தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது கர்நாடகா
- கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
- இந்நிலையில், இக்கல்விக் கொள்கையை முதன் முதலாக கர்நாடகா அரசு தனது மாநிலத்தில் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா நிறைவு
- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஜூலை 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்தியா உட்பட 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். இரண்டு வாரங்களுக்கு மேலாக நடந்துவந்த ஒலிம்பிக் திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது.
- இதில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலத்துடன் ஒட்டுமொத்தமாக 113 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
- 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலத்துடன் 88 பதக்கங்களுடன் சீனா 2-வது இடமும், 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடமும் பிடித்தன. இங்கிலாந்து, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 10 இடங்களை பிடித்தன.
- அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனை எம்மாமெக்கோன் 4 தங்கம், 3 வெண்கலத்துடன் 7 பதக்கங்கள் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.
- ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 48-வது இடத்தை இந்தியா பிடித்தது. தடகளத்தில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியவீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுவரலாற்றுச் சாதனை படைத்தார்.
- கடந்த 100 ஆண்டுகளில் தடகளத்தில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். மகளிருக்கான பளு தூக்குதலில் மீராபாய் சானுவும் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் ரவிகுமார் தஹியாவும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
- மகளிர் குத்துச்சண்டையில் லோவ்லினா போர்கோஹெய்ன், பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆடவருக்கான மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். ஆடவர் ஹாக்கியில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
- ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக இந்தியா 6 பதக்கங்களை வென்றிருந்தது.
- ஒலிம்பிக் நிறைவு விழா, டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. நிறைவு விழா அணிவகுப்பில் பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களது நாட்டு கொடியை ஏந்திவந்தனர். இந்தியாவின் மூவர்ணக்கொடியை மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா ஏந்திச் சென்றார்.
- இதையடுத்து கண்கவர் கலைநிகழ்சிகள் மற்றும் வாணவேடிக்கைகள் இடம் பெற்றன. விழாவின் நிறைவாக ஒலிம்பிக் கொடியை 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் பாரீஸ் நகரின் மேயர் அன்னே ஹிடல்கோவிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் ஒப்படைத்தார்.
தெற்கு ரயில்வேயில் முதல் முறை - கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைக்கான 'பிளாட்டினம்' சான்று
- தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக பசுமை ரயில் நிலையத்துக்கு வழங்கப்படும் 'பிளாட்டினம்' சான்று கோவை ரயில் நிலையத்துக்குக் கிடைத்துள்ளது.
- நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏ1 தரம், அடுத்தநிலையில் உள்ள ரயில் நிலையங்கள் பசுமைச் சான்று பெற வேண்டும் என, ரயில்வே அமைச்சகம் 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.
- தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்கள் ஏ1 தரத்தில் உள்ளன.
- இந்நிலையில், கோவை ரயில் நிலையத்துக்குப் பசுமைச் சான்று பெறும் நடவடிக்கைகளை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். அதன் பலனாக, தற்போது பசுமைச் சான்று கிடைத்துள்ளது.
- அதன்படி, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உள்ள நிரந்தர வசதிகள், ரயில் நிலைய வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, சூரிய ஒளி மின்சார உற்பத்தி, நடைமேடைகளில் மின்சாரத்தைச் சேமிக்கும் எல்இடி விளக்குகள், மின்விசிறிகள், கழிவுநீர் மறுசுழற்சி மையம், மேற்கூரையில் வெப்பத்தை எதிரொலிக்கும் வண்ணப்பூச்சு உள்ளிட்டவை இருக்க வேண்டும். இவையனைத்தும் கோவை ரயில் நிலையத்தில் உள்ளன.
- தரத்துக்கேற்ப 'சில்வர்', 'கோல்டு', 'பிளாட்டினம்' என மொத்தம் 3 வகையான ரேட்டிங் அளிக்கப்படுகிறது. அதில், அதிகபட்ச ரேட்டிங்கான 'பிளாட்டினம்' சான்று கோவை ரயில் நிலையத்துக்குக் கிடைத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 'பிளாட்டினம்' சான்று பெற்ற முதல் ரயில் நிலையமாக கோவை நிலையம் உள்ளது.
- நாட்டில் இதுவரை 6 ரயில் நிலையங்களுக்கு மட்டுமே 'பிளாட்டினம்' சான்று கிடைத்துள்ளது. கோவை தவிர, செகந்திராபாத், புதுடெல்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், ஆசன்சோல் ஆகிய 5 ரயில் நிலையங்களுக்கு இதுவரை இந்தச் சான்று கிடைத்துள்ளது.