தமிழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சுனாமியை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிக்கு காப்புரிமை
- கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போன்ற பேரழிவை முன்கூட்டிய அறியும் பொருட்டு, தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த (NIOT) ரா.வெங்கடேசன் தலைமையில், மா.அருள் முத்தையா, அர.சுந்தர், கி.ரமேஷ் ஆகிய 4 தமிழ் விஞ்ஞானிகள் கொண்ட குழு, கடல் படுகையில் ஏற்படும் நிலநடுக்கத்தின் விளைவாக உருவாகும் சுனாமியைக் கண்டறிய உதவும்மிதவைகளை உருவாக்கியுள்ளனர். இதற்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது.
- இந்தக் கருவி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நவீன, தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் இக் கருவியில் உள்ளன. இதன் தரவுத் தொகுப்புகள் செயற்கைக்கோள் மூலம் ஒரே நேரத்தில் என்ஐஓடி தரவு மையம் மற்றும் இன்காய்ஸ் (INCOIS) சுனாமி எச்சரிக்கை மையத்துக்கும் நிகழ்நேரத்தில் சுனாமி பற்றிய தகவல்களை அனுப்புகின்றன.
- மேலும் இந்த தரவுத் தொகுப்புகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் பகிரப்படுகின்றன. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியா சுயசார்புடன் சுனாமிமிதவையை வடிவமைத்து நிறுவியுள்ளது. கரோனா தொற்று மற்றும்ஊரடங்கு காலத்திலும் இம்மிதவையை பராமரிக்க என்ஐஓடி விஞ்ஞானிகள் ஆழ்கடலில் பயணம் செய்து வருகின்றனர்.
- இத்தகைய மிதவையைக் கண்டுபிடித்ததற்காக 'நிகழ்நேர சுனாமி கண்காணிப்பு முறை' (REAL TIME TSUNAMI MONITORING SYSTEM) என்ற தலைப்பில், எங்கள்குழுவுக்கு இந்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
காயகல்ப் விருது
- ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனைகளை இனம் கண்டறிந்து அவைகளுக்கு விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. காயகல்ப் என்ற இந்த விருது சுற்றுப்புற தூய்மை மற்றும் வெளிப்படை தன்மை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
- இந்த விருதை பெறும் தகுதியுடைய மருத்துவ மனைகளை கண்டறியவும் 5 பேர் கொண்ட குழு அனைத்து மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். அந்த குழுக்கள் கள ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு மதிப்பெண் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கும்.
- அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் விருதான காயகல்ப் விருது தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கிடைத்துள்ளது.
- முதல் பரிசாக ரூ.15,00,000 ரூபாயும் கொடுக்கப் பட்டுள்ளது. பிரசவம், தொற்றுநோய் ,தோல் மருத்துவம், குழந்தைகள் நலம் உட்பட பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
- காயகல்ப் விருது பெற்றுள்ள செங்கோட்டை அரசு மருத்துவமனை ஏற்கனவே 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளும் தொடர்ந்து ஆறுதல் பரிசை தட்டி சென்றது குறிப்பிடத் தக்கது. மத்திய அரசின் பரிந்துரையின் படி இதுவரை 4 குழுக்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
- இதுவரை எந்த மாநிலமும் பெற்றிராத வகையில் இந்த ஆண்டு 99.3 சதவீதம் மதிப்பெண்களை செங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு வழங்கியுள்ளது.
'தர்பார் மாற்றம்' நடைமுறை முடிவுக்கு வந்தது
- இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் ஜம்மு காஷ்மீரின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப, 6 மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரையும் அறிவித்து செயல்பட்டு வந்தனர்.
- ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த வரையில், கோடை காலத்தில் ஸ்ரீநகரிலும், குளிர் காலத்தில் ஜம்முவிலும் தலைமை செயலகம் செயல்பட்டு வந்தன.
- குளிர்காலத்தில் இருந்து தப்பிப்பிதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்காக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஆவணங்களும், குறிப்பிட்ட அளவு ஊழியர்களும், அதிகாரிகளும் ஜம்முவுக்கும், ஸ்ரீநகருக்கும் இடையே வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
- இதனால், இது 'தர்பார் மாற்றம்' என்று அழைக்கப்பட்டது. கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு ரத்து செய்து, இம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இவற்றுக்கு 2 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் மனோஜ் சின்கா, கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இரட்டை தலைநகர நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்தார்.
- ஜம்மு காஷ்மீரில் டோக்ரா மன்னர் குலால் சிங் ஆட்சி செய்த போது, 1872ல் இருந்து இந்த இரட்டை தலைநகர ஆட்சி முறை கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகும் இது பின்பற்றப்பட்டது. இப்போது, 149 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது.
சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ .50 ஆயிரம் கோடி கடன் -பிரதமர் மோடி
- பிரபல மருத்துவரும் முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான பிதன் சந்திர ராய் மருத்துவ துறையில் பல்வேறு சேவைகளை செய்துள்ளதால் அவரது நினைவை அனுசரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி,இன்று பலரும் மருத்துவர்களை பாராட்டி வருகின்றனர்.
- இந்நிலையில்,தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மருத்துவர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார்.
- ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு இறப்பு விகிதத்தை கவனித்தால், வளர்ந்த நாடுகளை விட நமது நாடு சிறப்பாக முன்னேறி வருகிறது. நம்மால் பலரையும் காப்பாற்ற முடிந்தது, இந்த அனைத்து பெருமையும் நமது மருத்துவர்கள், முன்கள பணியாளர்களையே சார்ந்துள்ளது.
- மக்கள் அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை வழங்க,மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை மேலும் மேம்படுத்த ரூ .50 ஆயிரம் கோடி கடன் திட்டம் தொடங்கப்படும்,குழந்தை பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் தொகையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
- சீனாவை அச்சுறுத்தி வந்த மலேரியா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக - கூறி உலக சுகாதார அமைப்பு "மலேரியா இல்லாத சீனா" என்ற சான்றிதழை அளித்துள்ளது.
- மலேரியா இல்லாத 40-வது நாடாக சீனா திகழ்கிறது. எல் சால்வடார் (2021), அல்ஜீரியா மற்றும் அர்ஜென்டினா (2019), பராகுவே மற்றும் உஸ்பெகிஸ்தான் (2018) ஆகிய நாடுகள் மலேரியாவை முற்றிலும் ஒழித்து விட்டன.