சூரியசக்தி மின்உற்பத்தியில் 100 சதவீதம் இலக்கை எட்டியது சென்ட்ரல் ரயில்நிலையம்
- நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தியை பெருக்குவது இலக்காக கொண்டு அதற்கான நடவடிக்கையை ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
- இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையத்தில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சூரிய மின் சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.
- சென்னை சென்ட்ரல் மற்றும் மூா்மாா்க்கெட் வளாகத்தில் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் தகடுகள் நிறுவப்பட்டது மூலமாக, 1.5 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலமாக, பகல் நேரத்தில் நிலையத்தின் அனைத்து மின்தேவைகளும் சூரிய மின்சக்தியால் பூா்த்தி செய்யப்படுகின்றன
ஜிஎஸ்டி சீர்திருத்த குழுவில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்
- புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் சீர்திருத்தக் குழுவில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதியமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தக அமைச்சர் டி.எஸ்.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
- மேலும், ஒடிசா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழ்நாட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விபத்துகளை தடுக்க ரூ.7,270 கோடியில் சிறப்பு திட்டம்
- இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 4.49 லட்சம் சாலை விபத்துகளில் 1.51 லட்சம் இறப்புகள் பதிவாகி உள்ளன.
- மொத்த இறப்புகளில் 85 சதவீதம் தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மபி, கர்நாடகா, உள்ளிட்ட 14 மாநிலங்களில் பதிவாகி உள்ளன.
- இந்நிலையில், 'விபத்தில்லா இந்திய சாலைகள்' என்ற தொலைநோக்கு பார்வையுடன் சாலை பாதுகாப்புக்காக பிரத்யேகமாக புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர இருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- விபத்துகள் அதிகம் நிகழும் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 6 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.7,270 கோடி நிதி ஒதுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
- இத்திட்டத்தின்படி, சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளை தடுக்க, அடிமட்ட பிரச்னைகளில் இருந்து தீர்வுகள் கண்டு பாதுகாப்பை மேம்படுத்தி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு மானியம் வழங்கும்.
- இதற்காக 11 அம்சங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்தும் மாநில அரசுகளுக்கு செயல்பாட்டிற்கு ஏற்ப மானியம் வழங்கப்படும். இதற்காக சாலை பாதுகாப்பு பணிகள் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்யப்படும்.
- கடந்த 2020ம் ஆண்டில் சாலை இறப்புகள் எண்ணிக்கை 1.32 லட்சமாக பதிவாகி உள்ளது. கொரோனா முழு ஊடரங்கு காரணமாக இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது.
- மார்ச் 2027க்குள் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை 30 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.3,635 கோடி வழங்கும், உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கியிலிருந்து தலா ரூ.1,818 கோடி கடனாகப் பெறப்படும்.
- மாநிலங்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ரூ.6,725 கோடி மானியமாக வழங்கப்படும், மீதமுள்ள ரூ.545 கோடி திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2021
- 3-வது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு (State Food Safety Index) 2021-ஐ" Food Safety and Standards Authority of India (FSSAI)” வெளியிட்டுள்ளது.
- இதில் பெரிய மாநிலங்கள் வரிசையில்:- குஜராத் (முதலிடம்), கேரளா (2வது இடம்), தமிழ்நாடு (3-வது இடம்) பிடித்துள்ளன. சிறிய மாநிலங்கள் வரிசையில்:- கோவா (முதலிடம்), மேகாலயா (2-வது இடம்), மணிப்பூர் (3வது இடம்) பிடித்துள்ளன.
- யூனியன் பிரதேசம் வரிசையில்:- ஜம்மு காஷ்மீர் (முதலிடம்), அந்தமான் நிக்கோபார் (2-வது இடம்), புது டெல்லி (3-வது இடம்) பிடித்துள்ளன.
பள்ளிக் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை வடிவமைக்க குழு
- பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவின் (Committee on National Curriculum Frameworks (NFFs)) தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இக்குழுவில் 12 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைக்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டது.
- குழந்தை பருவக் கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான பாடத் திட்டங்களை இந்தக் குழு உருவாக்கவுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.