சிறந்த பொதுசேவை, புலன் விசாரணை 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம்
- பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகள் சுதந்திர தினத்தையொட்டி, சிறந்த பொதுச்சேவைக்கான காவல் பதக்கத்துக்கு தோவு செய்யப்பட்டுள்ளனா். பதக்கம் பெறுவோா் விவரம்:
- தமிழக காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபி அமரேஷ் பூஜாரி, செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி அ.அமல்ராஜ், சென்னை பெருநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் சு.விமலா, திருச்சி மாநகர காவல்துறையின் கோட்டை போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ந.நாவுக்கரசன், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு தலைமைக் காவலா் பா.பிரேம் பிரசாத் ஆகியோா் தோவு செய்யப்பட்டுள்ளனா்.
- இதேபோல தமிழக முதல்வரின் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணி பதக்கத்துக்கு 10 போ தோவு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் விவரம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வெ.செல்வி, கன்னியாகுமரி சிபிசிஐடி ஆய்வாளா் க.சாந்தி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.ரவி, கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகா் காவல் நிலைய ஆய்வாளா் க.சாயிலட்சுமி, ராமநாதபுரம் சத்திரக்குடி காவல் நிலைய ஆய்வாளா் ஆ.அமுதா, திண்டுக்கல் சிபிசிஐடி காவல் ஆய்வாளா் வே.சந்தானலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூா் காவல் நிலைய ஆய்வாளா் சு.சீனிவாசன், கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளா் மு.கனகசபாபதி, தென்காசி காவல் நிலைய ஆய்வாளா் க.ஆடிவேல், சேலம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ப.ஆனந்தலட்சுமி ஆகியோா் தோவு செய்யப்பட்டுள்ளனா்.
- விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் பரிசு வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா 3வது அலையை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு ரூ.14,745 கோடி - இரண்டாம் கட்டமாக மத்திய அரசு வழங்கியது
- கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நாடு முழுவதும் மருத்துவ உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த ரூ.23,123 கோடி சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசுகள் 40 சதவீதமும் நிதி வழங்குகின்றன.
- வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை மத்திய அரசு 90 சதவீதமும் மாநில அரசுகள் 10 சதவீத நிதியும் அளிக்கின்றன. மத்திய அரசின் பங்களிப்பு தொகை மாநிலங்களுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.
- இதன்படி, முதல்கட்டமாக மத்திய அரசு சார்பில் கடந்த மாதம் 22-ம் தேதி மாநிலங்களுக்கு ரூ.1,817 கோடி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு ரூ.14,744.99 கோடி அளிக்கப்பட்டது.
- அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் திட்டப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புதிதாக 20,000 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதில் 20 சதவீதம் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும்.
- மேலும் ஆக்சிஜனை சேமித்து வைக்க 1,050 கிடங்குகளை அமைப்பது, புதிதாக8,800 ஆம்புலன்ஸ்கள் வாங்குவது, மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
- நாடு முழுவதும் 621 மாவட்ட மருத்துவமனைகள், 933 பொது சுகாதார மையங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 733 மாவட்டங்களில் தொலை மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. ஆர்டிபிசிஆர் ஆய்வகம் இல்லாத மாவட்டங்களில் புதிய ஆய்வகம் அமைக்கப்படும்.
ஆக. 14ம் தேதி பிரிவினை பயங்கர நினைவு தினம் - பிரதமர் மோடி அறிவிப்பு
- சுதந்திரத்துக்கு பிறகு, இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவானது. அப்போது, இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர்.
- அப்போது ஏற்பட்ட பெரிய அளவிலான கலவரங்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதை நினைவில் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 14ம் தேதி தேச பிரிவினை பயங்கர நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கேரள உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்
- இந்திய அரசமைப்புசட்டத்தின் 224-ன் பிரிவின்(1) துணைப்பிரிவு (Article 224(1)) அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, விஜு ஆபிரகாம் மற்றும் முகமது நியாஸ் சொவ்வக்கரன் ஆகியோரை கேரள உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக அவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து 2 ஆண்டு காலத்திற்கு குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.