சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினராக சாந்தி ரவீந்திரநாத்தை நியமித்து முதல்வர் உத்தரவு
- தமிழக அரசின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவில், மாணவர் சமுதாயத்துக்கான சமூக நீதி, மகளிர் உரிமை, பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டுள்ள டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்தை உறுப்பினராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை துறைமுக தலைவராக சுனில் பாலிவால் பொறுப்பேற்பு
- சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவராக இருந்து வந்த ரவீந்திரன் கடந்த செப். 29-ம் தேதி ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டாா்.
- இதனையடுத்து எண்ணூா் காமராஜா் துறைமுக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுனில் பாலிவால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா்.
- இந்நிலையில் சுனில் பாலிவால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து துறைமுக தலைவா் பொறுப்பை முறைப்படி ஏற்றுக் கொண்டாா்.
கிருஷ்ணகிரி அருகே 1339ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்கள் பலவற்றைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி அருகே உள்ள மேலுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பி.ஜி.துர்க்கம் என்றழைக்கப்படும் பாலகொன்றாயதுர்க்கம் பெருமாள் கோயில் மலையடிவாரத்தில், பெரிய பாறையில் கல்வெட்டு உள்ளதை கண்டுபிடித்துள்ளார்.
- பி.ஜி.துர்க்கம் பகுதியில் காணப்படும் கல்வெட்டின் தொடக்கத்தில் பெரிய அளவிளான கோட்டுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. நடுவில் சக்கரமும், இடப்பக்கம் மனித உருவிலான கண்டப்பேருண்ட பறவையும், வலப்பக்கம் புலியின் உருவமும் காட்டப்பட்டுள்ளது. அருகில் குடை, சாமரம், சூரியன், சந்திரன் ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன. கல்வெட்டின் முடிவில், பூர்ணகும்பம் மற்றும் குத்துவிளக்குகள் காட்டப்பட்டுள்ளன.
- இக்கல்வெட்டின் தொடக்கத்தில், மூன்றாம் வல்லாளனின் மெய்கீர்த்தி என்னும் அவனது புகழை எடுத்துக்கூறும் பகுதி உள்ளது. அம்மன்னனின் ஆட்சியின்கீழ் இப்பகுதியை சிங்கைய்ய நாயக்கர் மற்றும் அவரது தம்பி வல்லப்ப தெண்ணாயக்கர் ஆகியோர் ஆண்டு வந்தனர்.
- இக்கல்வெட்டு 1339ம் ஆண்டைச் சேர்ந்ததாகும். சுமார் 700 ஆண்டுக்கு முன்னரே திருப்பதி கோயிலின் மடத்துக்கு, இங்குள்ள ஒரு ஊர் தானமளிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது அக்காலத்திலேயே திருப்பதி புகழ்பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
உத்தரகண்டில் இந்தியாவின் மிகப் பெரிய நறுமணத் தோட்டம்
- இந்தியாவின் மிகப்பெரிய நறுமணத் தோட்டம் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நைனிடால் மாவட்டம் லால்குவான் என்ற இடத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் 140 வகையான தாவரங்கள் அடங்கிய பிரமாண்ட நறுமணத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே மிகப் பெரிய நறுமணத் தோட்டம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. காகித ஆலைகளால் ஏற்பட்ட நச்சுத் தன்மை மற்றும் துர்நாற்றத்தைப் போக்கவே நறுமணத் தோட்டத்துக்கு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.
- ராம துளசி, ஷ்யாம் துளசி, வான துளசி, கபூர் துளசி உட்பட 20 வகையான துளசி செடிகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மேலும், எலுமிச்சை, ரோஸ்மேரி, புதினா மற்றும் பல்வேறு வகையான பூச்செடிகளும் இங்கு பூத்துக் குலுங்குகின்றன. மேலும், சந்தனம், தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
பிக்காஸோவின் ஓவியங்கள் ரூ.800 கோடிக்கு ஏலம்
- MGM ரிசார்ட்ஸுக்குச் சொந்தமான இந்தப் படைப்புகள், பெல்லாஜியோ ஹோட்டலில் உள்ள பிக்காசோ உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏலம் விடுவதன் மூலம் கலைப் படைப்புகளின் பன்முகத் தன்மையை மேம்படுத்தப் போவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
- 1973 இல் இறந்த ஸ்பெயின் கலைஞரான பிக்காஸோவின் ஒன்பது ஓவியங்கள் மற்றும் இரண்டு பீங்கான் படைப்புகள் இந்த ஏலத்தில் இடம்பெற்றன. இந்தப் படைப்புகள் சுமார் 50 ஆண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை.
- 1938 ஆம் ஆண்டு பிக்காஸோ வரைந்த "Woman in a Red-Orange Beret" என்ற ஓவியம் அதிகபட்ச விலையான 280 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதில் பிக்காஸோவின் காதலி மேரி தோர்ஸ் வால்ட்டர் இடம்பெற்றுள்ளார்.
- மற்றொரு தலைசிறந்த கலைப்படைப்பான "மனிதனும் குழந்தையும்" என்ற ஓவியம் சுமார் 150 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது. 1959 ஆம் ஆண்டு வரையப்பட்ட இந்த ஆறரை அடி உயரமான ஓவியம் பிக்காஸோவின் வாழ்க்கையின் சாதனைகளுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்று ஏல நிறுவனமான சோத்பீஸ் கூறியுள்ளது.
- 1942ல் பாரிஸில் நாஜி ஆக்கிரமிப்பின் போது பிக்காசோவால் வரையப்பட்ட "பழக்கூடை மற்றும் பூக்கள் கொண்ட வாழ்க்கை" என்ற மற்றொரு கலைப் படைப்பு 110 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
- பிக்காஸோவின் ஓவியத்துக்கு இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை ரூ.1250 கோடி. 2015-ஆம் ஆண்டு அல்ஜீயர்ஸ் பெண்கள் என்ற படைப்புக்கு இந்த விலை கொடுக்கப்பட்டது.
- விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய திவால் மற்றும் நொடிப்பு நிலை வாரியம் (ஐபிபிஐ), இங்கிலாந்தின் வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் (எப்சிடிஓ) இணைந்து பயிற்சியாளர்களுக்கான 2 நாள் பயிற்சியை நடத்தியது.
- இதில் திவால் பிரச்னைகளைத் தீர்க்கும் நடைமுறைக்கு உதவும், மாற்று சர்ச்சை தீர்வு நுட்பங்களின் பயன்பாடு ” குறித்து கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் ஆலோசிக்கப்பட்டன. இந்தப் பயிற்சித் திட்டம் இந்தியாவில் உள்ள திவால் கட்டமைப்பின் திறன் மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது.
- இதில் பங்கேற்றவர்களுக்கு, சர்ச்சைகளை வேறு வழியில் பார்ப்பது, சமரசத் திட்டத்தின் திறன், மிதமான மதிப்பீடுகளின் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. இந்த பயிற்சி, இதில் பங்கேற்றவர்களின் திறன்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐபிபிஐ முழு நேர உறுப்பினர் டாக்டர் திருமிகு முகுலிதா விஜய வர்க்கியா துவக்கவுரை நிகழ்த்தினார். சர்ச்சைத் தீர்வுகளின் மாற்று தொழில்நுட்பங்களுக்கான நன்மை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
- இந்திய கடற்படையில் முதல் பயிற்சிப் பிரிவில் உள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான சுஜாதா, மகர், சர்துல், சுதர்ஷினி, தாரங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை அக்டோபர் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை இலங்கைக்கு 4 நாள் பயணம் மேற்கொள்கின்றன. வெளிநாட்டில் கடற்படை அதிகரிகளின் 100 மற்றும் 101-வது ஒருங்கிணைந்த பயிற்சிக்காக இந்த கப்பல்கள் சென்றுள்ளன.
- இந்திய கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா தலைமையில் இந்த கப்பல்கள் பயிற்சிக்கு செல்கின்றன.
- இந்த 4 நாள் இலங்கைப் பயணத்தில், இந்திய கடற்படையின் மகர் மற்றும் சர்துல் ஆகிய கப்பல்கள் 101-வது பயிற்சிப் பிரிவினருடன் கொழும்பு செல்கின்றன.
- சுஜாதா, சுதர்ஷினி, தாராங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை 100-வது பயிற்சிப் பிரிவினருடன் திரிகோணமலை செல்கின்றன. இருநாட்டு கடற்படைகளின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், பலவிதப் பயிற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.
- ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் திரு அமித்ஷா தனது 2வது நாள் பயணத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஜம்முவில் ரூ.210 கோடி செலவில், ஐஐடி புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது.
- இன்று காஷ்மீரில் பல வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் தற்போது 7 புதிய மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2,000 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கின்றனர்.