ஜெர்மனி பல்கலை தமிழ் துறைக்கு ரூ.1.25 கோடி தர முதல்வர் உத்தரவு
- கொலோன் பல்கலையில், இந்தியவியல், தமிழியில் ஆய்வு நிறுவனம், 1963ல் துவக்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.கடந்த, 2014ல், கொலோன் பல்கலையின் தமிழ்த் துறைக்கு, நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.
- அங்கு பணிபுரிந்த தமிழ் பேராசிரியர் உல்ரிக்க நிக்காஸ், 2020 செப்டம்பரில் ஓய்வு பெற்ற பின், தமிழ் பிரிவை மூடுவதாக, அப்பல்கலை நிர்வாகம் அறிவித்தது. அந்த சமயத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள், தமிழ்த்துறை தொடர்ந்து இயங்க தேவையான நிதியில், பாதியை திரட்டி, கொலோன் பல்கலைக்கு அளித்தனர்.
- இதனால், தமிழ் பிரிவை மூடும் முடிவு, 2022 ஜூன் வரை ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது அத்துறை தொய்வின்றி இயங்க, தமிழக அரசு சார்பில், 1.25 கோடி ரூபாயை உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்
- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும்.
- இந்தக் கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.
- இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம்
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் தொடங்கியது.
- இதன்படி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றனர்.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 43 புதிய ஒன்றிய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். புதிய ஒன்றிய அமைச்சரவையில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார். முதலில் மராட்டிய முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர்.
- காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த ஜோதிராதித்திய மாதவராவ் சிந்தியா அமைச்சராக பதவியேற்றார். ஒன்றிய இணை அமைச்சர்களாக இருந்த ஹர்தீப்சிங் புரி, கிரண் ரிஜிஜூ மன்சுக் மாண்டவியா, ஜி.கிஷண் ரெட்டி, அனுராக்சிங் தாகூர் உள்ளிட்ட 7 பேர் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர்.
- உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல், கர்நாடகாவை சேர்ந்த ஷோபா உள்ளிட்ட 7 பெண்கள் ஒன்றிய அமைச்சராக பதவி ஏற்றனர். ஒன்றிய அமைச்சராக பதவி ஏற்றவர்களில் 36 பேர் புதுமுகங்கள். இணை அமைச்சராக இருந்த 7 பேருக்கு கேபினட் அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நாவலர் நெடுஞ்செழியன் டொரண்டோ பல்கலைக்கழக விருது
- தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் தங்கள் வாழ்நாளில் குறிப்பிடத்தக்கத் தொண்டு செய்தவர்களுக்கும் செய்து வருபவர்களுக்கும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஒருவருக்கு விருது வழங்கும் நோக்கில் நிதி ஒன்று நிறுவப்பட்டது.
- இந்த விருது நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் வழங்கப்படும். இந்த விருதுக்கு நடுவர்களாக டொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை பேராசிரியரும் கல்வியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் பங்காற்றுவார்கள்.
- நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவையொட்டி கடந்த ஜூலை 11-ஆம் நாள், 2020 அன்று முதல் விருது வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
- 'நாவலர் நெடுஞ்செழியன் தகைசால் தமிழ் இலக்கிய விருது' என்று அழைக்கப்படும் இந்த விருது கேடயமும், ரூபாய் இரண்டு லட்சம் பணமுடிப்பும் கொண்டது.
- 2020-ஆம் ஆண்டுக்கான 'நாவலர் நெடுஞ்செழியன் தகைசால் தமிழ் இலக்கிய விருது' பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும், 2021-ஆம் ஆண்டுக்கான இவ்விருது கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கும் வழங்கப்படும்.