சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோகத்துக்கான சிட்டிகேட் மையம், 25 சிஎன்ஜி நிலையங்கள் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணூர் அருகில் உள்ள வல்லூரில் டோரன்ட் காஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள சிட்டிகேட் நிலையம் மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 சிஎன்ஜி நிலையங்கள் ஆகியவற்றை தலைமைச் செலகத்தில் இருந்தபடியே காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
- டோரன்ட் காஸ் நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோக திட்டத்துக்காக ரூ.5000 கோடி முதலீடு செய்துள்ளது.
- இதன்மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகில் உள்ள வல்லூரில் சிட்டிகேட் நிலையம் 1.4 ஏக்கரில் அந்நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் 33 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை
- கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
- மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் மேலிடப் பார்வையாளர்களாக பங்கேற்ற கூட்டத்தில், எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
- இதையடுத்து, எடியூரப்பாவுடன் ஆளுநர் மாளிகை சென்ற பசவராஜ் பொம்மை, பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.
தகைசால் தமிழர் விருது
- தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த, 'தகைசால் தமிழர்' என்ற பெயரில், புதிய விருது உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- இதற்கான விருதாளர்களை தேர்வு செய்ய, முதல்வர் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும், 'தகைசால் தமிழர்' விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், சுதந்திர தின விழாவின் போது முதல்வரால் வழங்கப்படும்.
இருபுறமும் சூரிய உருவம் பொறித்தது கீழடியில் கிமு 6ம் நூற்றாண்டு வெள்ளி நாணயம் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் 7, அகரத்தில் 8, கொந்தகையில் 5, மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- இப்பகுதிகளில் முதுமக்கள் தாழிகள், எலும்புக்கூடுகள், உறைகிணறுகள், மூன்று கல் வரிசை கொண்ட சுடுமண் செங்கல்சுவர், மூடியுடன் கூடிய பானைகள், பானை ஓடுகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், உணவு குவளை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
- கீழடியில் ஏற்கனவே தங்கத்தால் ஆன பொருள் கிடைத்த நிலையில், தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.
- கீழடியில் கண்டறியப்பட்ட நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது முத்திரை நாணயம் போன்று பயன்பட்டிருக்க வேண்டும்.
- இது கிமு 2 முதல் 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். எனினும் நாணயத்தின் பயன்பாடு, காலம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிய ஆய்விற்கு அனுப்பப்பட உள்ளது
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.5 சதவீதம் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்திருக்கிறது. முன்னதாக நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 12.5 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.
- ரிசர்வ் வங்கியும் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 9.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணித்திருக்கிறது. ஆனால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் ( 2022-23) வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எப் தெரிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 2022-23-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி 6.9 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இந்திய டிஜிட்டல் கல்வி - ஜூன் 2020 - ஆய்வறிக்கை
- கொரோனா பெருந்தொற்றால் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக மத்திய கல்வி அமைச்சகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
- குறிப்பாக டிஜிட்டல் முறையில் ஆன்லைன் கல்வி மற்றும் டிவி, ரேடியோ மூலம் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக பிரதமரின் இ வித்யா நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, தூர்தனின் இதர சேனல்கள் மற்றும் அகில இந்திய ரேடியோ நெட்வொர்க் மூலமும் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது.
- இணைய இணைப்பு இல்லாதவர்களுக்காகவே டிவி, ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்பட்டுவருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் டிஜிட்டலின் பங்களிப்பு அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள், தேசிய அளவில் முன்னோக்கி இருப்பது மத்திய அரசின் புதிய தரவுகளின் மூலம் தெரிய வருகிறது.
- டிஜிட்டல் வழிக் கல்வியில் தமது முன்னெடுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அரசு, அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
- மத்திய அரசின் டிஜிட்டல் கல்வியின் அடிப்படையில் இந்திய மாநிலங்களில், ஹிமாச்சலப் பிரதேசமும், மேகாலயா மாநிலமும் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 7 வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய டிஜிட்டல் கல்வி - ஜூன் 2020 என்ற ஆய்வறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ரஷ்யா கூட்டு ராணுவப் பயிற்சி
- இந்திய-ரஷ்ய கூட்டு ராணுவப் பயிற்சியின் 12-வது பதிப்பான இந்திரா-2021, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரஷ்யாவின் வால்கோகிராடில் நடைபெற உள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைப்படி சர்வதேச தீவிரவாத குழுக்களுக்கு எதிரான தீவிரவாத எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தக் கூட்டுப் பயிற்சி வழிவகுக்கும்.
- இந்தப் பயிற்சியில் இரண்டு நாடுகளிலிருந்தும் 250 பேர் பங்கேற்பார்கள். இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக காலாட்படை பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர்.
- இந்திய மற்றும் ரஷ்ய ராணுவத்துக்கு இடையேயான இயங்கு தன்மை மற்றும் பரஸ்பர தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளின் ராணுவப் படைகளுக்கிடையே சிறந்த செயல்முறைகளை பகிர்ந்துகொள்ளவும் இந்திரா-21 பயிற்சி உதவிகரமாக இருக்கும்.