ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி
- இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் தொற்று நோய்வியல் மற்றும் நுண் உயிரியலில் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
- இதனையடுத்து புனேவில் உள்ள அட்டாஸ்ஃபர் மையத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் உரிமம் நீக்கப்படும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
- ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2030ல் உலகின் மிகப் பெரிய பசுமை ரயில்வேக்கு இலக்கு
- வரும், 2030க்குள், 'பூஜ்ய கரியமில வாயு வெளியேற்றம்' என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழு வேகத்தில் நடக்கின்றன.
- இதன் வாயிலாக, உலகின் மிகப் பெரிய பசுமை ரயில்வே என்ற சிறப்பை, இந்திய ரயில்வே பெறும்.வரும், 2023க்குள் அகல ரயில் பாதைகள் அனைத்தையும், 100 சதவீதம் மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அத்துடன் வெப்பமயமாக்கலை தடுக்க, அனைத்து ரயில்களின் இயக்கத்தில் நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்படும். கரியமில வாயுபிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து தடங்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து, பசுமை சூழலை உருவாக்கும் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- ரயில்வேயின், 39 தொழிற்சாலைகள், ஏழு தயாரிப்பு பிரிவுகள், எட்டு ரயில் பெட்டி பராமரிப்பு கூடங்கள், ஒரு சரக்கு கிடங்கு ஆகியவற்றுக்கு 'பசுமை' சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது.
- பசுமை சான்றிதழ் மின் சிக்கனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள், தண்ணீர் சேமிப்பு, கழிவு மேலாண்மை, மறுசுழற்சி, குறைவான பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், 'பசுமை சான்றிதழ்' வழங்கப்படுகிறது.
ஆறு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க ரூ.50 ஆயிரம் கோடி திட்டத்துக்கு அனுமதி
- தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.
- அதன்படி, 'புராஜக்ட் 75 இந்தியா' என்ற பெயரில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. நீண்ட காலமாக இத்திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
- ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இதையடுத்து, மும்பையில் அரசுக்கு சொந்தமான மஸாகான் கப்பல் கட்டும் தளம் மற்றும் தனியார் நிறுவனமான எல் அண்ட் டி-க்கு விரைவில் ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளது.
- இந்த 2 நிறுவனங்களும் வெளி நாடுகளின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக் கும். மஸாகான் - எல் அண்ட்டி இணைந்து ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தென் கொரியா ஆகிய 5 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் நிறுவனத்துடன் தொழில் நுட்ப ஒப்பந்தம் மேற்கொண்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்
உலகம் தலைகீழாக போகிறது என்ற ஒராங்குட்டான் புகைப்படத்துக்கு சர்வதேச விருது
- கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் எடுத்தப் புகைப்படம் ஒன்று சர்வதேச விருதைப் பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஓராங்குட்டான் ஒன்று மரத்தை அணைத்தப்படி தலைகீழாக தொங்கிக்கொண்டு இருப்பதுபோல் இருக்கிறது.
- அதற்கு மேலே, மரத்தின் இலைகள், வானம் தெரிகின்றன. 'உலகம் தலைகீழாகப் போகிறது' என்று பெயரிடப்பட்ட இந்தப் புகைப்படத்துக்கு நேச்சர் டிடிஎல் என்ற சர்வதேச அமைப்பு 2021ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை வழங்கியுள்ளது.
- 8000 க்கு மேற்பட்ட படங்கள் இடம்பெற்ற அந்தப் போட்டியில், தாமஸ் விஜயனின் இந்தப் புகைப்படம் விருது பெற்றுள்ளது. 1,500 பவுண்ட் விருதுத் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.