நிலவில் தண்ணீர் ஆதாரம் சீன விண்கலம் கண்டுபிடிப்பு
- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சாங்கே-5 என்ற விண்கலத்தை 2020, நவம்பரில் சீனா அனுப்பியது. நிலவின் மத்திய உயர் அட்சரேகை பகுதியில் தரையிறங்கிய அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள ஒரு கருவி, தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. பின்னர், 1,731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்குத் திரும் பியது.
- அந்தப் பாறை மாதிரியை சீன அறிவியல் அகாதெமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் முடிவுகள் 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியாகியுள்ளது.
- அதன்படி, நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு காரணம் சூரிய காற்று ஆகும்.
சீக்கிய குரு கோவிந்த் சிங் மகன்களின் நினைவாக டிச. 26-ம் தேதி வீர் பால் தினம் கொண்டாடப்படும் - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
- சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங். இவரது தந்தையும் சீக்கியர்களின் 9-வது குருவுமான தேக் பகதூர் காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்புக்காக போராடினார். இதன்காரணமாக அப்போதைய முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கொலை செய்யப்பட்டார்.
- இதைத் தொடர்ந்து 9-வது வயதில் 10-வது சீக்கிய குருவாக கோவிந்த் சிங் பொறுப்பேற்றார். இவருக்கு 4 மகன்கள். இதில் 5, 8 வயதான மகன்களை முகலாய ஆட்சியாளர்கள் சிறை பிடித்து உயிரோடு சுவரில் புதைத்தனர். 13, 17 வயது மகன்கள் முகலாய படையுடனான போரில் உயிரிழந்தனர்.
- கடந்த 1708-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி மகாராஷ்டிராவில் முகாமிட்டிருந்த குரு கோவிந்த் சிங், முகலாய உளவாளிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
- குரு கோவிந்த் சிங் மகன்களின் உயிர்த் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26-ம் தேதி வீர் பால் திவஸ் தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
சீனாவில் செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி துணை தலைவரானார் உர்ஜித்
- கடந்த 2016ம் ஆண்டு ரகுராம் ராஜன் ஓய்வு பெற்ற பிறகு, ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றவர் உர்ஜித் படேல். இவர் தனது பதவிக்காலம் முடியும் முன்பாக கடந்த 2018ம் ஆண்டு. சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார்.
- இந்நிலையில், உர்ஜித் படேல் தற்போது ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஏஐஐபி வங்கி சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடன் வழங்கி வருகிறது.
- இந்த வங்கியை உருவாக்கிய உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த வங்கியில் சீனா 26.06 சதவீத பங்குகளையும், இந்தியா, 7.5 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் 2022
- ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்-1 தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோகன் போபண்ணா - ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- இறுதிப் போட்டியில் குரோஷியாவின் இவான் டோடிக் - மார்செலோ மெலோ (பிரேசில்) முதல் நிலை ஜோடியுடன் நேற்று மோதிய இந்திய இணை 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று கோப்பையை முத்தமிட்டது.
- இதே தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எலனா ரிபாகினாவை (கஜகஸ்தான்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
- மெல்போர்ன் சம்மர் செட்-1 தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குடெர்மடோவாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 14 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
- மெல்போர்ன் சம்மர் செட் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மேக்சிம் கிரெஸ்ஸியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
- இப்போட்டி 1 மணி, 44 நிமிடத்துக்கு நீடித்தது. நடால் 2004ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஏடிபி டூர் லெவல் போட்டியில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுத்துறையின் ஐஜியாக பெண் நியமனம்
- தமிழக காவல்துறையைச் சேர்ந்த 14 உயரதிகாரிகளுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஒரு முக்கியப்பிரிவு.
- அதில் அதிக அனுபவமும், திறமையும் கொண்டவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறையின் பெண் ஐஜி என்ற சாதனையை ஆசியம்மாள் படைத்துள்ளார்.
- தற்போது 56 வயதான ஆசியம்மாள் தூத்தக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் குரூப் 1 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்தார். படிப்பில் மிகவும் தேர்ந்தவரான ஆசியம்மாள் எம்.எஸ்.சி., எம்.டெக். எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார்.
சர்வதேச மலர் ஏல மையம் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம் 20.2 கோடி ரூபாயில், சர்வதேச மலர் ஏல மையம் கட்டும் பணி துவங்கியது.
- கடந்தாண்டு நவ., 1ல் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.இதையடுத்து சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொலி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் ஏல மையத்தை திறந்து வைத்தார்.