இந்தியா - இங்கிலாந்து இடையே போடப்பட்ட ஒப்பதங்கள்
- இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இரு தலைவர்களும் தனித்தும், பின்னர் குழுவாகவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை அடுத்து, பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுச்சூழல், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒப்பந்தம் பரிமாரிக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, நரேந்திர மோடியும், போரிஸ் ஜான்சனும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
- இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இருநாடுகள் இடையே பாதுகாப்பு, தாராள வர்த்தகம், தூய்மை எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- மோடி- போரிஸ் நடத்திய பேச்சுவார்த்தையின் மிகவும் முக்கிய அம்சமாக, இருநாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது அமைந்தது.
- இந்தியாவுக்கு வழங்கப்படும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிர்வாக சிக்கல்கள் இல்லாமல் இந்தியாவுக்கு வழங்குவதற்காக, 'வெளிப்படையான பொது ஏற்றுமதி உரிமம்' என்ற சலுகையை பிரிட்டன் வழங்க உள்ளது.
- இந்த தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இந்தாண்டு இறுதியில், தீபாவளிக்கு முன்பாக கையெழுத்திடவும் பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.
நிடி ஆயோக் துணை தலைவராக சுமன் கே. பெர்ரி நியமனம்
- நிடி ஆயோக் துணைதலைவராக சுமன் கே. பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். நிடி ஆயோக் துணை தலைவராக 2017-ம் ஆண்டிலிருந்து பதவிவகித்து வரும் ராஜிவ் குமார் , பதவி காலம் ஏப். 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
- இந்நிலையில் ராஜிவ் குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை மத்திய ஏற்றுக் கொண்டதையடுத்து புதிய துணை தலைவராக சுமன் கே. பெர்ரி நியமிக்கப்பட்டார். இவர் வரும் மே.1-ம் தேதி பதியேற்க உள்ளார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்
- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்ஷு மாலிக், ராதிகா ஆகியோா் வியாழக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
- மகளிருக்கான 57 கிலோ பிரிவில் நடப்புச் சாம்பியனாக களம் கண்ட அன்ஷு, முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஷோகிடா அக்மிதோவாவை வீழ்த்த, அடுத்த சுற்றில் சிங்கப்பூரின் டேனியல் சூ சிங் லிம்மை தோற்கடித்தாா்.
- தொடா்ந்து அரையிறுதியில் மங்கோலியாவின் போலோா்துயா குரெல்கூவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு வந்தாா். அதில் ஜப்பானின் சுகுமி சகுராயிடம் வீழ்ந்து வெள்ளி பெற்றாா்.
- அன்ஷு தற்போது பெற்றிருப்பது இப்போட்டியில் அவரது 3-ஆவது பதக்கமாகும். இதற்கு முன் அவா் 2020-இல் வெண்கலமும், 2021-இல் தங்கமும் வென்றுள்ளாா்.
- அதேபோல், 65 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் ராதிகா - கஜகஸ்தானின் டரிகா அபெனிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினாா்.
- மற்றொரு இந்தியரான மனீஷா 62 கிலோ பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் அயாலிம் கேசிமோவாவை வீழ்த்தினாா். எனினும், அரையிறுதியில் ஜப்பானின் நோனோகா ஒஸாகியிடம் தோல்வியைத் தழுவினாா்.
- இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் தென் கொரியாவின் ஹன்பித் லீயை வென்று பதக்கத்தை கைப்பற்றினாா் மனீஷா.
- 53 கிலோ பிரிவில் ஸ்வாதி ஷின்டே தாம் விளையாடிய இரு சுற்றுகளிலுமே தோல்வியடைந்து வெளியேறினாா்.
- குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற இந்தியாவின் முதலாவது, உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டில் முக்கிய ஆயுஷ் பிரிவுகளான, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், மருத்துவ மதிப்பு பயணம் (இந்தியாவில் குணமடைதல்), மருந்து பொருட்கள், தொழில்நுட்பம் & நோய் கண்டறிதல் மற்றும் விவசாயிகள் & வேளாண்மை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ரூ.9,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள உத்தரவாத கடிதம் பெறப்பட்டு, வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
- வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையில் ரூ.7,000 கோடிக்கு அதிகமாகவும் மருத்துவ மதிப்பு பயணத்துறையில் சுமார் 1000 கோடி அளவுக்கும், மருந்து துறையில் ரூ.345 கோடிக்கும், விவசாயிகள் வேளாண்மைத்துறையில் ரூ.300 கோடி அளவுக்கும், தொழில்நுட்பம் மற்றும் நோய் கண்டறியும் துறையில் ரூ.60 கோடி அளவுக்கும் முதலீடுகள் செய்ய உத்தரவாதம் கிடைக்கப் பெற்றுள்ளது.
- 20 ஏப்ரல் 2022 அன்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் இந்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
- உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2020 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பொது நிர்வாக விருதினை பெற்றுள்ளது. ஏப்ரல் 21 ஆம் தேதி குடிமைப் பணிகள் தினத்தன்று புதுதில்லியில் நடைபெற்ற பிரதமரின் பொது நிர்வாக விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு.நரேந்திரமோடி இதனை வழங்கினார். இந்த விருது, புதிய கண்டுபிடிப்புகள் (பொது) – மத்திய பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த புதுமையான திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நியாய விலைக்கடைகளில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்களுக்கான ரேஷன் பொருட்களை முழுமையாகவோ / பகுதியாகவோ, தடையின்றி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள உணவுப் பொருட்களை மற்ற குடும்ப உறுப்பினர்கள் பெற முடியும்.
- கொரோனா காலத்தில் 5 லட்சம் நியாய விலைக்கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் நடந்தது. ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான 121 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு மாநிலத்திற்குள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் உணவுப் பொருட்கள் விநியோகம் நடந்தது.
- இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, ஆண்ட்ராய்டு செயலியும், 14445 என்ற இலவச உதவி எண்ணும் செயல்பாட்டில் உள்ளன.
- ஏற்றுமதி மதிப்பு தொடருக்கு ஊக்கமளிக்கும் நோக்கில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபேடா) தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்துடன் (என்ஆர்டிசி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- பங்குதாரர்களுக்கு சிறந்த மதிப்பைக் கொண்டு வரும் நோக்கில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளின் நலனுக்கான செயல்பாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம் இரு நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- வேளாண் ஏற்றுமதி கொள்கையை நடைமுறைப்படுத்தவும், ஏற்றுமதி மதிப்பு சங்கிலியை வலுப்படுத்துவதும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
- புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மதிப்புச் சங்கிலியின் பல்வேறு நிலைகளில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான கூட்டுத் திட்டங்களில் இரு நிறுவனங்களும் ஒத்துழைக்கும்.
- சிறிய அளவிலான விவசாயிகளுக்கு பயனர் நட்பு மிக்க மற்றும் ஆற்றல் திறன் கொண்ட கருவிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாகும் ஸ்டார்ட்அப் சூழலியலை வலுப்படுத்துதல் மற்றும் பரஸ்பர அறிவுப் பகிர்வும் இதன் நோக்கங்களாகும்.
- புதுதில்லியில் உள்ள அபேடா தலைமை அலுவலகத்தில் அபேடா தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து முன்னிலையில் அபேடா செயலாளர் என்ஆர்டிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கமோடோர் (ஓய்வு) அமித் ரஸ்தோகி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- என்ஆர்டிசி என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் நிறுவனமாகும், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், காப்புரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் வணிகமயமாக்குதலுக்கான நோக்கத்துடன் 1953-ல் இது நிறுவப்பட்டது.