உத்தராகண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் ராஜினாமா
- முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் அவர் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அவர் பதவியேற்க வேண்டும்.
- தற்போது கங்கோத்ரி தொகுதியும், ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி முடிவு செய்திருந்தது.
- ஆனால் அடுத்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடத்தப்படுவது இல்லை என்பது விதியாகும்.
- எனவே, தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன சிறிய ரக நடமாடும் பாலங்கள் இந்திய ராணுவத்தில் இணைப்பு
- பாலங்களை 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
- அதன்படி, டிஆர்டிஓ மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்கள் இணைந்து தயாரித்த 10 மீட்டர் நீளமுள்ள சிறிய பாலங்கள் இந்திய ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக 12 பாலங்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.492 கோடி ஆகும்.
- இந்தப் பாலங்களை ராணுவத்தில் இணைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பேசும்போது, 'இந்திய ராணுவத்திடம் 15 மீட்டர் நீளமுள்ள சிறிய ரக பாலங்கள் ஏராளமாக இருக்கின்றன.
வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக வேண்டும் மாநில வளர்ச்சிக் கொள்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு
- தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாறவேண்டும். பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்ற வகையில் ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத, நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடைய வேண்டும்.
- அதற்கான திட்டமிடுதல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை. மேலும், பொருளாதார வளர்ச்சியும், சமூக நலத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டதால்தான், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்துப் பாராட்டியுள்ளார்.
- தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி, இறக்குமதி மட்டும் அல்ல. நிதி மூலதனம் அல்ல. வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழவேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான நல்வழியினைக் காட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.
ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் பிரிவில் தேர்வான முதல் இந்திய வீராங்கனை
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய நீச்சல் வீராங்கனை மானா படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கில் 2021-க்கு தகுதி பெற்ற முதல் பெண் மற்றும் மூன்றாவது நீச்சல் வீரர் என்ற பெருமையை மானா படேல் பெற்றுள்ளார்.
- மானா படேல், அகமதாபாத்தைச் சேர்ந்த பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீரர். 21 வயதான மானா படேல் 50 மற்றும் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 60 வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தங்கம் வென்றுள்ளார்.
புதுக்கோட்டையில் 13-ம் நூற்றாண்டு பாதுகாப்புப் பணியை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுப்பு
- புதுக்கோட்டை மாவட்டத்தில் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நிலையான ஒருங்கிணைந்த ஆட்சி முறை மறையத் தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாகச் செயற்பட்டு வந்துள்ளனர்.
- இவர்கள், தமது நிர்வாகத்துக்குட்பட்ட மக்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும், வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர் மற்றும் வணிகப் பொருட்களுக்கும் பாதுகாப்பாளர்களை நியமித்தனர்.
- இத்தகைய, பாதுகாவல் பணியை அறிவிக்கும் 'ஆசிரியம்' கல்வெட்டுகள் திருமயம் வட்டம் தேவர்மலை, மேலப்பனையூர், மலையடிப்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
- அவற்றில், மேலப்பனையூரில் கண்டெடுக்கப்பட்ட 14-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் பனையூர் குளமங்கலத்தை நிர்வகிக்கும் உரிமை பெற்றதை அறிவிக்கும் 'ஸ்வஸ்தி .ஸ்ரீ மது இராயப்பர் மகந் குமாரந் பாகுய நாயக்கர்க்குப்பனையூர் குளமங்கலம் ஆசிரியம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
- திருமயம் வட்டம் மலையடிப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சிதைவுற்ற கல்வெட்டில், கல்வெட்டு நட்டுவிக்கப்பட்டுள்ள பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பெற்றதை அறிவிக்கும் விதமாக 'பொன்னமராவதி நாட்டு வடபற்றுச் செவ்வலூர் ஏவவிருத்தரையர்கள் ஆசுரியம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும், இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 67 கல்வெட்டுகளில் ஆசிரியம், ஆசுரியம், அஸ்ரீயம், ஆஸ்ரயம், ஆச்ரயம் எனப் பல்வேறு சொல்லாடல்கள் இருந்தாலும் எமது ஆய்வில் பட்டியலிடப்பட்ட கல்வெட்டுகளில் 53 கல்வெட்டுகளில் ஆசிரியம் என்ற சொல்லாடலும், 8 கல்வெட்டுகளில் ஆஸ்ரீயம் என்றும், 3 கல்வெட்டுகளில் ஆசுரியம் என்றும் உள்ளது. 3 கல்வெட்டுகளில் மட்டுமே ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் என்ற சொல்லாடல் கையாளப்பட்டுள்ளது.
கொந்தகை அகழாய்வு மேலும் ஒரு சமநிலை எலும்புக்கூடு கண்டெடுப்பு
- கீழடி, அகரம், மணலூா், கொந்தகை ஆகிய பகுதிகளில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளின் அடிப்படையில் கொந்தகை பண்டைய காலத்தில் ஈமக் காடாக இருந்தது தெரியவந்துள்ளது.
- இங்கு தோண்டப்பட்ட குழிகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், எலும்புக்கூடுகள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்பகுதியில் சமநிலையில் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- அதே அகழாய்வுக் குழியில் ஏற்கெனவே கிடைத்த சமநிலை எலும்புக்கூடுக்கு அருகிலேயே, மற்றொரு சமநிலை எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3.5 அடி நீளம் உள்ள இந்த எலும்புக்கூட்டின் பாலினம், ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடக்கம்
- உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் ஒருமுறைக்கு மேல் மீண்டும், மீண்டும் அதே எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கும் பொருள்களை உட்கொள்ளும் பட்சத்தில் மனிதா்களுக்கு உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை, இதயநோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
- எனவே மாவட்டத்தில், முதல்கட்டமாக 50 உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களிலிருந்து ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை லிட்டா் ரூ. 25 முதல் ரூ. 30 வரை விலை நிா்ணயம் செய்து சேகரித்து, சுத்திகரிப்பு செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பெரம்பலூா், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலிருந்து பயன்படுத்திய எண்ணெயை சேகரிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவன அமைப்பு, ரூகோ என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
- இந்நிறுவனத்தினா் 4 மாவட்டங்களிலிருந்து பெறப்படும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பெங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி, பயோ டீசலாக சுத்திகரிப்பு செய்து, வாகனப் பயன்பாட்டுக்காக பிற எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க உள்ளனா்
- கிண்டி, கிங் சிறப்பு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள "கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் மற்றும் பன்னாட்டு தடுப்பூசி மையத்தை’ (post-COVID care clinic and international vaccination centre for yellow fever) தமிழக முதல்வர் ஜூலை 01-ந்தேதி தொடக்கி வைத்தார்.
- இந்த மையத்தில், சர்வதேச பயணிகளுக்கு பன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு 1948-ல் இருந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு, உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
- ஜெர்மனி அரசு நிறுவனமான "ஜெர்மன் அகாடமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ்” உதவியுடன் சென்னை ஐஐடியில் சர்வதேச நீர் மற்றும் பருவநிலை தகவமைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில், ஜூலை 1 முதல் Crop 7-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தை பயிர் காப்பீட்டு வாரமாக (Crop Insurance Week) கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூலை 01-ஆம் தேதி பயிர்க் காப்பீட்டு நாளாக (Crop Insurance Day) அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (The Institute of Chartered Accountants of India) 01 ஜூலை 1949-ல் நிறுவப்பட்டது. ஜூலை 01-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் பட்டயக் கணக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.