பெரியார் பல்கலை. துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் நியமனம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு
- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் ஆர் ஜெகநாதனைபல்கலைக்கழக வேந்தரும், தமிழகஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். ஜெகநாதன்பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.
- பேராசிரியர் ஜெகநாதன் 39 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் டீன் ஆகவும், வேளாண் வானிலை துறை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழக கல்விக்குழு தலைவராகவும், உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிப்பு
- மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஐசிடி விருது வழங்கப்படுகிறது.
- ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
- தமிழகப் பிரதிநிதித்துவத்தின்படி 6 ஆசிரியர்கள் மாநிலம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்படுவர். அதில் அதிகபட்சமாக 3 ஆசிரியர்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து கவுரவிக்கும். அந்த வகையில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது.
- கொரோனா காலம் என்பதால் இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கற்பித்தல் மாதிரிகளை விளக்கினர்.
- இதில் 2018-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.
- அவர்களின் விவரங்கள் - 1.கணேஷ், கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம். 2.மனோகர் சுப்பிரமணியம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கரூர் மாவட்டம். 3.தயானந்த் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் மாவட்டம்.
- அதேபோல 2019-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 24 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.
- அவர்களின் விவரங்கள் - 1.செந்தில் செல்வன், (குறைந்த செலவில் ஸ்மார்ட் போர்டை உருவாக்கியவர். கணிதப் பாடத்துக்கு ஜியாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்டவற்றுக்கான வழிமுறை விளக்கங்களை எளிய முறையில் 'பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்' அமைத்தவர்), மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டம், 2.தங்கராஜா மகாதேவன், (அனிமேஷன் பாடங்களை உருவாக்கி, சூழலியல் சார்ந்த வீடியோக்களைத் தயாரித்துக் கற்பிப்பவர்) பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம், 3.இளவரசன் (தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர், அரசு அறிமுகப்படுத்தும் முன்னரே க்யூஆர் கோடு திட்டத்தைச் செயல்படுத்தியவர்), வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம்.
'பாரத்நெட்' இணைய சேவை திட்டம்: இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல்
- நாட்டில் உள்ள அனைத்து தொலைதுார கிராமங்களிலும், 'பாரத்நெட்' திட்டத்தின் கீழ், 1,000 நாட்களுக்குள் இணைய சேவை வழங்கப்படும் என, கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
- இதையடுத்து, 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், இணைய சேவை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள, 16 மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கு இணைய சேவை அளிக்க, 19 ஆயிரத்து, 041 கோடி ரூபாய்க்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் வாயிலாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உட்பட, 16 மாநிலங்களை சேர்ந்த, 3.61 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் தொலைதுார கிராமங்கள், இத்திட்டத்தின் கீழ் பயன் அடைய உள்ளன.
ரூ.3,000 கோடி கடன் வழங்க திட்டம் - உலக வங்கி அறிவிப்பு
- கொரோனா பெருந்தொற்று துவங்கியதில் இருந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து, 264 கோடி ரூபாய் நிதியை உலக வங்கி இதுவரை அளித்துள்ளது.
- இந்நிலையில், நாட்டின் முறைசாரா உழைக்கும் வர்க்கத்தினரை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக, 3,717 கோடி ரூபாய் கடன் திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
- கொரோனா பரவல், எதிர்கால இயற்கை பேரழிவு, பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மீண்டெழ, இந்த கடன் தொகை பெரும் உதவியாக இருக்கும்.
- இந்த கடன் தொகைக்கான முதிர்வு காலம், 18.5 ஆண்டுகளாகவும், கூடுதலாக 5 ஆண்டுகள் சலுகை காலமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ம.பி.யில் ஆசியாவின் நீளமான சோதனை சாலை
- அதிநவீன கார்கள் போன்றவை இப்போதைய நிலையில் 400 கிமீ வேகத்தில் கூட செல்லும் வகையில் உள்ளன. ஆனால், இவற்றை ஓட்டி பரிசோதனை செய்வதற்கு ஏற்ற சோதனை சாலைகள் இந்தியாவில் இல்லை.
- இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், பிதாம்பூரில் ஆசியாவின் மிக நீளமான அதிவேக சாலை இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 'நாட்ராக்ஸ்' என அழைக்கப்படும் 11.3 கிமீ தூரமுள்ள இந்த சாலையை ஒன்றிய அமைச்சர் ஜவடேகர் காணொலி மூலமாக திறந்து வைத்துள்ளார்.
- நாட்ராக்ஸ் சாலை ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறைக்கு ஒப்புதல் - ஒன்றிய அமைச்சரவையில் முடிவு
- மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை, மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறைக்கும் அனுமதி வழங்கி உள்ளது.
- இதே போல, ரூ.3.03 லட்சம் கோடி மதிப்பிலான புதிய மின் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், புதிய மின் பாதைகள், புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
'சுந்தரம் பாஸ்டனர்ஸ்'க்கு சிறந்த வினியோகஸ்தர் விருது
- அமெரிக்காவை சேர்ந்த, 'ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களை, சுந்தரம் பாஸ்டனர்ஸ் தயாரித்து வழங்குகிறது. இது தவிர, 16 நாடுகளைச் சேர்ந்த 122 நிறுவனங்களும் இந்த நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை தயாரித்து வழங்குகின்றன.
- இதில், கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பாக வினியோகம் செய்ததற்காக, 2020ம் ஆண்டின் சிறந்த வினியோகஸ்தராக, சுந்தரம் பாஸ்டனர்ஸ் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் சுடுமண் கிண்ணங்கள் கண்டுபிடிப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் பண்டைய கால மனிதர்கள் பயன்படுத்திய மண் பாத்திரங்களே அதிகளவில் கிடைத்துள்ளன.
- பல்வேறு விதமான மண் பாத்திரங்களை செய்து அதனை சுட்டு பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கீழடியில் கிண்ணம் போன்ற சுடுமண் பாத்திரங்கள் தற்போது அதிகளவில் கிடைத்து வருகின்றன.
- புனல் போன்ற வடிவத்தில் உள்ள இந்த கிண்ணங்களின் அடிப்பாகத்தில் பிடிமானத்திற்காக தட்டையான அமைப்பை உருவாக்கியுள்ளனர். நான்கு அகழாய்வு தளங்களில் கீழடியில் மட்டும்தான் இதுபோன்ற கிண்ணங்கள் கிடைத்து வருகின்றன.
நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
- இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து முழுவதும் பதற்றமான பகுதி என அறிவித்து, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அமல்படுத்தியது மத்திய உள்துறை அமைச்சகம்.
- இந்த உத்தரவு 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இன்றுடன் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நிறைவு பெறுவதால் மேலும் 6 மாதங்களுக்கு நாகாலாந்தை பதற்றமான பகுதி என அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இந்த சட்டத்தின் அடிப்படையில் நாகாலாந்து முழுவதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புபடை வீரர்கள் பணியில் இருப்பர். இந்த சட்டம் அமலில் இருக்கும் பகுதியில் யார் மேலாவது சந்தேகம் ஏற்பட்டால், அவரை முன்னறிவிப்பு இன்றியும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமலும் விசாரிக்கவும், சோதனை செய்யவும், கைது செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
12 வயதிலேயே செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்
- ஹெங்கேரி தலைநகர் புத்தபிஸ்ட் நகரில் உலக கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் லியோன் மெண்டோன்கா மற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவனான அபிமன்யு மிஸ்ரா ஆகியோர் மோதினர். இதில், லியோன் மெண்டோன்கா இந்தியாவின் 67வது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆவார்.
- இந்த போட்டியில் லியோன் மெண்டோன்காவை வீழ்த்திய அபிமன்யு மிஸ்ரா, உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். 12 வயது 4 மாதங்கள் 25 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.