பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை (PMGKAY) மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்
- கொவிட்-19-க்கான பொருளாதார எதிர்வினையின் ஒரு பகுதியாகவும், பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை (PMGKAY- பகுதி V) மேலும் நான்கு மாதங்களுக்கு, அதாவது 2021 டிசம்பர் முதல் 2022 மார்ச் வரை, நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த முடிவின் படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (அந்த்யோதயா உணவு திட்டம் மற்றும் முன்னுரிமை குடும்பங்கள்) கீழ் வரும் அனைத்துப் பயனாளிகளுக்கும், நேரடிப் பலன் பரிமாற்றத்தின் கீழ் உள்ளவர்கள் உட்பட, ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கல் இலவசமாக வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் முறையே ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலும், ஜூலை முதல் நவம்பர் 2020 வரையிலும் செயல்படுத்தப்பட்டன.
- திட்டத்தின் மூன்றாம் கட்டமானது மே முதல் ஜூன் 2021 வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நான்காம் தற்போது ஜூலை-நவம்பர், 2021 மாதங்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான ஐந்தாவது கட்டத்திற்கான கூடுதல் உணவு மானியமாக ரூ. 53344.52 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்டத்திற்கான உணவு தானியங்களின் மொத்த வெளியீடு சுமார் 163 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும்.
- ஒட்டுமொத்தமாக, பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்ட கட்டம் 1 முதல் 5 வரை அரசுக்கு சுமார் ரூ.2.60 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ-வில் மின்சார விநியோகம் மற்றும் சில்லரை வர்த்தகத்தை தனியார்மயமாக்குவதற்காக நிறுவனம் (சிறப்பு காரணத் திட்டம்) ஒன்றை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த தனியார் மயமாக்கல் நடவடிக்கை, தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ-வில் உள்ள 1.45 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு மேம்பட்ட சேவையை வழங்குவதுடன் இயக்க மேம்பாடு மற்றும் விநியோக செயல் திறனை மேம்படுத்துவதுடன் நாடு முழுவதும் பின்பற்றத்தக்க முன்மாதிரியை ஏற்படுத்தும்.
- இது மின்சாரத் தொழிலில் போட்டியை அதிகரித்து வலுப்படுத்த வகை செய்வதுடன், நிலுவைத் தொகையை வசூலிக்கவும் வகை செய்யும். கட்டமைப்பு சீர்திருத்தங்கள் வாயிலாக இந்தியாவை தற்சார்பு அடைந்த நாடாக மாற்ற, ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ இந்திய அரசால் மே 2020-ல் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின்படி, தனியார் மயமாக்கல் மூலம் யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகம் மற்றும் சில்லரை விற்பனையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
- தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ மின்சார விநியோக கழகம் என்ற பெயரில், முற்றிலும் அரசுக்கு சொந்தமான ஒரே விநியோக நிறுவனம் மற்றும் அறக்கட்டளை(கள்) ஏற்படுத்தப்பட்டு, புதிதாக தொடங்கப்படும் நிறுவனத்திற்கு மாறுதல் செய்யப்படும் பணியாளர்களின் காலமுறை பலன்கள் நிர்வகிக்கப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில், பெருங்கடல் சேவைகள், மாதிரியாக்கம், பயன்பாடு, வளங்கள் மற்றும் தொழில்நுட்பம் (O-SMART) எனப்படும் மூலத் திட்டத்தை, 2021-26 ஆம் ஆண்டு வரை ரூ.2,177 கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- பெருங்கடல் தொழில்நுட்பம், பெருங்கடல் மாதிரியாக்கம் மற்றும் ஆலோசனை சேவைகள் (OMAS), பெருங்கடல் கூர்நோக்கு கட்டமைப்பு (OON), பெருங்கடல் உயிர்வாழா வளங்கள், ஆழ்கடல் உயிர்வாழ் வளங்கள் மற்றும் சூழலியல், கடலோர ஆராய்ச்சி மற்றும் செயல்பாடு மற்றும் ஆராய்ச்சிக் கலன்கள் பராமரிப்பு போன்ற ஏழு துணைத் திட்டங்களை உள்ளடக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
- அடுத்த ஐந்தாண்டுகளில் (2021-26) இந்த திட்டம் ஆழ்கடல் பகுதியில் பயன்படுத்தக்கூடிய துல்லியமான தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் நடவடிக்கைகளை வலுப்படுத்தி விரிவாக செயல்படுத்த வழிவகுக்கும்.
- தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்திர உதவித்தொகையை அளிப்பதற்காக ரூ. 3,054 கோடி ஒதுக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்புதலினால், மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த திட்டம் 2021-22 ஆண்டு முதல் 2025-26 (31-03-2026 வரை) ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
- பேரிடர் மேலாண்மை குறித்த ஐந்தாவது உலக மாநாட்டை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
- நிலம் மற்றும் கடற்பகுதிகளில் பாதுகாப்பதற்கான திறன்களை மேம்படுத்துதல்; நிலையான பிராந்திய வளர்ச்சியை நோக்கி உழைத்தல்; நீல பொருளாதாரம்; மற்றும் இயற்கை பேரழிவுகள், கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க கூட்டு நடவடிக்கையை ஊக்குவித்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
- பேரிடர் மேலாண்மை குறித்த 5-வது உலக மாநாடு நவம்பர் 24 முதல் 27 வரை புது தில்லியில் ஐஐடி வளாகத்தில் நடைபெறுகிறது.
