வியத்நாமுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியா வழங்கியது
- தென்கிழக்கு ஆசிய நாடான வியத்நாமுக்கு 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், 300 ஆக்சிஜன் கன்டெய்னா்களை இந்தியா வழங்கியுள்ளது. அந்நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உதவும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஐராவதி போா்க் கப்பல் மூலம் வியத்நாமின் ஹோ சி மின் நகர துறைமுகத்துக்கு ஆக்சிஜன் கன்டெய்னா்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
உள்துறை, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத் துறைகள் சார்பில் ரூ.593 கோடியில் குடியிருப்பு, விடுதி, குடிநீர் திட்டப் பணிகள் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழக உள்துறை, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத் துறைகள் சார்பில் ரூ.592.89 கோடி மதிப்பிலான காவலர் குடியிருப்புகள், காவல், தீயணைப்பு நிலையங்கள், விடுதிகள் உள்ளிட்ட திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- காவல், தீயணைப்பு துறையில் மொத்தம் ரூ.105.43 கோடி மதிப்பிலான கட்டிடங்களை முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
வட்டு எறிதலில் கதுனியாவுக்கு வெள்ளி
- தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு முன்னேறிய யோகேஷ் கதுனியா, இறுதிப் போட்டியில் 44.38 மீட்டர் தொலைவுக்கு வட்டு வீசி 2வது இடம் பிடித்தார். அதன் மூலம் இந்தியாவுக்கு 4வது வெள்ளிப்பதக்கம் உறுதியானது.
- நடப்பு சீசனில் இது அவரது சிறந்த செயல்பாடாகவும் அமைந்தது. பிரேசில் வீரர் சான்டோஸ் கிளாடினி (45.59 மீட்டர்) தங்கமும், 3வது இடம் பிடித்த கியூபா வீரர் லியோனார்டோ டயஸ் (43.36 மீ.) வெண்கலமும் வென்றனர்.
பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 3வது பதக்கம் வென்றார் தேவேந்திரா, சுந்தர் சிங்குக்கு வெண்கலம்
- டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எப் 46) பைனலில் இந்திய வீரர்கள் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார், அஜீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
- இலங்கை வீரர் தினேஷ் பிரியல் 67.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார். 2வது இடம் பிடித்த தேவேந்திரா (64.35 மீ.) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியதுடன், 2016ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் படைக்கப்பட்ட (63.97மீட்டர்) உலக சாதனையை முறியடித்தார்.
- மற்றொரு இந்திய வீரரான சுந்தர் சிங் 64.01 மீட்டர் எறிந்து 3வது இடம் பிடித்து வெண்கலத்தை வசப்படுத்தினார். ஒரே போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அஜித் சிங் (56.15 மீ.) 8 வது இடம் பிடித்தார்.
புதிய உலக சாதனையுடன் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் சுமித் அன்டில்
- பாரா ஒலிம்பிக் போட்டி ஈட்டி எறிதல் எப்-64 பிரிவில் இந்திய வீரர் சுமித் தனது முந்தைய சாதனையை தகர்த்து புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
- மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய சுமித் அசத்தலாக 68.55 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து புதிய உலக சாதனையை படைத்ததுடன் 2019ம் ஆண்டு துபாயில் நடந்த சர்வதேச போட்டியில் 62.88 மீட்டர் தொலைவுக்கு எறிந்து தான் படைத்த சாதனையையும் முறியடித்தார்.
பதக்கத்தை இழந்தாா் வினோத்
- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டில் 19.91 மீட்டா் தூரம் எறிந்து 3ஆம் இடம் பிடித்திருந்தாா். இந்நிலையில், அவரது சக போட்டியாளா்கள் பலா் வினோத் குமாரின் பங்கேற்பு தொடா்பாக போட்டி நடுவா் குழுவிடம் முறையிட்டுள்ளனா்.
- அது தொடா்பான ஆராய்ந்த போட்டி நடுவா் குழு, வினோத் குமாா் மாற்றுத்திறனாளியாக வகைப்படுத்தப்பட்ட பிரிவானது தகுதியுடையதாக இல்லை என்று அறிவித்தது. இதையடுத்து வினோத் குமாா் பதக்கத்தை இழந்தாா்.
ஆசிய இளையோா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
- துபையில் நடைபெற்ற ஆசிய இளையோா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி என 9 பதக்கங்கள் வென்றது.
- ஆடவருக்கான இறுதிச்சுற்றில் 51 கிலோ பிரிவில் விஷ்வாமித்ர சோங்தம் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் குஸிபோயேவ் அஹ்மத்ஜோனை வென்றாா்.
- 80 கிலோ பிரிவில் விஷால் 5-0 என்ற கணக்கில் கிா்ஜிஸ்தானின் அக்மதோவ் சன்ஸாரை வீழ்த்தினாா். மகளிருக்கான 54 கிலோ பிரிவில் நேஹா 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அய்ஷாகுல் யலுபயேவாவை தோற்கடித்தாா்.
- எனினும், ஆடவா் பிரிவில் விஷ்வநாத் சுரேஷ் (48 கிலோ) , வன்ஷாஜ் (63.5 கிலோ), ஜெய்தீப் ராவத் (71 கிலோ) ஆகியோரும், மகளிா் பிரிவில் நிவேதிதா (48 கிலோ), தமன்னா (50 கிலோ), சிம்ரன் (52 கிலோ) ஆகியோரும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்டு வெள்ளி பெற்றனா்.
மின்னணுக் கழிவுகளை கையாள்வதற்கான பிரத்யேக வலைதளம் - சென்னை ஐஐடி வடிவமைப்பு
- மின்னணு கழிவுகளைக் கையாள் வதற்கான பிரத்யேக வலைத ளத்தை சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) வடிவமைத்து வருகிறது.
- மக்களிடையே மின்னணுக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே வேளையில், மின்னணு கழிவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படாமல், குப்பைக் கிடங்குகளில் குவிக்கப்படுகின்றன.
- இந்நிலையில், மின்னணு கழிவுகளைத் திறம்படக் கையாள்வதற்கென ‘இ-சோர்ஸ்' என்ற பிரத்யேக வலைதளத்தை சென்னை ஐஐடி வடிவமைத்து வருகிறது.
- அந்த வலைதளத்தின் மூலமாக மின்னணு கழிவுப் பொருள்களை வைத்திருப்பவரும் அதை வாங்க விரும்புவோரும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலமாக அக்கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது எளிதாகும்.