டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்
- மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகம் வழங்குவதை நோக்கமாக கொண்டு, மின்னாளுகையை அனைத்து நிலைகளிலும் புகுத்தும் வகையில் 'டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்' செயல்படுத்தப்படும்.
- மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டஅரசு துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக மின்மயமாக்கப்படும். டேட்டா அனலிடிக்ஸ், மெஷின் லேர்னிங் மூலம் கொள்கை வகுத்தல் மற்றும் அதை திறம்பட செயல்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்க உதவும் வகையில் ரூ.10 கோடியில் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு செயல்படுத்தப்படும்.
- தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் ரூ.7.5 கோடியில் மெய்நிகர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். பார்வை, கற்றல், வாசிப்பில் குறைபாடு உடையவர்கள், முதியோர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் ரூ.1 கோடியில்உள்ளடக்க தமிழ் மின்-நூலகம் உருவாக்கப்படும். 2, 3-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
பிரிக்சின் 13-வது மாநாடு
- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய 5 நாடுகளின் அமைப்பான பிரிக்சின் 13-வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டை தலைமையேற்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை திட்டத்தை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
- வன்முறையிலிருந்து விலகி அமைதியான முறையில் நிலைமையை சரிசெய்ய ஆப்கானிஸ்தானுக்கு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரிக்ஸ் நாடுகள், ஆப்கானிஸ்தானில் நிலையான தன்மை, அமைதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை உறுதி செய்ய உள்நாட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு
- நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
- கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் பொறுப்பை வகித்து வரும் பன்வாரிலால் புரோகித்துக்கு அண்மையில் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் இனி பஞ்சாப் மாநில ஆளுநராக மட்டும் பதவி வகிப்பார் என குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் சோதனை முயற்சியாக சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் ரக விமானத்தை சாலையில் தரையிறக்கி சாதனை
- ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள 925-ஏ தேசிய நெடுஞ்சாலையில், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சட்டா-காந்தவ் இடையே அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இது 3 கிலோமீட்டர் நீளம் மற்றும் 33 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. போர் காலங்களில் இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் அவசரமாக தரை யிறங்குவதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு புறமும் விமானங்களை நிறுத்தவும் முடியும்.
- இந்த அவசர கால தரையிறங்குதளத்தில் விமானப் படைக்குசொந்தமான சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் நேற்று சோதனை முறையில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
- இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா ஆகியோர் பயணித்தனர்.
- பின்னர் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம் மற்றும் எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவையும் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன.
சர்வதேச ஆசிரியர் பரிசு பட்டியலில் இடம் பெற்ற இரண்டு இந்தியர்கள்
- ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த வர்கி அறக்கட்டளையும், யுனெஸ்கோவும் இணைந்து சர்வதேச ஆசிரியர் பரிசை ஆண்டு தோறும் அளித்து வருகின்றன.
- இந்த ஆண்டுக்கான அறிவிப்பு வெளியானதும் 121 நாடுகளில் இருந்து 8,000 ஆசிரியர்கள் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 50 சிறந்த ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
- அதில், பீஹாரின் பாகல்பூரைச் சேர்ந்த கணித ஆசிரியர் சத்யம் மிஷ்ரா மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர் மேக்னா முசுனுரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- இவை தவிர சர்வதேச மாணவருக்கான பரிசு போட்டியில் புதுடில்லி, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த நான்கு மாணவர்கள்'டாப் 50' பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
- சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான 'டாப் 10' பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும். அதில் இருந்து சிறந்த ஆசிரியர், மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு அளிக்கப்படும்.
முனைவா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 'மகாகவி பாரதி விருது'
- கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 'கோவை பாரதி பாசறை' ஆண்டுதோறும் பாரதிக்கும், பாரதி இயலுக்கும் சேவை ஆற்றியவா்களுக்கு அவா்கள் சேவையை அங்கீகரிக்கும் வகையில் 'மகாகவி பாரதி' விருதும் ரூ.50 ஆயிரம் விருதுத் தொகையும் வழங்கி கெளரவித்து வருகிறது.
- இந்த ஆண்டு பாரதி நினைவு நூற்றாண்டில் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு விருது வழங்கப்படுகிறது.
- எனவே பாரதிக்கும், பாரதியியலுக்கும் அவா் ஆற்றிய பணியைக் கெளரவிக்கும் வகையிலும் இந்த ஆண்டுக்கான 'மகாகவி பாரதி விருது' அவருக்கு வழங்கப்படுகிறது.
வருவாய் பற்றாக்குறை நிதி தமிழகத்துக்கு ரூ.183 கோடி - ஒன்றிய அரசு ஒதுக்கீடு
- நாட்டில் உள்ள 17 தகுதி வாய்ந்த 17 மாநிலங்களுக்கு, 15வது நிதிக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், வருவாய் பற்றாக்குறை நிதியை ஒன்றிய அரசு மாதந்தோறும் தவணை முறையில் அளித்து வருகிறது.
- இந்நிலையில், 6வது தவணையாக தமிழகம், ஆந்திரா, அசாம், அரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை ஒன்றிய அரசு நேற்று விடுவித்தது.
- இதில், தமிழகத்துக்கு மட்டும் ரூ.183.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் 17 மாநிலங்களுக்கும் மொத்தம ரூ.59,226 கோடி நிதியை விடுவித்து இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அகழ்வாய்வில் 3200 ஆண்டு பழமையான நாகரீகம் கண்டுபிடிப்பு
- திருநெல்வேலி: தமிழக அரசு நடத்தி வரும் தாமிரபரணி ஆற்றை ஒட்டிய பொருநை அகழ்வாய்வில் கி.மு.1155 ஆண்டு காலத்திய நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் 3,200 ஆண்டு பழமை வாய்ந்த நாகரீகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதற்கு முன் நடந்த ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை அகழ்வாய்வில் கி.மு 9ம் நூற்றாண்டு மற்றும் கி.மு 8ம் நூற்றாண்டு காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு 400 ஆண்டுகள் பின்னோக்கிய பழம் நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மின் வாகன 'சார்ஜ்' மையம் ரிலையன்ஸ் - பி.பி., ஒப்பந்தம்
- ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக, நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் உள்ளன. அத்துடன், பி.பி., நிறுவனத்துடன் இணைந்து, வாகனங்களுக்கான எரிவாயு விற்பனை மையங்களையும், ரிலையன்ஸ் நடத்தி வருகிறது.
- இந்நிலையில், நாடு முழுதும் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்களை அமைப்பதற்காக, ரிலையன்ஸ் ஜியோ - பி.பி., நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்த நிலையங்களில், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய, வாடகை கார் சேவையில் ஈடுபட்டுள்ள புளுஸ்மார்ட் நிறுவனத்துடன், ஜியோ-பி.பி., நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
- அதனால், இனி, புளுஸ்மார்ட் மின் வாகனங்கள், நாடு முழுதும் அமைய உள்ள ஜியோ-பி.பி., நிறுவனத்தின் மின் சார்ஜ் மையங்களில் மின்சாரத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும். பிரிட்டனில், மின்சார வாகன சார்ஜ் மையங்களை நிர்வகிப்பதில், பி.பி.,பல்ஸ் முதலிடத்தில் உள்ளது.