உக்ரைன் விவகாரம் - ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
- கடந்த 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. அந்த நாடு ரஷியாவின் அண்டை நாடாக உள்ளது.
- இந்நிலையில் 30 நாடுகள் அடங்கிய நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.
- இதனிடையே, உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் வசம் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை அறிவித்தாா்.
- அதனைத்தொடா்ந்து, அவ்விரு பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணியை மேற்கொள்ள ரஷிய படையினரை அனுப்பவும் அவா் உத்தரவிட்டாா்.
- இதற்குப் பலத்த எதிா்ப்பு தெரிவித்து ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
உலகின் அழகிய 'எதிர்கால அருங்காட்சியகம்' கட்டடம் திறப்பு
- துபாயில் மிகப் பிரமாண்டமான 'எதிர்கால அருங்காட்சியகம்' திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த துபாயில், 'புர்ஜ் கலிபா' என்ற உலகின் மிக உயரமான வர்த்தக கட்டடம் உள்ளது.
- இதையடுத்து, உலகிலேயே மிக அழகான கட்டடம் என்ற சிறப்பை எதிர்கால அருங்காட்சியகம் பெற்றுள்ளது.ஷான் கில்லா என்ற கட்டடக் கலை வல்லுனர் வடிவமைத்த இந்த அருங்காட்சியகத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீம் அல் மக்தும் திறந்து வைத்தார்.
- திறப்பு விழாவின்போது வாண வேடிக்கை, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. லேசர் ஒளிக்காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தன.
- 3.23 லட்சம் சதுர அடி பரப்பில், 252 அடி உயர கோள வடிவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை கட்டி முடிக்க, ஒன்பது ஆண்டுகள் ஆகின.
- இந்த கட்டடம், 'ரோபோ' க்கள் வாயிலாக, உருக்கில் செய்த 1,024 கலை வடிவங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் எதிர்கால வாழ்க்கை குறித்த புதிய சிந்தனைகளுடன் எண்ணற்ற புதுமை பொருட்கள் இங்கு வைக்கப்பட்டு உள்ளன.
- ஆண்டுக்கு, 4,000 மெகாவாட் சூரிய மின்சக்தியில் இந்த அருங்காட்சியகம் இயங்க உள்ளது. இங்குள்ள இரண்டு தளங்கள், கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடத்த ஒதுக்கப்பட்டுள்ளன. துபாயின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லாக, மிக அழகான கட்டடம் திகழப் போகிறது.
- பிஏஜேஎஸ்எஸ் அமைப்பை என்டிஆர்ஐ-யின் வள மையமாக்க, புதுதில்லியில் உள்ள தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாரதீய ஆதி பழங்குடியினர் சேவா அமைப்பு பிஏஜேஎஸ்எஸ் இடையே, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா முன்னிலையில், 21 பிப்ரவரி 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்திய கடற்படை மேற்கொள்ளும் மிலன்- 2022 கூட்டுப் பயிற்சி, விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 25ம் தேதி தொடங்குகிறது. இதில் 40 நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் அதிகாரிகளின் குழுவினர் கலந்து கொள்கின்றனர்.
- 9 நாட்களில் 2 கட்டங்களாக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. பிப்ரவரி 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் முதல் கட்ட பயிற்சி நடக்கிறது. கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட பயிற்சி மார்ச் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
- 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்தியா, மிலன் 2022 பயிற்சி மூலம் தனது சாதனையை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளது.
- இந்தாண்டு மிலன் கூட்டுப் பயிற்சியின் கருப்பொருள் தோழமை, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை ஆகும். இந்தியாவை பொறுப்புள்ள கடல்சார் நாடாக உலக நாடுகளுக்கு காட்சிப்படுத்துவது தான், இந்த பயிற்சியின் நோக்கம். இந்த பயிற்சி மூலம் நட்பு நாடுகளின் கடற்படை திறன்கள் மேம்படுத்தப்படும்.
- இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மிலன் கூட்டுபயிற்சி முதன்முதலில் கடந்த 1995ம் ஆண்டு அந்தமான் மற்றும் நிகோபார் கடற்படை கட்டுப்பாட்டு மையத்தால் ஏற்படுத்தப்பட்டது.
- கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மிலன் கூட்டு பயிற்சி, கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டுக்கு ஒத்தி போடப்பட்டது.
- ஆரம்பத்தில் இந்தோனேஷியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே இந்த பயிற்சியில் பங்கேற்றன. கிழக்கு கொள்கை, சாகர் திட்டம் மூலம் தற்போது இந்த பயிற்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- கடந்த 2014ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயிற்சியில் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 14 நாடுகள் பங்கேற்றன.
- தற்போது இந்த மிலன் கூட்டு பயிற்சி மேலும் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது 40 நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் குழுவினர் இந்தாண்டு மிலன் கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
- கடற்சார் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கிலும் பல நாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.