தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த பீலே சாதனை சமன் செய்தார் சுனில் செத்ரி
- தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 13வது சீசன் மாலத்தீவில் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம், நேபாளம் என, 5 அணிகள் பங்கேற்கின்றன.
- இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி 37. நேற்று தனது 123 வது போட்டியில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த, தற்போதுள்ள வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (112, போர்ச்சுகல்), மெஸ்சிக்கு (80, அர்ஜென்டினா) அடுத்து மூன்றாவது இடத்தை ஈராக்கின் அலி மஹூத்துடன் (77, ஈராக்) பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 77 கோல் அடித்தனர்.
- தவிர ஒட்டுமொத்தமாக தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்களில் பிரேசில் ஜாம்பவான் பீலே (77 கோல், 92 போட்டி) சாதனையை சமன் செய்தார் சுனில் செத்ரி.
ஸ்பெயின் சர்வதேச செஸ் - இனியன் சாம்பியன்
- ஸ்பெயின் நாட்டில் லா-நுசியா சர்வதேச ஓபன் 2021 செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அக்.5ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா, ஸ்பெயின், ரஷ்யா, உக்ரைன் உட்பட 14 நாடுகளை சேர்ந்த 88 வீரர்கள் பங்கேற்றனர்.
- இந்தியா சார்பில் தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் பங்கேற்றார். கோவை கல்லூரி மாணவரான இனியன் மொத்தம் 9 சுற்றுகளாக நடந்த ஆட்டத்தில் 6 சுற்றுகளில் வெற்றியும், 2 சுற்றுகளில் டிராவும் செய்து 7 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- இந்த தொடரில் சிலியைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ரோட்ரிகோ வாஸ்சியூஸ் 2வது இடமும், உக்ரைனைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆண்ட்ரே ஸ்மித் 3வது இடமும் பிடித்தனர். முன்னதாக நடந்த சுற்றுகளில் இஸ்ரேல், சிலி, ஸ்பெயின், கியூபா என சர்வதேச முன்னணி கிராண்ட் மாஸ்டர்களை இனியன் வீழ்த்தினார்.
பொருளாதாரத்தை மேம்படுத்த கதிசக்தி எனும் புதிய திட்டம்
- கதிசக்தி என்றால் தமிழில் உத்வேகம் என்று அர்த்தம். இத்திட்டம் குறித்து டெல்லி செங்கோட்டையில், 75-வது ஆண்டு சுதந்திர தின உரையாற்றியபோது, பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த "உத்வேகம்" திட்டம், அடுத்த தலைமுறைக்கான வசதிகளை குறிவைத்து செயல்படுத்தப்பட உள்ளது.
- அந்தவகையில், ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த அமைச்சரவைப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
- இத்திட்டத்திற்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் திட்டத்தின் அன்றாடப் பணிகள் கண்காணிக்கப்படும், இதுகுறித்த தகவல்கள் பிரத்யேக இணையதளத்தில், அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட்டு ஆலோசிக்கப்படும்.
- "கதிசக்தி" திட்டத்தின் கீழ், அடுத்த நிதியாண்டுக்குள், நாடு முழுவதும் 200 விமான நிலையங்கள், 2 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை, குழாய் கேஸ் சேவையை 35 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தல் போன்ற வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
- நாடு முழுவதும் 202 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 4-ஜி வசதி கொண்டு வரப்படும். ஜவுளி, பார்மசி மண்டலங்கள், ராணுவ வழித்தடங்கள், மின்னணு பூங்காக்கள், தொழில் வழித்தடங்கள், மீன்வள மற்றும் வேளாண் மண்டலங்கள் உள்ளிட்டவை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்படும்.
கோயில் நகைகளை உருக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- மாநிலக் கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க ஆபரணங்களை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான ஆரம்ப வேலைகளைத் தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
- ஆன்லைனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பிரன்சிங் முறையில் முதலமைச்சர் நகைகளை உருக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
- தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின்கீழ் உள்ள இந்து கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
- முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 47 கோவில்களில் பக்தர்கள் வழங்கிய சிறிய நகைகள் தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளன.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம் - டென்மார்க்கின் ஸ்டெஸ்டால் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்
- ரிலையன்ஸ் நிறுவனம் பசுமை ஆற்றல் தயாரிக்கும் திட்டத்துக்காக ஸ்டெஸ்டால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஹைட்ரோஜன் எலக்ட்ரோலைசெர்ஸ் தயாரிப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்காகவும் ஸ்டெஸ்டால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- டென்மார்க்கின் ஓடென்ஸியில் தலைமையகமாக கொண்டுள்ள ஸ்டெய்டால் நிறுவனம் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது.
- அவர்களுடைய ஹைட்ரோஜென் எலக்ட்ரோலைசெர்ஸுக்கான தொழில்நுட்பம், எலக்ட்ரோலைசர்ஸுன் உற்பத்தி செலவைக் குறைக்கிறது. அதன்மூலம், பசுமை ஹைட்ரஜன் விலை குறைக்க முடியும்.