இந்திய ஒருங்கிணைந்த சேவை நிறுவனத்தில் ஜெனரல் பிபின் ராவத்தின் சிறப்பு நினைவு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது
- பாதுகாப்புப் படைகளின் மறைந்த தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் 65வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது நினைவாக யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா (யுஎஸ்ஐ) நிறுவனத்தில் சிறப்பு இருக்கையை இந்திய ராணுவம் அர்ப்பணித்துள்ளது.
- 15 மார்ச் 2022 அன்று சவுத் பிளாக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இராணுவத் தலைமைத் தளபதியும், அதிகாரப்பூர்வ தலைவருமான ஜெனரல் எம்.எம்.நரவானே இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டார்.
- முப்படைகளின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 5 லட்ச ரூபாய்க்கான காசோலை மேஜர் ஜெனரல் பி.கே. ஷர்மா (ஓய்வு), இந்திய ஒருங்கிணைந்த சேவை நிறுவனத்தின் இயக்குனர், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தொகை பரிந்துரைக்கப்பட்டவருக்கு கெளரவ முறையில் வழங்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் சாம்சங் கம்ப்ரசர் ஆலை
- பெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காற்றழுத்த கருவிகள் (கம்ப்ரசர்) உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் நிறுவுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு - சாம்சங் நிறுவனம் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- கடந்த 2006-ல் பெரும்புதூரில் சாம்சங் நிறுவனம் ரூ.450 கோடிமுதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், கணினித் திரைகள், குளிர்சாதனம், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் தயாரிக்கும் ஆலையை அமைத்தது. இந்த ஆலையை 2007 நவ.13-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
- இந்நிலையில், தற்போது அடுத்தகட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆண்டுக்கு 80 லட்சம் கம்ப்ரசர்கள் உற்பத்தி செய்யவும், 2024 இறுதிக்குள் 1.44 கோடி உற்பத்தியை எட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
காவிரி, யமுனை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 நதிக் கரைகளில் ரூ.19 ஆயிரம் கோடியில் காடு வளர்ப்பு திட்டம்
- காவிரி, யமுனை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 நதிக் கரைகளில் ரூ.19 ஆயிரம் கோடி செலவில் நதியோர காடு வளர்ப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
- இந்தத் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் துறையும், ஜல் சக்திதுறையும் இணைந்து செயல்படுத்த உள்ளன. ரூ.19 ஆயிரம் கோடி செலவில் 13 பெரிய நதிகளையொட்டி காடு வளர்ப்புத் திட்டம்செயல்படுத்தப்படும்.
- இதன்மூலம் சுமார் 7,417.36 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு நாட்டில் காடுகளின் பரப்பளவு அதிகரிக்கப்படும்.
- காடு வளர்க்கும் திட்டம் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும். மேலும் வண்டல் மண் பிரதேசங்கள் குறைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ரூ.449.01 கோடி மதிப்பிலான மரம் அல்லாத, வனப் பொருட்கள் கிடைக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
ஷாட்கன் உலகக் கோப்பை 2022
- சைப்ரஸின் நிகோசியாவில் ஷாட்கன் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்திய ஆடவர் அணி போலந்து, துருக்கி அணிகளைப் பின்னுக்குத் தள்ளி வெள்ளிப் பதக்கம் வென்றது.
- பிருத்விராஜ் தொண்டைமான், விவான் கபூர் மற்றும் ஜோரவர் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 214 புள்ளிகளைக் குவித்தது. ஆனால் குவைத் அணி இந்தியாவை விட வெறும் 3 புள்ளிகள் மட்டும் அதிகம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
- ஆனால் போலந்து, துருக்கி அணிகளை விட அதிக புள்ளிகள் பெற்றதால் இந்தியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. மூன்றாவது இடத்தை பிடித்த போலந்து அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. 208 புள்ளிகளை போலந்து அணி பெற்றிருந்தது. 4 வது இடத்தை 207 புள்ளிகளுடன் துருக்கி அணி பிடித்தது.
21 தமிழறிஞர்களுக்கு விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2022ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கல் நடைபெற்றது. இதில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றிய தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்தார். தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், மாத இதழ் என மொத்தம் 21 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.