திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன ரக ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கி கடற்படை வசம் ஒப்படைப்பு
- திருச்சி நவல்பட்டில் உள்ளஇந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலையில் பல்வேறு ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- அந்த வகையில், ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் புதிய ரக எஸ்ஆர்சிஜி ரக துப்பாக்கி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம் என்ற நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பகிர்ந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இத்துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் துப்பாக்கி 12.7 மி.மீ எம்2 நேட்டோ ரக துப்பாக்கியாகும். இந்த ரக துப்பாக்கியை இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை ஆகியவற்றின் ரோந்துக் கப்பல்களில் பயன்படுத்தலாம்.
- பகல் மற்றும் இரவு நேரங்களில் இலக்கைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் வகையிலான நவீன சாதனங்கள் இந்தத் துப்பாக்கியில் உள்ளன.
- இந்தத் துப்பாக்கி தானாகவே இலக்கை தேடும் வசதி கொண்டது. மின்சாரம் இல்லாதபோதும், தானியங்கி தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டாலும் கைகளால் இயக்கும் வசதியும் கொண்டது. இந்த ரக துப்பாக்கி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுவதால் இதற்காக இறக்குமதி செய்யும் செலவு குறையும்.
- இந்தத் துப்பாக்கிகளை இந்திய கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு துப்பாக்கித் தொழிற்சாலையில் நடைபெற்றது. படைக்கலன் தொழிற்சாலை வாரியத் தலைவர் சி.எஸ்.விஸ்வகர்மா இந்தத் துப்பாக்கிகளை இந்திய கடற்படை டைரக்டர் ஜெனரல் (ஆயுதப் பிரிவு) கே.எஸ்.சி.ஐயர் வசம் ஒப்படைத்தார்.
கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் குறுக்கே அணைகள் கட்டும் உரிமை இனி மத்திய அரசுக்கே
- கிருஷ்ணா நதிநீர் பகிர்ந்துகொள்வது தொடர்பாக தெலங்கானா மற்றும் ஆந்திர அரசு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் காரசாரமான விவாதங்களை முன்வைத்து வருகின்றனர். நாகார்ஜுன சாகரில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஸ்ரீசைலம் வழியாக ராயலசீமா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கிறது.
- இதற்கிடையே தெலுங்கானா அரசு நாகார்ஜுன சாகர் அருகே லிப்ட் இரிகேஷன் மூலம் மின்சார உற்பத்தி செய்தது. இதனால் ஸ்ரீசைலம் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதன் காரணமாக ஆந்திராவில் உள்ள ராயலசீமா மாவட்டங்களான சித்தூர், கடப்பா, அனந்தபூர், கர்னூல் ஆகிய 4 மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பாசன நீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டது.
- இதனை அறிந்த ஆந்திர முதல்வர் உடனடியாக தெலங்கானா, கிருஷ்ணா நதியிலிருந்து மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அறிவித்தார்.
- இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை தலைதூக்கியது. நாகார்ஜுன சாகர் மற்றும் சோமசீலா அணைகளில் இருபுறமும், இரு மாநில போலீஸாரும் குவிக்கப்பட்டனர். இருமாநில நீர்வளத்துறை அமைச்சர்களும் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர்.
- இதனை பரிசீலித்த மத்திய ஜலசக்தித்துறை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகள் மீதுள்ள உரிமையை தாமே எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.
அமெரிக்க கடற்படையிடமிருந்து எம்எச்-60ஆர் ரக 2 ஹெலிகாப்டர்களை பெற்றுக் கொண்டது இந்திய கடற்படை
- அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில, வெளிநாட்டு ராணுவ கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் எம்எச்-60ஆர் ரகஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்க அரசுடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது.
- அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்து காலநிலையிலும் பறக்கும் வகையில் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
- அமெரிக்காவிடமிருந்து 24 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 2 ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை இந்திய கடற்படையிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது.
- அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் 16-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சாந்து ஹெலிகாப்டர்களை ஏற்றுக் கொண்டார்.
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 66 கோடி தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம்
- புதிய விலை நிர்ணயத்தின் அடிப்படை யில், சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கூடுதலாக 66 கோடி கரோனா தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இவை வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்துக்குள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன.
- இந்நிலையில், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை மேலும் அதி கரிக்கும் வகையில், கூடுதலாக 66 கோடி கரோனா தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சீரம் நிறுவனத்திடம் இருந்து 37.5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 28.5 கோடி கோவேக்சின் தடுப்பூசிகளையும் வாங்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
- புதிய விலை நிர்ணயத்தின் அடிப்படையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் ரூ.205 என்றும், கோவேக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ் ரூ.215 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
நாற்கர கூட்டமைப்பு - அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஒப்புதல்
- அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும், பிராந்திய போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்துவதற்கான புதியதொரு நாற்கரக் கூட்டமைப்பை உருவாக்க கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன.
- ஆப்கானிஸ்தானில் நீண்டகால அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துத் தொடா்பு மிகவும் இன்றியமையாதது என்று நான்கு நாடுகளும் கருதுகின்றன.
- எனவே, பிராந்திய அமைதிக்கும் பிராந்திய இணைப்புக்கும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை என அந்த நாடுகள் ஒப்புக் கொள்கின்றன.
- பிராந்திய நாடுகளுக்கிடையே வளத்தை மேம்படுத்துவதற்கு உதவும் வா்த்தக வழித் தடங்களை ஏற்படுத்துவதில் இந்த முயற்சி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பு என்பதை நான்கு நாடுகளும் புரிந்துகொண்டுள்ளன.
- வா்த்தகத்தை விரிவாக்குதல், போக்குவரத்தை இணைப்பை ஏற்படுத்துதல், பிராந்திய நாடுகளின் நிறுவனங்களிடையே வா்த்தக உறவை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த நாற்கர கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
- பரஸ்பர ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக வரும் மாதங்களில் இந்த நான்கு நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது
இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் நிலையம்
- இந்தியாவின் மிகப்பெரிய பொது ஈ.வி. (எலக்ட்ரானிக் வெஹிக்கிள்) சார்ஜிங் நிலையம், நவி மும்பையில், மெஜந்தாவால் துவங்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் நிலையத்தை, மதிப்பிற்குரிய தொழில்துறை அமைச்சர் ஸ்ரீ. சுபாஷ் தேசாய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- 24x7 என்ற தொடர்ச்சியான செயல்பாட்டுடன், 21 ஏசி / டிசி சார்ஜர்களுடன் 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதியோடு இது போன்ற ஒரு நிலையம் தொடங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
- நிலையங்களில் காணப்படும் சார்ஜர்களைப் பொறுத்து, 45 நிமிடங்களில் ஒரு வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். ஏசி ஸ்லோ சார்ஜிங் தேவைப்படும் வாகனங்களுக்கு, ஒரு பார்க்கிங் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் சார்ஜ் செய்யத் தேவைப்படும் வாகனங்களுக்கும் (ஓவர்நைட்) கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது.
- இந்த சார்ஜர்களை சார்ஜ் கிரிட் செயலி (ChargeGrid) மூலம் ஆன்லைன் ரிமோட் கண்காணிப்பு வழியாக இயக்கலாம். இதில் தானியங்கி பேமெண்ட் கேட்வே உள்ளது.
- இதன் மூலம் சார்ஜர்களை கண்காணிக்கவும், பராமரிக்கவும், இயக்கவும் ஸ்டேஷன் மார்ஷல் தேவையை நீக்குகிறது. இந்த சார்ஜர்கள் ஒருங்கிணைந்த 40 கிலோவாட் ரூஃப்டாப் சூரிய சக்தியால் இயக்கப்படுகின்றன.