Type Here to Get Search Results !

TNPSC 17th NOVEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

லக்கிம்பூர் கெரி வழக்கை கண்காணிக்க நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் நியமனம்
 • உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி நடந்த கார் விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள், 3 பாஜக.வினர், பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தனர்.
 • இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 • இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை கண்காணிக்க, பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. மேலும் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மூவரை சிறப்பு புலனாய்வுக் குழுவில் சேர்க்குமாறு உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் நாட்டிலேயே முதல் முறையாக மீன்வளத் தொழில் முனைவோர் பயிற்சி நிலையம்
 • 'லினாக்-என்சிடிசி ஃபிஷ்ஷரிஸ் இன்குபேஷன் சென்டர் (எல்ஐஎப்ஐசி)' எனும் பெயரிலான இந்தப் பயிற்சி நிலையத்தை மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா திறந்து வைத்தார். 
 • கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட பிரதமர் மீன் வளத் திட்டத்தின் (பிஎம்எம்எஸ்ஒய்) கீழ் ரூ.3.23 கோடி செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் (என்சிடிசி) இதனை நிர்வகிக்கிறது.
பழங்குடி மக்களின் மாவட்டங்களில் மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல்
 • நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியவையாக 'நிடி ஆயோக்' தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்களில் பிரதமரின் 'கிராமின் சதக் யோஜனா' திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.அங்கு 14 ஆயிரத்து 041 கி.மீ., சாலை அமைப்பதுடன் 2,626 பாலங்கள் கட்டப்பட உள்ளன. 
 • இதற்கான திட்டமதிப்பு 33 ஆயிரத்து 822 கோடி ரூபாய்.இதில் 22 ஆயிரத்து 978 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும்.ஆந்திரா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா உட்பட ஐந்து மாநிலங்களில் 7,287 கிராமங்களில் தொலைதொடர்பு சேவை கோபுரங்கள் அமைக்கப்படும். 
ஐ.நா.,வின் சுற்றுலாவுக்கான சிறந்த கிராமங்கள் - தெலுங்கானாவின் போச்சம்பள்ளி தேர்வு
 • ஐ.நா., உலக சுற்றுலா அமைப்பின் சிறந்த சுற்றுலா கிராமங்கள் பட்டியலில் 'இக்கட்' பட்டுப் புடவைகளுக்கு பெயர்பெற்ற தெலுங்கானாவின் போச்சம்பள்ளி தேர்வாகியிருக்கிறது. டிசம்பர் 2 ஸ்பெயினில் நடைபெறும் நிகழ்வில் இதற்கான விருது வழங்கப்படும்.
 • ஐ.நா., உலக சுற்றுலா அமைப்பு ஆரம்பக்கட்டமாக இது போன்று கிராமங்களுக்கு விருது அளிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. கிராமப்புற இடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக அவை விளங்க வேண்டும். மேலும் அதன் ஒன்பது மதிப்பீட்டு பகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். அத்தகைய கிராமங்கள் விருது பெறும்.
 • இந்தியாவிலிருந்து கோங்தாங் - மேகாலயா, லத்புரா காஸ் - ம.பி., மற்றும் தெலுங்கானாவின் போச்சம்பள்ளி ஆகிய மூன்று கிராமங்களை மத்திய சுற்றுலா அமைச்சகம் பரிந்துரைத்தது. அதில் தெலுங்கானாவின் போச்சம்பள்ளி தேர்வாகியுள்ளது. 
 • ஐதராபாத்தில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள போச்சம்பள்ளி, தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு 'இக்கட்' எனப்படும் பிரத்யேக பாணியில் நெய்யப்படும் நேர்த்தியான பட்டுப் புடவைகள் பிரபலம். 
 • இந்தியாவின் பட்டு நகரம் என்றும் இதனை அழைப்பர். போச்சம்பள்ளி இக்கட் பட்டுப் புடவைகள் 2004-ம் ஆண்டிலேயே புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
சட்டப்பேரவை சபாநாயகர்களின் 82வது மாநாடு 2021
 • சட்டப்பேரவை சபாநாயகர்களின் 82வது மாநாடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று சிம்லாவில் தொடங்கியது. இதில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உட்பட 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சபாநாயகர்கள் கலந்து கொண்டனர். இதில், பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடக்க உரை ஆற்றினார்.
ஐ.சி.சி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரங் கங்குலி நியமனம்
 • இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சவுரவ் கங்குலி. இந்திய அணிக்கு 2000-2005-ம் ஆண்டு வரை கங்குலி கேப்டனாக இருந்தார். அவர் கேப்டன் பொறுப்பு ஏற்றிருந்த காலத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளைப் பெற்றது.
 • கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அதன்பின், 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த பதவியில் இருந்து வருகிறார்.
 • இந்த நிலையில், ஐ.சி.சி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அனில் கும்ப்ளே கடந்த 2012-ல் இருந்து மூன்று முறை மூன்று வருட பதவிக்காலம் அடிப்படையில் அப்பதவியை வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, தற்போது அவருக்குப் பதிலாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். 
7,287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்க ரூ.6,466 கோடி நிதி ஒதுக்கியது ஒன்றிய அரசு
 • பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு உட்பட்ட இதுவரை செல்போன் சேவை கிடைக்கப்பெறாத கிராமங்களுக்கு அந்த சேவையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
 • இந்த திட்டம் ஐந்து மாநிலங்களில் 7,287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்க ஐந்தாண்டுகளுக்கான செயல்பாட்டு செலவு உட்பட ரூ.6,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் பேரவையை சிறார்கள் நடத்தினார்கள்
 • குழந்தைகள் தினத்தையொட்டி, ராஜஸ்தான் சட்டப் பேரவையில் சிறார்களே முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், எம்எல்ஏக்களாக அமர்ந்து நவம்பர் 14 அன்று அவையை நடத்தினார்கள்.
 • நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நடைபெறும் இந்த அவையை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பார்வையிட்டார்.
 • குழந்தைகளே தலைமை ஏற்று சுமார் ஒரு மணி நேரம் நடத்தும் இந்தப் பேரவைக் கூட்டத்தில் 200 சிறார்கள் மக்கள் பிரதிநிதிகளாக (MLA) அமர்ந்து அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். 
 • இந்தப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 15 மாநிலங்களில் இருந்து 6-16 வயதிலான 200 பேர் அவர்களின் திறமைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஐ.நா.வின் யுனிசெப் (UNICEF) இணைந்துள்ளது.
கால்நடை பராமரிப்பு & பால்வளம் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
 • கிராமப்புற ஏழை மக்களின் நீடித்த வளர்ச்சிக்கான வருவாய் திரட்டுவதற்கான இலக்குகளை அடைய, மத்திய கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறையும், உணவுப்பதப்படுத்துதல் அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன.
 • விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை மற்றும் உணவுப்பதப்படுத்துதல் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, இவ்விரு துறைகளால் வழங்கப்படும் பலன்களை பால்வள தொழில் முனைவோர் / பால் பண்ணை தொழில் நிறுவனங்களுக்கு நீட்டிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை செயலாளர் திரு அதுல் சதுர்வேதியும், உணவுப்பதப்படுத்துதல் அமைச்சக செயலாளர் திருமதி புஷ்பா சுப்பிரமணியமும் கையெழுத்திட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel