குவாட் அமைப்பு உச்சி மாநாடு 2022
- இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
- 2-வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர். இந்த நிலையில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது.
- இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மாரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
- இந்நிலையில், குவாட் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான பாதையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
- பிரதமர் மோடி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்தும் அதன் முக்கிய நோக்கத்தில் குவாட் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
சர்வதேச வர்த்தக துறைக்கான ஒதுக்கீடு குறித்து நடந்த 'வெபினார்'
- 2022 - 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தொழில்துறை மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக துறைக்கான ஒதுக்கீடு குறித்து நடந்த, 'வெபினார்' எனப்படும் இணைய வழி கருத்தரங்கில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு பேரிடர் கூடுதல் நிதி ரூ. 1,682 கோடி
- தமிழகம், ஆந்திரா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களுக்கு, 1,664.25 கோடி ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 17.86 கோடி ரூபாயும் மத்திய அரசு தருகிறது.
- இந்த நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக வழங்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
- ஆந்திராவுக்கு 351.43; ஹிமாச்சல் 112.19; கர்நாடகா 492.39; மஹாராஷ்டிரா 355.39; தமிழகத்துக்கு 352.85 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. புதுச்சேரிக்கு 17.86 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
முதல்வர் ஜெகனின் 3 தலைநகர் திட்டம் ரத்து ஆந்திராவின் தலைநகரம் அமராவதி மட்டும்தான் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- கடந்த 2014ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலங்கானா மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டது. அப்போது, ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக விளங்கிய ஐதராபாத், இருமாநிலங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகரமாக விளங்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- ஆந்திராவில் 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று, முதல்வராக ஜெகன் மோகன் பதவி ஏற்றார். இவர் வந்ததும் 3 இடங்களை தலைநகராக அறிவித்தார்.
- ராயலசீமாவில் கர்னூலில் உயர் நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியை சட்டசபை தலைநகராகவும், விசாகபட்டினத்தை நிர்வாக தலைநகராகவும் அறிவித்தார்.
- இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, 700 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 'அமராவதி தலைநகருக்காகத்தான் நிலத்தை வழங்கினோம்.
- ஆனால், அரசு தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல், 3 தலைநகர் என்று அறிவித்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,' என்று மனுவில் அவர்கள் தெரிவித்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'அமராவதியை தலைநகரமாக உருவாக்க வேண்டும்.
- இதற்காக, ஏ.பி.சி.ஆர்.டி.ஏ. என்னும் வழிகாட்டுதல் ஆணையம் அமைக்கப்படுகிறது,' என்று உத்தரவிட்டது. ஆந்திர அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, உத்தரவுகள் பிறப்பித்தது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான உறவு துண்டிப்பு - ரஷ்யா
- உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
- இதனிடையே உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
- மேலும், அமெரிக்காவுக்கான ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி நிலையம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
தேசிய செஸ் - அர்ஜூன் சாம்பியன்
- உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 58-ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் 11 சுற்றுகளின் முடிவில் அர்ஜூன், தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ், பி.இனியன் ஆகிய மூவருமே 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
- இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட "டை-பிரேக்கர்'-இல் வெற்றி பெற்று அர்ஜூன் சாம்பியன் ஆனார். அவருக்கு ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
- குகேஷ் 2-ஆம் இடமும், இனியன் 3-ஆம் இடம் பிடிக்க, நடப்புச் சாம்பியனாக இருந்த மற்றொரு தமிழரான அரவிந்த் சிதம்பரம் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தார்.
- முன்னதாக, இப்போட்டியன் மகளிர் பிரிவில் மகாராஷ்டிரத்தின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் ஆக, சாக்ஷி சித்லாங்கே 2-ஆம் இடமும், ஆந்திரத்தின் பிரியங்கா நுடாகி 3-ஆம் இடமும் பிடித்தனர்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிரணிக்கு தங்கம்
- எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீநிவேதா, ஈஷா சிங், ருசிதா வினெர்கர் ஆகியோர் கூட்டணி 16-6 புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா கேத்தரினா ஹெக்னர், சாண்ட்ரா ரீட்ஸ், கேரினா விம்மர் கூட்டணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
- இப்போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
5வது ஐ.நா சுற்றுச்சூழல் கூட்டத்தில், பிளாஸ்டிக் மாசுவை குறைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் - 175 நாடுகள் ஏற்பு
- பிளாஸ்டிக் மாசு-வை ஒழிப்பது, உலகளாவிய சுற்றுச்சூழல் சவாலாக உள்ளது. இது குறித்து ஆலோசிக்க, ஐ.நா. சுற்றுச்சூழல் கூட்டம் நைரோபியில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடந்தது.
- இதில் பிளாஸ்டிக் மாசு-வுக்கு தீர்வு காணும் 3 வரைவு தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பரிசீலனையில் உள்ள வரைவு தீர்மானங்களில் ஒன்று இந்தியா கொண்டு வந்தது ஆகும்.
- பிளாஸ்டிக் மாசு-வை ஒழிக்க, நாடுகள் தானாக முன்வந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற வரைவு தீர்மானத்தை இந்தியா தாக்கல் செய்தது.
- பிளாஸ்டிக் மாசு-வை கட்டுப்படுத்தும் உலகளாவிய நடவடிக்கைக்கு, புதிய சர்வதேச சட்டரீதியான ஒப்பந்தத்துக்கு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஒருமனதாக முடிவெடுக்க, ஐ.நா. சுற்றுச்சூழல் கூட்டத்தில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது.
- நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின், பிளாஸ்டிக் மாசு-வுக்கு முடிவு கட்டும் இந்தியாவின் வரைவு தீர்மானம், ஐ.நா.வின் சுற்றுச்சூழல் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தை 175 நாடுகள் ஏற்றுக்கொண்டது வரலாற்று சிறப்புமிக்கது.