ரயில்வே கார்டு பதவிகள் 'ரயில் மேலாளர்' என மாற்றம்
- பொது மற்றும் துணை விதிகளில் ஒரு ரயில்வே கார்டு அந்த ரயிலின் மேலாளர் என குறிப்பிடுவதுதான் முறையானது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- அசிஸ்டென்ட் கார்டு என்று அழைக்கப்பட்டவர் இனிமேல் அசிஸ்டென்ட் பயணிகள்ரயில் மேலாளர் எனவும் கூட்ஸ் கார்டு என்று அழைக்கப்பட்டவர் கூட்ஸ் ரயில் மேலாளர் எனவும் அழைக்கப்படுவார்.
- அதுபோல், சீனியர் கூட்ஸ் கார்டு, சீனியர் ரயில் மேலாளர் என்றும், சீனியர் பயணிகள் கார்டு என்று அழைக்கப்பட்டவர் சீனியர் பயணிகள் ரயில் மேலாளர் என்றும், விரைவு ரயில் கார்டு என்று அழைக்கப்பட்டவர் விரைவு ரயில் மேலாளர் என்றும் அழைக்கப்படுவார்கள்.
ஜன., 16 ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் - பிரதமர் அறிவிப்பு
- புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக 'ஸ்டார்ட் அப்' என்ற திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு தொடங்கியது.
- இந்நிலையில், ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் உருவாகி உள்ள புதிய தொழில் முனைவோருடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
- அப்போது அவர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆனவுடன் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோரின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இந்தியாவுக்காக கண்டுபிடியுங்கள்.
- இந்தியாவில் இருந்து கொண்டே கண்டுபிடியுங்கள். தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் அரசின் நிர்வாக நடைமுறைகளால் காலதாமதம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வந்தனர்.
- இந்த சிக்கல்களை அகற்றுவதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய தொழில் முனைவோர்களே புதிய இந்தியாவின் முதுகெலும்பாக மாற இருக்கிறார்கள். ஸ்டார்ட் அப் என்பது கண்டுபிடிப்பு என்பது மட்டுமில்லாமல், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் பங்காற்றுகிறது.
- இந்த ஆண்டு தொழில் முனைவோர்களுக்காக, பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். இனி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16ம் தேதியில், 'தேசிய ஸ்டார்ட் அப் தினம்' கொண்டாடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
சிவகங்கை அருகே 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
- சிவகங்கை அருகே ஏரியூர் பகுதியிலுள்ள ஆகாசப்பாறையை, பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், பள்ளி மாணவன் தருனேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தபோது அங்கு சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
- அதே காலத்தை சேர்ந்த காவி நிற மனித உருவம் சிவகங்கை அருகே ஏரியூர் மலையின் தென் திசையில் காணப்படும் ஆகாசப்பாறை பகுதியிலுள்ள ஒரு பாறையில் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.
- கிமு 7ம் நூற்றாண்டு முதல் கிமு 3ம் நூற்றாண்டு வரை பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. பழங்கால மனிதன் வாழ்ந்த ஒரு குகையின் உள்ளே ஓவியங்கள் காவி நிறத்தில் காணப்படுகின்றன.
- இங்கு ஆதிமனிதன் வாழ்ந்த குகை, பாறை ஓவியங்களோடு, 10க்கும் மேற்பட்ட மருந்துக்குழிகளும் உள்ளன. இந்த குழிகள் சற்றே சிறியளவில் உள்ளது.
- மலையில் கிடைத்த மூலிகைகளை, இந்த குழிகளில் இடித்து, மருத்துவம் செய்து வந்திருக்கலாம். சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாகவும் கருதலாம்.
முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக்கிற்கு இங்கிலாந்தில் சிலை
- தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, 'கர்னல் ஜான் பென்னிகுக்கின்' புதிய சிலையை, அவரது பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15 அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
- கர்னல் ஜான் பென்னிகுக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான லண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்.
தேசிய பாதுகாப்பு கொள்கை வெளியிட்டார் பாக்., பிரதமர்
- பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை அந்நாட்டு பிரதமர் இம்ரான் வெளியிட்டார். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இதற்கு முன் இருந்த அரசுகள் தோல்வியடைந்தன.
- இப்போது வெளியிடப்பட்டுள்ள 100 பக்கங்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு கொள்கை மக்கள் நலன், பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை முக்கியமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
- இதுவரை ராணுவ பலத்தை மட்டும் முக்கியமாக வைத்து, தேசிய பாதுகாப்பு கொள்கை இருந்து வந்துள்ளது.அண்டை நாடுகளுடன் அமைதி, பொருளாதாரம், வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்துவதுதான் புதிய பாதுகாப்பு கொள்கையில் நோக்கமாக இடம் பெற்றுள்ளது.
குடியரசு தின கொண்டாட்டம் இனி ஜனவரி 23ம் தேதியில் தொடங்கும் - மத்திய அரசு அறிவிப்பு
- ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், இது தொடர்பான கொண்டாட்டங்களை மத்திய அரசு ஜனவரி 24ம் தேதியே தொடங்கி விடும் என்பது அனைவரும் அறிந்ததே.
- இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் தேதி மாற்றப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு ஜனவரி 24ம் தேதிக்கு பதிலாக, ஒரு நாள் முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021-ஐ, 46 தொடக்க நிறுவனங்கள் வென்றன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார்.
- 74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் இன்று கொண்டாடியது. கடைசி பிரிட்டிஷ் தலைமை கமாண்டர் சர் எப்ஆர்ஆர் புச்சரிடமிருந்து, இந்திய ராணுவத்தின் பொறுப்பை ஜெனரல் கே.எம். கரியப்பா (பீல்டு மார்ஷல்) ஏற்றுக்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை கமாண்டரானதை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 15ம் தேதி, ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
- இந்திய ராணுவத்தின் 2022ம் ஆண்டின் கருப்பொருள் “எதிர்காலத்துடனான பயணம்”. இது நவீன போர் முறையில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு அதிகரிப்பதை அங்கீகரிப்பதாகும்.
- ராணுவ தின கொண்டாட்டங்கள், தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதுடன் தொடங்கியது.
- தில்லி கன்டோன்மென்ட் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடந்த ராணுவ தின அணிவகுப்பு மரியாதையையும் ராணுவ தளபதி ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு 15 சேனா பதக்கங்களையும் அவர் வழங்கினார்.
- இந்தாண்டு ராணுவ தின அணிவகுப்பு, இந்திய ராணுவத்திடம் உள்ள பல்வேறு ஆயுதங்களை காட்சிப்படுத்தியது. புதிய மற்றும் நவீன ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
- சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விருது பெற்ற வீரர்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். ராணுவத்தினருக்கான புதிய சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது.