வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி முருகன் நியமனம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை எட்டும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அனைத்து மக்களும் வாங்கத்தக்க விலையில் வீடுகளை வழங்கி வருகிறது.
- வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் வீட்டுக் கனவை நனவாக்கியுள்ளது.
- அத்தகு சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி எஸ்.முருகனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- இவர் ஏற்கெனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக் குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவும் வகையில், குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடனுதவித் திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
- இந்த அமைப்பின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், அதன் தலைவராக துறைமுகம் காஜா (எ) காஜா முகைதீனை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கருணாநிதி செம்மொழி தமிழ் விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- 2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் விருதுகள் வழங்கப்பட்டது.
- மேலும், விருதுகள் பெற்றவர்களுக்கு விருதுடன் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுடன், கலைஞர் கருணாநிதி அவர்களின் சிறிய அளவிலான சிலையும் வழங்கப்பட்டது.
- அதில் பேராசிரியர்கள் கோதண்டராமன், சுந்தரமூர்த்தி, மருதநாயகம், மோகனராசு, மறைமலை இலக்குவனார், ராஜன், உல்ரிக் நிக்லாஸ் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர். விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- தமிழுக்கும், தமிழறிஞர்களுக்கும் பெருமை சேர்த்தது திமுக ஆட்சிதான். பெரும்பாக்கத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படும். மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை இனி செம்மொழி சாலை என்று அழைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- ஜம்மு & காஷ்மீர் அரசின் ஒத்துழைப்புடன், டிஏஆர்பிஜி தயாரித்துள்ள இந்தியாவின் முதலாவது மாவட்ட சிறந்த நிர்வாக குறியீட்டை, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா முன்னிலையில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிடுகிறார்.
- ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக மாதிரியின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாவட்ட அளவிலான சிறந்த நிர்வாகத்துக்கு அடிப்படையாகக் கொள்ளும் அளவுக்கு இது இருக்கும்.
- 2021 டிசம்பர் 25-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்ட தேசிய சிறந்த நிர்வாக குறியீட்டில், ஜம்மு காஷ்மீர் 3.7 % வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. வர்த்தகம் மற்றும் தொழில், வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள், பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் போன்றவற்றிலும் சிறப்பான செயல்திறனைக் காண முடிந்தது.
- இதன் அடிப்படையில் இந்த குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள இது வழிவகுக்கும்.
- அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்
- அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
- தங்கள் மாவட்டங்களின் செயல் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் தங்களின் அனுபவங்களை மாவட்ட ஆட்சியர்கள் பகிர்ந்து கொண்டனர். மாவட்டங்களில் வெற்றியைத் தருகின்ற முக்கியமான நடவடிக்கைகள் பற்றியும், இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் பிரதமர் நேரடியாக கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
- 2022 ஜனவரி 21 அன்று இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், அமெரிக்காவின் எரிசக்தி துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தின் மூலம் கரியமில வாயுவை சேகரிப்பது மற்றும் பயன்பாட்டுத் தீர்வுகளின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் விவாதித்தனர்.
- கரிய மில வாயு வெளியேறாத நாடுகள் என்ற இலக்கை எட்டுவதற்கான தொழில்நுட்ப முயற்சிகளில் ஒத்துழைப்பதற்கு தொடர்ச்சியாக பயிலரங்குகளை நடத்த இந்தியாவும், அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இதன்படி 2022 ஜனவரி 21 தொடங்கி, பிப்ரவரி 25 வரை இத்தகைய பயிலரங்குகள் நடத்தப்பட உள்ளன.