மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு
- மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 2021 - 2022 ஆண்டிற்கு 73 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.
- முந்தைய ஆண்டைவிட குறைவாக ஒதுக்கப்பட்டதால் கூடுதல் நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு கூடுதலாக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
'இன்டர்போல்' அமைப்பின் தலைவராக ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த ஐ.ஜி., மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல்ரைசி
- மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 'இன்டர்போல்' எனப்படும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச போலீஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த அமைப்பின் தலை வராக உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் யாங்கின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
- புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பொதுக் கூட்டத்தின்போது நடந்தது. அதனுடன், துணைத் தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்
- இதில் இன்டர்போல் அமைப்பின் புதிய தலைவராக ஐக்கிய அரபு எமிரேட்சின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றி வரும் ஐ.ஜி., மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல்ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்நிலையில் இன்டர்போல் அமைப்பின் அமெரிக்காவுக்கான துணைத் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த வால்டேசி உர்குவிஸா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஆப்ரிக்காவுக்கான துணைத் தலைவராக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கார்பா பாபா உமர் தேர்வாகி உள்ளார். இன்டர்போல் அமைப்பின் நிர்வாக குழுவுக்கான ஆசிய பிரதிநிதியாக, நம் நாட்டின் சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் பிரவீன் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
- உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம் புத்த நகர் ஜெவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு (NIA) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
- இந்திய தலைநகர் டெல்லிக்கு அருகில் உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் உள்ள ஜேவாரில், இந்த விமான நிலையம் அமையவுள்ளது.
- 'நொய்டா சர்வதேச விமான நிலையம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம், 2024ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
- இந்த சர்வதேச விமான நிலைய திட்டத்தை சூரிச் சர்வதேச விமான நிலைய நிறுவனம் செயல்படுத்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் ரக ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையுடன் இணைப்பு
- ஒன்றிய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்கார்பியன் வகையை சேர்ந்த 6 நீர்மூழ்கி கப்பலை கட்ட திட்டமிடப்பட்டது.
- அதன்படி இந்தியா - பிரான்ஸ் கூட்டணியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் வகையை சேர்ந்த கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகிய 3 நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
- இந்நிலையில் ஸ்கார்பியன் ரகத்தை சேர்ந்த 4வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வேலா நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.
- மும்பை கடற்படை தளத்தில், கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் முன்னிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
- மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளை உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்க ஆதரவளிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறைக்கு உட்பட்ட தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான ஆட்டோமோடிவ் எனர்ஜி மெட்டீரியல்ஸ் இன்டர்நேஷனல் (ஏஆர்சிஐ) நிறுவனம், பெங்களூருவைச் சேர்ந்த Nsure Reliable Power Solutions Ltd., உடன் 25-11-2021 அன்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
- தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பயிற்சி வழங்க இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் சூரிய சக்தி தெரு விளக்குகளில் லித்தியம் அயன் பேட்டரி பயன்பாடு வெற்றி பெற்றதையடுத்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு நடைபெறும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ விழாவைக் கொண்டாடும் வகையில் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம் - பொம்மைகளுடன் பாதுகாப்பாக விளையாடுவோம்’ என்ற தலைப்பில் வெபினாருக்கு (இணையவழி கருத்தரங்கிற்கு) இந்தியத் தரநிலைகள் குழு (BIS) ஏற்பாடு செய்திருந்தது.
- பொம்மைகளின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பொம்மைகளின் சோதனை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- பொம்மைகளைத் தரப்படுத்துதல் குறித்து BIS எடுத்துவரும் நடவடிக்கைகள், பொம்மைத் தொழில் துறை ஒழுங்குமுறையின் முக்கியத்துவம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொம்மைகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் மற்றும் பொம்மைகள் உற்பத்தித் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள்/புதுமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய இணைய பரிமாற்ற அமைப்பால் இணைந்து நடத்தப்படும் இணைய ஆளுமை மன்றம் 2021-ஐ மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
- மூன்று நாட்கள் நடைபெறும் இணைய ஆளுமை குறித்த இந்த காணொலி நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், செயலாளர் திரு அஜய் பிரகாஷ் சாவ்ஹ்னே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.