ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு - இடைக்கால தலைவர் நியமனம்
- ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தை தலிபான் படையினர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இன்று காலை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் மட்டுமே அரசின் கைவசம் இருந்தது.
- ஆனால் தற்போது தலிபான் அந்த அதிகாரத்தையும் கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அரசே தலிபான்களிடம் ஆட்சியை விட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றி இருப்பது மற்ற நாடுகளின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறது.
டி.என்.பி.எல் டி20 - 3ஆவது முறையாக சாம்பியனானது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
- தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதியது.
- முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
- இறுதியில் 20 ஓவர்களில் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்
- ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்தவும், தமிழக கலைகளை பாதுகாத்து வளர்க்கவும், தமிழக அரசின் திட்டங்களால் கலைஞர்கள் பலனடையச் செய்யவும், பல்வேறு கலை பணிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தவும் வாகை சந்திரசேகரை தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் 'கதி சக்தி திட்டம்' அமல்படுத்தப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
- சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் 'கதி சக்தி திட்டம்' அமல்படுத்தப்படும்
- "பிரதம மந்திரி கதி சக்தி தேசிய திட்டம் மூலம் புதிய பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படும். இந்தியாவை உலகின் பச்சை ஹைட்ரஜன் மையமாக உருவாக்க தேசிய ஹைட்ரஜன் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம், மிகப் பெரிய ஹைட்ரஜன் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுக்கும்.
- 75-வது சுதந்திரன விழாவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 75 வந்தே பாரத் ரயில்கள் சேவையை விரிவுபடுத்தப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும். மியான்மர், வங்கதேசம், தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து கிடைக்க வழி செய்யப்படும்" என்றார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட சாதனையாளர்களுக்கு விருதுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். பின்னர், சாதனையாளர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கினார்.
- அதன்படி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது, பாரதிதாசன் பல்கலைக்கழக இயக்கவியல் துறை பேராசிரியர் லட்சுமணனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
- கொரோனா காரணமாக மறைந்த மருத்துவர் ப.சண்முகப்பிரியாவிற்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அவரது கணவர் சண்முகப்பெருமாள் பெற்றுக்கொண்டார்.
- இதை தொடர்ந்து, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது கிண்டி அரசு கொரோனா மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி, நிலநிர்வாக இணை ஆணையர் பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது திருச்சி ஹோலி கிராஸ் தொண்டு நிறுவனம், சேலத்தை சேர்ந்த மருத்துவர் பத்மபிரியா, திருநெல்வேலியை சேர்ந்த சமூக பணியாளர் மரிய அலாய்சியஸ் நவமணி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் வி.ஆர்.யுவர் வாய்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- இதேபோல், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விருது ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும், அவ்வையார் விருது ஈரோட்டை சேர்ந்த மருத்துவர் டி.சாந்தி துரைசாமி, சிறந்த 3ம் பாலினர் விருது திருநங்கை கிரேஸ் பானுக்கும், சிறந்த மாநராட்சி விருது தஞ்சாவூர் மாநகராட்சிக்கும், சிறந்த நகராட்சிகளில், உதகை- முதல் பரிசு, திருச்செங்கோடு-2ம் பரிசு, சின்னமனூர்-3ம் பரிசும், சிறந்த பேரூராட்சிகள் விருது- கள்ளக்குடி, திருச்சி, 2ம் பரிசு- மேல்பட்டம்பாக்கம், கடலூர், 3ம் பரிசு- சிவகங்கை மாவட்டம் கோடையூருக்கும் வழங்கப்பட்டது.
- முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த அரவிந்த் ஜெயபால், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பசுருதின், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் ஆகியோருக்கும், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மகேஷ்வரி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அமலா ஜெனீபர் ஜெயராணி, சென்னையை சேர்ந்த மீனா ஆகியோருக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்திற்கு சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனை விருதில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சாயல்குடி அரசு சமூக சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது.
- தொடர்ந்து, கோவிட் -19 தடுப்பு பணிக்கான சிறப்பு பதக்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் 9 பேருக்கும், உள், காவல்துறையில் 3 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் 3 பேருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 6 பேருக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 3 பேருக்கும், கூட்டுறவு, உணவு(ம)நுகர்வோர் பாதுகாப்பு துறையில் 3 பேருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 6 பேருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,654 கோடி நிதியுதவி
- "தீனதயாள் அந்தியோதயா” திட்டத்தின்கீழ் (Deen Dayal Antyodaya Yojana) நாடு முழுவதும் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,654 கோடி நிதியுதவியை பிரதமர் மோடி ஆகஸ்ட் 12 வழங்கினார்.