மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை ஆட்சியருக்கு முதல்வர் விருது
- சிவகங்கையில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்பில் தலா ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டை ரூ.1.5 லட்சத்துக்கு 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுத்தார்.
- அதேபோல் மாநிலத்திலேயே முதன்முறையாக இளையான்குடி அருகே கீழாயூர் பகுதியில் வீடற்ற 130 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.
- மேலும் அப்பகுதியில் பள்ளி, ரேஷன் கடை போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன. மாவட்டத்தில் தேசிய ஊன முற்றோர் அடையாள அட்டைகளை அதிகளவில் வழங்கியது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் முகாம்களை நடத்தி ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது போன்றவற்றில் மாவட்ட ஆட்சியர் சிறப்பாகச் செயல்பட்டார்.
- இதையடுத்து அவருக்கு 2021-ம் ஆண்டுக்கு மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட ஆட்சியருக்கான விருது கிடைத்துள்ளது.
பி.எஃப் வட்டி விகிதம் 8.1 சதவீதமாகக் குறைப்பு
- மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் சனிக்கிழமை குவஹாட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் 8.1 சதவீத வட்டி அளிப்பது என முடிவு செய்து அதை பரிந்துரைத்துள்ளது.
- நாட்டின் வங்கியல்லாத மிகப் பெரிய நிதி நிர்வகிக்கும் அமைப்பாக பிஎஃப் அறக்கட்டளை திகழ்கிறது. இந்த அமைப்பு ரூ. 16 லட்சம் கோடியை நிர்வகிக்கிறது. இந்த பரிந்துரையை நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கும்.
அமெரிக்க அரசின் நெதர்லாந்து துாதராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்
- அமெரிக்க அரசின் முக்கிய பதவிகள் மற்றும் வெளிநாட்டு துாதரக நியமனங்கள் குறித்த அறிவிப்பை, அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார்.
- ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கான தன் துாதராக, ஷெபாலி ரஸ்தான் துகால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
- காஷ்மீரில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய ஷெபாலி ரஸ்தான் துகால், நியூயார்க் பல்கலையில் எம்.ஏ., அரசியல் படித்தவர். சான் பிரான்சிஸ்கோவின் பெண்கள் உரிமை கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.
- ஜனநாயக கட்சி தேசிய குழுவின் நிதிப் பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்தவர். இரு குழந்தைகளுக்கு தாயான ஷெபாலி பல்வேறு அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்.
- இவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் அதிபர் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினராக இருந்தவர்.
சூரிய மின் சக்தி திட்டம் இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம்
- நம் அண்டை நாடான இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலையில், 100 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்தியாவின் தேசிய அனல் மின் நிறுவனமும், இலங்கையின் சிலோன் மின் வாரியமும் இணைந்து திரிகோணமலை மின் நிறுவனம் வாயிலாக, சம்பூரில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளன; இதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
சிலியின் மிக இளைய அதிபா் பொறுப்பேற்பு
- தென் அமெரிக்க நாடான சிலியின் மிக இளைய அதிபராக கேப்ரியல் போரிக் பதவியேற்றுக் கொண்டாா். இடதுசாரி ஆதரவாளரான அவருக்கு தற்போது 36 வயதே ஆகிறது.
- 17 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த சிலி, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியபோது கேப்ரியலுக்கு வெறும் நான்கே வயதாகியிருந்தது.
- சிலியின் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அவா் அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிபா் தோதலின் இரண்டாவது சுற்றில் கன்சா்வேடிவ் கட்சியைச் சோந்த அன்டோனியோ காஸ்டைத் தோற்கடித்து 56 சதவீத வாக்குகளுடன் கேப்ரில் போரிக் வெற்றி பெற்றாா்.
4 கரீபியன் நாடுகள் மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஆன்டிகுவா & பார்படா, டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் ஆகிய 4 கரீபியன் நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்கள் சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் வரலாற்று தருணத்தில் பங்கெடுத்தனர்.
- புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் மேற்கண்ட 4 நாடுகளின் வேளாண் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் சுகாதார துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.
- 4 நாடுகளின் தலைவர்களுக்கும் கரீபியன் நாடுகளின் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் அடங்கிய புத்தகத்தை சத்குரு வழங்கினார்.
- இதில் கூறப்பட்டுள்ள தீர்வுகள் சர்வதேச விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி அந்தந்த நாடுகளின் தட்பவெப்ப சூழல் மற்றும் வேளாண் முறைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மகளிர் உலகக் கோப்பை - புதிய உலக சாதனைகளை படைத்த மிதாலி, ஜூலன் கோஸ்வாமி
- நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி இருவரும் புதிய உலக சாதனைகளை படைத்துள்ளனர்.
- மிதாலி இன்றைய ஆட்டத்தின் மூலம் 24 உலகக் கோப்பை போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு பெலின்டா கிளார்க் சாதனையை முறியடித்துள்ளார்.
- ஏற்கெனவே, ஆறு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற சிறப்பையும் மிதாலி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜூலன் கோஸ்வாமி ஐந்து உலகக் கோப்பை தொடர்களிலும் சேர்த்து மொத்தம் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை லின் புல்ஸ்டன் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது.
என்.எல்.சி., சுரங்கங்களுக்கு நான்கு தேசிய விருது
- இந்தியாவில் செயல்படும் சுரங்கங்களில், விபத்தைக் குறைத்து, உற்பத்தியை மேம்படுத்த, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், விபத்தின்றி பணியாற்றும் சுரங்கங்களுக்கு தேசிய பாதுகாப்பு விருதுகளை வழங்குகிறது.
- கடந்த 2018,- 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான பாதுகாப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி புதுடில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது.
- இதில், என்.எல்.சி., முதல் சுரங்கம், "மிகக்குறைவான விபத்துடன் செயல்பட்ட சுரங்கம்" என்ற பிரிவின் கீழ் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளின் முதல் பரிசை பெற்றது.
- என்.எல்.சி.,இரண்டாவது சுரங்கம், 'நீண்ட நாள் விபத்தின்றி செயல்பட்ட சுரங்கம்' என்ற பிரிவில் 2020 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது.
- இவ்விருதுகளை, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் பங்கேற்று வழங்கினார்.
காந்தி நகரில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக புதிய கட்டட வளாகத்தை மோடி தொடங்கி வைத்தார்
- குஜராத் மாநிலம், காந்திநகர் அருகே உள்ள லவாட் கிராமத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
- தேசிய பாதுகாப்பு மற்றும் காவல்துறைக்கான கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மாற்றத்தினை நோக்கமாகக் கொண்ட இந்த பல்கலைக்கழகம், இந்திய நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம்.
- இந்த பல்கலைக்கழகத்தின் புதிய கட்டட வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.