ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44 ஆயிரம் கோடிக்கு ஏலம் - டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய வையாகாம்18
- ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிரித்து ஏலம் விடுவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது.
- மின்னணு ஏலத்தின் 2-ம் நாளான நேற்று ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியுள்ளது.
- டிஜிட்டல் உரிமத்தை ரூ. 20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இந்த பிரிவுகளின் மூலம் பிசிசிஐக்கு ரூ.44,075 கோடி வருமானம் கிடைக்கும்.
- 5 வருட காலத்தில் ஐபிஎல் தொடரில் மொத்தம் 410 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதன் தொலைக்காட்சி உரிமம் ரூ. 23,575 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
- இந்த வகையில் ஒரு ஆட்டம் மட்டும் ரூ.57.5 கோடிக்கு ஏலம் சென்றுள்ளது. அதேவேளையில் டிஜிட்டல் உரிமம் ஒரு ஆட்டத்துக்கு ரூ.50 கோடி வழங்கப்படுகிறது. மொத்தத்தில் இரு பிரிவையும் சேர்த்து ஒரு ஆட்டத்தின் ஒளிபரப்பு உரிமம் வழியாக ரூ.107.5 கோடி வருமானத்தை பெற உள்ளது பிசிசிஐ.
மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி நியமனம் - தமிழக வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் உத்தரவு
- தமிழகத்தில் அரசுத் துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 51 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்திய வனப் பணி (Indian Forest Service) அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த ஏ.உதயன், வண்டலூரில் உள்ள நவீன காட்டுயிர் பாதுகாப்பு மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றப் பிரிவின் சிறப்பு செயலராக இருந்த எம்.ஜெயந்தி, மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வனம், காட்டுயிர் குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக இருந்த மிதா பானர்ஜி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெறுவதுடன், வன ஆராய்ச்சி, கல்வி பிரிவு முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறை இயக்குநராக இருந்த பி.ராஜேஸ்வரி, வனம் மற்றும் காட்டுயிர் குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இயக்குநராக இருந்த தீபக் எஸ்.பில்கி, சுற்றுச்சூழல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்த பி.சி.அர்ச்சனா கல்யாணி, தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றப் பிரிவு சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வண்டலூரில் உள்ள நவீன காட்டுயிர் பாதுகாப்பு மைய இயக்குநராக இருந்த சேவா சிங், கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ரூ.10,790 கோடியில் மின் விநியோக கட்டமைப்பு வசதி - மத்திய அரசு ஒப்புதல்
- மத்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் சீராக மின் விநியோகம் செய்வதுடன், மின்சாரத்தை கடத்தும்போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், சில அடிப்படை கட்டமைப்பு பணிகளை ரூ.10,790 கோடி செலவில் மேற்கொள்ள தமிழக மின்வாரியத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இதில், ரூ.8,600 கோடி மத்திய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும். மேலும், இத்திட்டப் பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடித்துவிட்டால், மத்திய அரசு வழங்கும் கடன் தொகையில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மீதியை மட்டும் செலுத்தினால் போதும்.
- மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள மின்வழித் தடங்களில் மீட்டர் பொருத்துவது, புதிதாக மின்வழித் தடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் இலக்கு நிர்ணயித்து இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
- நடப்பு ஆண்டில் மின்தேவை அதிகரித்து வரும் இடங்களில் 26,300 மின்விநியோக டிரான்ஸ்ஃபார்மர்கள் பொருத்தப்பட உள்ளன. அத்துடன், மின்வழித் தடங்களும் அமைக்கப்படும். இந்த பணிகளுக்காக ரூ.2,050 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 15-ம் தேதியுடன் விடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
- ஆரம்ப காலத்தில் பிரவுசர் என்றால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மட்டுமே இருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
- முதன் முதலில் 1995-ல் விண்டோஸ் 95-க்கான கூடுதல் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வெளியிடப்பட்டது. பின்னர், அந்நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை இலவசமாக வழங்கத் தொடங்கியது.
- கடந்த 2003-ல் 95% பயன்பாட்டின் உச்சத்தை எட்டியது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை. ஆனால், அது அதன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. பயனர் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறையத் தொடங்கியது.
- பயனர்கள் மற்ற சேவைகளை பயன்படுத்த தொடங்கிய நிலையில், அதன் சேவை பயனர்களின் மத்தியில் வெகுவாக குறைய தொடங்கியது.
- அதாவது, தற்போது கூகுள் குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ் போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ளதால் வேறு வழியின்றி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 15-ம் தேதி முதல் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், 27 ஆண்டு கால வரலாறு 15ம் தேதி முதல் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்விதான் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் - 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், மாணவர்களின் கற்றலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளியை குறைக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அதன்படி, 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதி படிப்பதை உறுதி செய்யும் விதமாக 'எண்ணும் எழுத்தும்' திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி செயலி, திட்டப் பாடல் ஆகியவற்றை வெளியிட்டார்.
- மாணவர்கள், ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்ட பாட நூல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், ஆசிரியர் கையேடு, சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.
சென்னை ஐஐடி பேராசிரியா் குழுவுக்கு 'சா்வதேச தண்ணீா் விருது' அறிவிப்பு
- சவூதி அரேபியாவின் மறைந்த இளவரசா் சுல்தான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத், கடந்த 2002-ஆம் ஆண்டு அக்டோபா் 21ஆம் தேதி, சா்வதேச அறிவியல் விருதைத் தொடங்கினாா். இந்த விருது ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படுகிறது.
- பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ. 2 கோடி பரிசு தங்கப் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
- இந்த நிலையில், சா்வதேச அறிவியல் விருதின்கீழ் வழங்கப்படும், 'இளவரசா் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் சா்வதேச தண்ணீா் விருது' சென்னை ஐஐடி வேதியியல் துறை பேராசிரியா் டி. பிரதீப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீா் தொடா்பான ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கிரியேட்டிவிட்டி பிரிவில், இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- பேராசிரியா் டி. பிரதீப்பின் ஆராய்ச்சிக் குழு, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், குடிநீரிலிருந்து ஆா்சனிக்கை விரைவாகவும், மலிவு விலையிலும் அகற்றும் நானோ அளவிலான பொருள்களை உருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
- இதற்கான விருது வழங்கும் விழா நிகழாண்டு செப். 12-ஆம் தேதி நியூயாா்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
- இதில், பேராசிரியா் டி.பிரதீப் மற்றும் அவரது குழு உறுப்பினா்கள் அவுலா அனில் குமாா், சென்னு சுதாகா், ஸ்ரீதாமா முகா்ஜி, அன்ஷூப் மற்றும் மோகன் உதயசங்கா் ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
ஒத்துழைப்பை மேம்படுத்த பாகிஸ்தான்-சீன ராணுவம் ஒப்புதல்
- சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வா, அந்நாட்டு ராணுவ அதிகாரிகளை சந்தித்துப் பேசினாா். இச்சந்திப்பின்போது பாகிஸ்தான் முப்படையைச் சோந்த அதிகாரிகளும் உடனிருந்தனா்.
- 'சா்வதேச, பிராந்திய பாதுகாப்பு சூழல் குறித்து கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையே நிலவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அதிகாரிகள் திருப்தி தெரிவித்தனா்.
- சவால்மிக்க சூழலில் இரு நாடுகளுக்குமிடையேயான பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு உறுதியேற்கப்பட்டது. முப்படைகள் அளவில் பயிற்சி, தொழில்நுட்பம், பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்டவற்றில் நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அதிகாரிகள் உறுதியேற்றனா்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.