமலைத் தமிழாழன் (எ) கி. நரேந்திரன் அவர்களுக்கும், 2021 ஆம் ஆண்டிற்கான உ.வே.சா விருது மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும், அம்மா இலக்கிய விருது முனைவர் மு. சற்குணவதி அவர்களுக்கும், காரைக்கால் அம்மையார் விருது முனைவர் இரா. திலகவதி சண்முகசுந்தரம் அவர்களுக்கும் வழங்கினார்.
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் - இந்திய வீராங்கனை வெண்கலம்;
- உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலம் வென்றார். மேலும், தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து அவர் சாதனை புரிந்துள்ளார்.
- தென் கொரியாவில் நடைபெறும் இந்த உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 50மீ ரைபிள் போட்டியில் அஞ்சும் வெண்கலம் வென்றார்.
- தரவரிசை சுற்றுக்கு நடைபெற்ற தகுதிச்சுற்றில் அஞ்சும் முட்கில் 586 புள்ளிகள் பெற்றார். தரவரிசை சுற்றில் 402.9 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஞ்சுல் முட்கில் வெள்ளி வென்றார்.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் விளையும் தானியங்களை பிரபலப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை நித்தி ஆயோக் மற்றும் உலக உணவு திட்டம் தொடங்கவுள்ளது
- ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் விளையும் தானியங்களை பிரபலப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை நித்தி ஆயோக் மற்றும் உலக உணவு திட்டம் நாளை (19.07.2022) காணொலி காட்சி வாயிலாக தொடங்கவுள்ளது.
- தானியங்களை நிலங்களில் பயிரிடும் முறை மற்றும் அதற்கான நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி அளவு மற்றும் தானியங்களின் நுகர்வு ஆகியவற்றின் விவரங்களை நித்தி ஆயோக் மற்றும் உலக உணவு திட்டம் தயாரிக்க உள்ளது.
- இதற்கான நிகழ்ச்சியை நித்தி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தொடங்கி வைக்க உள்ளார். உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த் மற்றும் ஆலோசகர் டாக்டர் நீலம் படேல், உலக உணவு திட்ட பிரதிநிதி பிஷோ பராஜுலி, வேளாண் துறை அமைச்சக இணைச் செயலாளர் சுபா தாக்கூர் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
பொலிவுறு நகரங்கள் திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ரூ. 48,000 கோடி நிதியுதவியை மத்திய அரசு அளிக்கிறது
- கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பொலிவுறு நகரங்கள் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 4 சுற்று போட்டியின் மூலம் 100 பொலிவுறு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- பொலிவுறு நகரங்கள் திட்ட வழிகாட்டுதலின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.48,000 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கும். சராசரியாக வருடத்திற்கு ரு. 100 கோடி அளிக்கும்.
- 2022 ஆம் ஆண்டு ஜூலை 8-ம் தேதியின்படி, 100 நவீன நகரங்களுக்காக ரூ.30,751.41 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், 90% அளவாக ரூ.27,610.34 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,333.87 கோடி வழங்கப்பட்டதில் ரூ.3,932.06 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
- பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் நடைபெற்ற கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் உரையாற்றினார்.
- இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்’ திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை மிக முக்கியமானது என்று கூறினார்.
- இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார், கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் எஸ் என் கோர்மேட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரண்டு நாட்களுக்கு இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது.