வீடுகளின் விலை அதிகரிப்பு - உலக பட்டியலில் இந்தியாவுக்கு 51-ஆவது இடம்
- உலக அளவில் வீடுகளின் விலை அதிகரிப்பு பட்டியலில் இந்தியா 2.1 சதவீதத்துடன் 51-ஆவது இடத்தில் இருப்பதாக சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃப்ராக் தெரிவித்துள்ளது.
- உலக அளவில் மிக முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிகரித்து வருகிறது.
- இந்தப் பட்டியலில் கடந்தாண்டு அக்டோபா்-டிசம்பா் காலாண்டு நிலவரப்படி 59.6 சதவீத விலை அதிகரிப்புடன் துருக்கி முதலிடத்தில் உள்ளது. ஆண்டின் அடிப்படையில் இங்கு வீடுகளின் விலை மின்னல் வேகத்தில் உயா்ந்துள்ளது.
- அதற்கு அடுத்தபடியாக, நியூஸிலாந்து (22.6%), செக் குடியரசு (22.1%), ஸ்லோவேக்கியா (22.1%), ஆஸ்திரேலியா (21.8%) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா 2.1 சதவீத உயா்வுடன் இப்பட்டியலில் 51-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
- கடந்த 2021-இல், மலேசியா, மால்டா, மொரக்கோ நாடுகளின் சந்தைகளில் வீடுகளின் விலை முறையே 0.7%, 3.1% மற்றும் 6.3% குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா - பாகிஸ்தான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்து
- பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு நடக்கிறது.
- இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை பாக். வெளியுறவு அமைச்சர் குரேஷி அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று மாநாட்டில் வாங் யி பங்கேற்றுள்ளார்.
- இந்நிலையில் இஸ்லாமாபாதில் பாக் - சீன வெளியுறவு அமைச்சர்கள் தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இதன்பின் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் 'சீன - பாகிஸ்தான் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது' என கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை - யுஜிசி உத்தரவு
- நாடு முழுவதும் 45 ஒன்றிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 14 பல்கலைக்கழகங்கள் தவிர பிற பல்கலைக்கழங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மாநில கல்வி வாரியங்கள் நடத்தும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டன.
- இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு (சியுஇடி) மூலம் மட்டுமே ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
- இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான கட்டாய பொது நுழைவுத் தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த நுழைவுத் தேர்வை இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, பஞ்சாபி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில் தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.
- நாட்டில் உள்ள அனைத்து ஒன்றிய பல்கலைக்கழகங்களும் இந்தக் கல்வியாண்டு முதல், பொதுவான நுழைவுத் தேர்வின் மூலம் மட்டுமே மாணவர்களைச் சேர்க்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- தேர்வு எழுதுபவர்களுக்கு 27 பாடங்கள் அளிக்கப்படும். அதில் ஆறு பாடங்களைத் தேர்வுசெய்து பதிலளிக்க வேண்டும். மூன்றாவது பிரிவில் பொது அறிவுக் கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
- இந்த பொது நுழைவுத் தேர்வு முன்பே இருப்பதுதான். ஆனால், இதுவரை 14 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இதனை பின்பற்றி வந்தன. புதிய கல்விக் கொள்கையின் கீழ் எல்லா மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய - உஸ்பெகிஸ்தான் கூட்டுப் பயிற்சி
- இந்தியா - உஸ்பெகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையேயான மூன்றாவது கூட்டுப் பயிற்சி மார்ச் 22 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இந்திய ராணுவத்தின் குண்டு வீசும் படைப்பிரிவை உள்ளடக்கிய வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று உஸ்பெகிஸ்தானின் யாங்கியாரிக் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
- இத்தகைய பயிற்சி கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரகண்டில் நடைபெற்றது.
- இரு தரப்பு ராணுவத்தினரும் பயிற்சியின்போது நடைமுறை உத்திகளை பகிர்ந்து கொள்வதும், பின்னர் சிறந்த நடைமுறைகளை கற்றறிவதும் இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமாக உள்ளது.
தில்லி மாநகராட்சி திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தில்லி மாநகராட்சியை ஒன்றிணைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
- தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அடுத்த வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த மசோதா மூலம், தில்லியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- புதிய முதலீட்டுக் கொள்கை 2012-ஐ இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ராசயான் நிறுவனத்தின் (எச்யுஆர்எல்) மூன்று அலகுகளுக்கு அதாவது கோரக்பூர், சிந்ரி, பரவ்னி ஆகியவற்றுக்குப் பொருந்துவதை நீடிப்பதற்கான உரத்துறையின் முன்மொழிவை பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த நிறுவனத்தின் பரவ்னி அலகு ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் நிறுவு திறன் கொண்ட எரிவாயு அடிப்படையிலான புதிய யூரியா உற்பத்தியை தொடங்கி உள்ளது.
- மூன்று எச்யுஆர்எல் யூரியா திட்டங்களின் செலவு ரூ.25.120 கோடியாகும். இந்த மூன்று பிரிவுகளுக்கும் இந்திய எரிவாயு ஆணையம், இயற்கை எரிவாயுவை வழங்கி வருகிறது.
- இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு உரத்தேவையை நிறைவு செய்வது மட்டுமின்றி இந்தப் பிராந்தியத்தில் சாலைகள், ரயில் போக்குவரத்து, துணை தொழில்கள் போன்ற கட்டமைப்பு மேம்பாட்டையும் ஊக்கப்படுத்துகிறது.
- மேலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட 7 மாநிலங்களின் உரத்தேவையை எதிர்கொள்ள உலகின் சிறந்த தொழில்நுட்பங்களுடன் மூன்று அலகுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு 2022-23 ஆண்டில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- வேளாண் உற்பத்திச் செலவு மற்றும் விலைக்கான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி 2022-23ஆம் ஆண்டில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.4,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.250 அதிகமாகும்.
- உற்பத்திச் செலவில் இது சராசரியாக 60.53 சதவீதமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைந்தபட்சமாக 50 சதவீத லாபத்தை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சணல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய விலையை உறுதி செய்யும் வகையில் இந்த விலை நிர்ணய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ஃபேம் இந்தியா 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் 25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 நகரங்களில் மின்சார வாகனங்களுக்காக 2,877 மின்னேற்றி நிலையங்களை அமைப்பதற்கு கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- மேலும், 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1,576 மின்னேற்றி நிலையங்கள் அமைப்பதற்கும் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- மேலும் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டருக்கு ஒரு மின்னேற்றி நிலையமும், கனரக வாகனங்களுக்காக குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டருக்கு ஒரு மின்னேற்றி நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.
- நகரங்களில் குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டருக்கு ஒரு மின்னேற்றி நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.
- ஃபேம் இந்தியா முதல் கட்ட திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி செலவில் மின்சார வாகனங்களுக்காக 520 மின்னேற்றி நிலையம் அமைப்பதற்கு கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது.