- தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியிடங்களை நிரப்பும் தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த காலகட்டத்தில் 2,000 காலியிடங்கள், ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வின் 'ரிசர்வ்' பட்டியல் அடிப்படையில் நிரப்பப்பட்டன.
- இதையடுத்து, 7,382 காலியிடங்களை நிரப்ப, அரசின் பல்வேறு துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்த காலியிடங்களில் 81 இடங்கள் விளையாட்டுப் பிரிவில் ஒதுக்கப்படும்.
- மீதமுள்ள 7,301 காலியிடங்கள் மட்டும் போட்டி தேர்வு வழியே நிரப்பப்படும். இதற்கான குரூப் - 4 தேர்வு, ஜூலை 24ல் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது; ஏப்., 28 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
- தேர்வின் முடிவுகள் அக்டோபரில் வெளியாகும். நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த தேர்வுக்கு 25 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
- குரூப் - 4 தேர்வில் 5,255 இடங்கள் நிரப்பப்படும் என, ஆண்டு நியமன உத்தேச பட்டியலில் அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது அதை விட அதிகமான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- இதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரிய பணிகளுக்கு, முதல்முறையாக டி.என்.பி.எஸ்.சி., வழியே, இளநிலை உதவியாளர், 64. வரி தண்டலர், 49; தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர், 7; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் இளநிலை உதவியாளர், 43 என, 163 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- மற்ற துறைகளில், கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., 274; இளநிலை உதவியாளர், 3,681; வரி வசூலிப்பவர், 50. தட்டச்சர், 2,108; சுருக்கெழுத்து தட்டச்சர் மூன்றாம் நிலையில், 1,024; ஸ்டோர் கீப்பர், 1 என, மொத்தம், 7,301 இடங்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது.
- தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடக்காத அளவுக்கு, தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- ஜூன் 19ம் தேதி நடக்க உள்ள, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான தேர்வு, சோதனை ரீதியாக கணினி வழி தேர்வாக நடத்தப்படும்.
- அதன்பின், குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் உள்ள தேர்வுகள், கணினி வழி தேர்வாக நடத்த பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- ஜூலை 24 காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில், 'மல்டிபிள் சாய்ஸ்' வகையாக இருக்கும்.
- இந்த கேள்விகள் தமிழில் மட்டுமே இடம் பெறும். அடுத்த பிரிவில், 75 கேள்விகள், பொதுப்பாட வகையிலும்; 25 கேள்விகள், திறனறிதல் வகையை சேர்ந்ததாகவும் இருக்கும்.
- இரண்டாவது பிரிவில், ஆங்கிலம் மற்றும் தமிழில் கேள்விகள் இடம் பெறும். மொத்தம் 200 கேள்விகளும் ஒரே வினாத்தாளில் இடம் பெறும்.
- இதற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தின் அடிப்படையில், தமிழ் கேள்விகள் அடங்கிய 'அ' பிரிவில், மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, 40 சதவீதமான 60 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தேர்வர்களின் அடுத்த வினா பிரிவுக்கான விடைகள் மதிப்பீடு செய்யப்படும்.
- தமிழ் கட்டாய தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தமிழ் உட்பட அனைத்து பிரிவு கேள்விகளுக்குமான மொத்த மதிப்பெண்கள், தரவரிசை பட்டியலுக்கு கணக்கில் எடுக்கப்படும். இந்த தேர்வில் மொத்தம், 300க்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியாகும்.
- தேர்ச்சி பெற்றவர்களில் அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, அரசின் இட ஒதுக்கீடு விதிகளின்படி, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி நியமனம் வழங்கப்படும்.