மாநிலங்களவைத் தேர்தல் 2022
- தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே, தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் மாநிலங்களவைக்கு தேர்வாகி விட்டனர்.
- இந்நிலையில் மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், ஹரியானாவில் 2 எம்.பி இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
- இதில் கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், பாஜக சார்பில் நடிகர் ஜெக்கேஷ், லெஹர் சிங் ஆகியோரும் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.
- அதேபோல ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரமோத் திவாரி, முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோரும், பாஜகவின் கன்ஷியாம் திவாரியும் வெற்றி பெற்றுள்ளனர்.
- விதிகளை மீறி சிலர் வாக்களித்த தாக எழுந்த புகாரையடுத்து மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
- இன்று அதிகாலை வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 6 இடங்களில் பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலா 1 இடத்திலும் வெற்றிபெற்றன.
- பாஜகவின் பியூஷ் கோயல் 48 வாக்குகள் பெற்று வென்றார். சிவசேனாவின் சஞ்சய் பவார் தேர்தலில் தோல்வியடைந்தார். ஹரியானாவில் பாஜக ஒரு இடமும், பாஜக ஆதரவு சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது.
வலையங்குளத்தில் 312 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு
- வலையங்குளம் வரலாற்று ஆர்வலர் வேல்முருகன், தங்கள் ஊரில் பழமையான கல்வெட்டு இருப்பதாக தகவல் கொடுத்தார்.
- பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் மாணவர்கள் அஜீத்குமார், தினேஷ்குமார், சூரியபிரகாஷ், தர்மர் குழுவினர் அப்பகுதி கண்மாய்க்கரை அருகில் விநாயகர் கோயில் முன்பு 'திருமலை மெச்சினார்' என்ற பெயர் பறைசாற்றும் கல்வெட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
- கல்வெட்டை படி எடுத்து பார்த்ததில் 312 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது தெரிந்தது. தமிழர்களின் தொன்மை கலைகளில் ஒன்று நாடகம்.
- தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தமிழ் நாடகக் கலை பற்றிய சான்றுகள் உள்ளன. மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கி.பி., 1526 முதல் 1736 வரை நிர்வாகம், கலாசாரத்தில் சிறப்புடன் திகழ்ந்தனர்.
- வலையங்குளம் கண்மாய் அருகே ராணி மங்கம்மாள் சாலையின் ஓரமாக ஆலமரத்தடியில் 3 அடி நீளம், 2 அடி அகலம், பத்து வரிகள் கொண்ட தனி கருங்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளது.
- இதில் 'சாலிய வாகன சகாப்தம் 1710 வருடம் 15, திங்கள்கிழமை பூரண நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் வலையங்குளத்தில் இருக்கும் திருமலை மெச்சினார் பெருமை பெற்ற நாடக கலை சங்கமறிய விநாயகர் கோயிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து திருமலை மெச்சன் உபயம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு பிரச்னையை சமாளிக்க ரூ20,000 கோடி நிதி ஒதுக்கீடு - இலங்கை பிரதமர் ரணில் அறிவிப்பு
- இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.1.80 லட்சம் கோடி தேவைப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் இன்னும் 2 மாதங்களில் மக்களுக்கு 2 வேளை மட்டுமே உணவு கிடைக்கும் சூழல் ஏற்படும் என்றும் பிரதமர் ரணில் ஏற்கனவே கூறியிருந்தார்.
- இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு இல்லாததால், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து, மக்கள் உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
- இந்நிலையில், இலங்கை ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமரும் நிதியமைச்சருமான ரணில், `நாட்டின் நிதி பாதுகாப்புக்காக ரூ20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுவதால் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் மொத்த மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 10 சதவீதம் மக்களுக்காவது 3 வேளை இலவசமாக உணவளிக்க முடியும்,' என்று கூறினார்.
உரம் இறக்குமதி - இலங்கைக்கு இந்தியா ரூ.429 கோடி கடனுதவி
- 65,000 மெட்ரிக் டன் யூரியா உரம் இறக்குமதி செய்வதற்காக கடனுதவி வழங்கும்படி இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், இந்தியாவிலிருந்து யூரியா உரத்தைக் கொள்முதல் செய்வதற்காக ரூ.429 கோடி கடனுதவி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.
- இதற்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியுடனான ஒப்பந்தத்தில் இலங்கை நிதித் துறை அமைச்சக செயலா் எம்.சிறீவா்த்தனா கையொப்பமிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக, ரசாயன உரம் இறக்குமதிக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச தடை விதித்ததால், இலங்கையில் சுமாா் 50 சதவீதம் அளவுக்கு பயிா் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பின்னா், அந்த முடிவு தவறானது என அவா் ஒப்புக்கொண்டாா்.
அகமதாபாதின் போபலில் இன்-ஸ்பேஸ் தலைமையகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
- பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-SPACe) தலைமையகத்தை அகமதாபாதின் போபலில் திறந்து வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியின் போது, விண்வெளி சார்ந்த பயன்பாடுகள் மற்றும் சேவைத்துறையில் இன்-ஸ்பேஸ் மற்றும் தனியார் நிறுவனங்கள் பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
- விண்வெளித்துறையில் தனியார் துறையினரை ஊக்குவிப்பது விண்வெளித்துறைக்கு பெரும் உத்வேகம் அளிப்பதுடன், இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும்.
- மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல், மற்றும் விண்வெளித் தொழில்துறையினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நவ்ராசியில் ‘குஜராத் பெருமை இயக்கத்தின்’ போது பலவகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
- குஜராத் பெருமை இயக்கம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நவ்ராசியில் உள்ள பழங்குடியினர் பகுதியான குட்வேலில் ‘குஜராத் பெருமை இயக்கத்தின்’ போது அவர் பலவகை வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- 7 திட்டங்களின் தொடக்கம், 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 14 திட்டங்களுக்கு பூமி பூஜை செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
- போக்குவரத்து தொடர்பை அதிகரித்தல், வாழ்க்கையை எளிதாக்குவதை விரிவுபடுத்துதல் என்பவற்றுடன் இந்த பகுதியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த இந்த திட்டங்கள் உதவும்.
- இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர ரஜினிகாந்த் பட்டேல், மத்திய, மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.