- 'கொவிட்-19 கண்ணோட்டத்தில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான உறுதியை கட்டமைப்பதற்கான தொழில்நுட்பம், நிதி மற்றும் திறன்' என்ற தலைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழுவின் 56-வது கூட்டம் புதுதில்லியில் 2021 நவம்பர் 23 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலாளர் திரு.துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது.
- 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3.61 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ரூ.39.11 கோடி மானியத்துடன் நகர்ப்புறங்களுக்குக் குடிபெயர்ந்தோர் மற்றும் ஏழைகளுக்கு மொத்தம் 19,535 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய அளவிலான 10 சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் (the annual ranking of police stations for the year 2021) தமிழகத்தில் உள்ள தொட்டியம் (Thottiyam police station: Tiruchirappalli in Tamil Nadu) காவல் நிலையம் 8-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
- நாட்டிலுள்ள காவல் நிலையங்களில் தரவுப் பகுப்பாய்வு, நேரடிக்கண்காணிப்பு, பொதுமக்களின் பின்னோட்டத்தைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் 10 சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
மதுரையில் கருணாநிதி பெயரில் ரூ.114 கோடியில் நூலகம் அரசாணை வெளியீடு
- சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுரஅடி பரப்பில் கலைஞர் நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.99 கோடி, இந்நூலகத்துக்கு தேவையான நூல்கள், மின்நூல்கள், இணையவழிப் பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ரூ.10 கோடி, தொழில்நுட்ப சாதனங்கள் வாங்குவதற்கு ரூ.5 கோடி என மொத்தம் ரூ.114 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கலாம் என முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.
ரூ.659 கோடியில் துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
- சீரான மின் விநியோகத்துக்கு கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியம் என்பதைகருத்தில்கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், திறன் அதிகரித்தல் போன்ற பணிகளை தமிழக மின் தொடரமைப்பு கழகமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் செயல்படுத்தி வருகின்றன.
- அந்த வகையில், திருச்சி - துவாக்குடி, சென்னை - மாம்பலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.357 கோடியே 98 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் 230 கிவோ துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இததவிர, சென்னை- புளியந்தோப்பு, செங்கல்பட்டு- நல்லம்பாக்கம், கள்ளக்குறிச்சி - ஈருடையாம்பட்டு, தூத்துக்குடி சன்னதுபுதுக்குடி, திருவண்ணாமலை- வெம்பாக்கம், திருச்சி - மேட்டுப்பட்டி, வேங்கைமண்டலம் ஆகிய இடங்களில் ரூ.84 கோடியே 76 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் 110 கிவோ திறனில் 7 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மொத்தம் ரூ.517.39 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மகளிர் டி20 பிக்பாஷ் கிரிக்கெட் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் தேர்வு
- மகளிர் பிக்பாஷ் லீக் ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆகும். 8 அணிகள் மோதும் இந்த ஆண்டுக்கான மகளிர் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் அணிக்காக விளையாடி வரும் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர், 2021 மகளிர் பிக்பாஷ் லீக் போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார். மகளிர் பிக்பாஷ் லீக்கில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகும் முதல் இந்தியர் என்கிற பெருமையை இவர் அடைந்துள்ளார்.
- ஹர்மன்ப்ரீத் கெளர் நடப்பு சீசனில் 399 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனையாகவும் அவர் உள்ளார்.
தமிழகத்திலேயே ISO தரச்சான்று பெற்ற முதல் அரசுப்பள்ளி சமையல் கூடம்
- ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
- இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தில் 4 முறை ஆய்வு செய்த ISO தரச்சான்று அதிகாரிகள் சுகாதார முறையிலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும், பணியாளர்களின் நேர்த்தியாலும், உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் ISO தரச்சான்றிதழ் வழங்கினார்.
ரூ.5,116 கோடியில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
- ரூ5,116 கோடியில் 7.5 லட்சம் ஏ.கே 203 ரக துப்பாக்கிகளை ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் உற்பத்தி செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- ரஷ்யா அதிபர் விளாடிமீர் புதின் இந்தியாவுக்கு அடுத்த மாதம் வருகை தரும் போது இதற்கான அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. முதல் கட்டமாக ஒரு ஏ.கே.203 ரக துப்பாக்கியின் விலை ரூ80,000 என்ற மதிப்பில் சுமார் 20,000 துப்பாக்கிகள் வாங்கப்பட இருக்கிறது.
- இதன்பின்னர் 6,01,427 ஏ.கே.203 ரக துப்பாக்கிகள், உ.பி.மாநிலம் அமேதியில் உள்ள இந்தோ-ரஷ்யா ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும்.