CIG REPORT ON TAMILNADU 2019 / தணிக்கைத் துறைத் அறிக்கை 2019
TNPSCSHOUTERSJune 27, 2021
0
கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச்சுடன் நிறைவடைந்த காலத்திலான தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மின்துறை நிறுவனங்களுக்கு 2014-15-ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு ரூ.12 ஆயிரத்து 763.92 கோடியாகும். இதைத் தொடா்ந்து, 2018-19-ஆம் நிதியாண்டில் இழப்பின் அளவு ரூ.13 ஆயிரத்து 176.20 கோடியாக இருந்தது. 2017-ஆம் ஆண்டில் மட்டும் மின் கட்டணத் திருத்தம் காரணமாக இழப்பின் அளவு குறைந்தது.
மின்சாரம் கொள்முதல்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் மிகக் கூடுதல் செலவினமாக மின்சாரக் கொள்முதலே உள்ளது. 2014-15-ஆம் ஆண்டில் 53.34 சதவீதமாகவும், 2017-18-ஆம் ஆண்டில் 60.78 சதவீதமாகவும் மின்சாரக் கொள்முதல் இருந்தது.
கடந்த 2013-14-ஆம் ஆண்டு காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரம், 24 ஆயிரத்து 164.84 மில்லியன் யூனிட் ஆகும். அதன் மதிப்பு ரூ.11 ஆயிரத்து 873.37 கோடி. இதன் அளவு 2017-18-ஆம் நிதியாண்டில் 29 ஆயிரத்து 758.38 மில்லியன் யூனிட்களாக அதிகரித்தது. இதன் மதிப்பு ரூ.13 ஆயிரத்து 564.33 கோடியாகும்.
சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவு திறன் தேவையான அளவு அதிகரிக்கப்படாதது, மின் உற்பத்தி நிலையங்களின் குறைந்த செயலாற்றல், மத்திய மின் உற்பத்தி நிலைய திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகியவையே மின்சாரக் கொள்முதல் செய்ய காரணிகளாக அமைந்தன.
மேலும், மின்சார வாரியத்துக்கு இழப்புகள் அதிகரிக்கக் காரணம், மின்கொள்முதல் மற்றும் உற்பத்திச் செலவோடு பணியாளா், நிதி செலவினங்களின் அதிகரிப்புதான் என தணிக்கைத் துறை தலைவா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.1000 கோடி வீண்
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டு நீக்கப்படாத காரணத்தால், ஆயிரம் கோடி ரூபாய் பிரீமியத் தொகை கூடுதலாகச் செலுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் குடும்பங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், முன்னுரிமை குடும்ப அட்டைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், 96.46 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள் இருந்தனா். எனினும், ரூ.72 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் கொண்டவா்களாக 1.57 கோடிக்கும் கூடுதலாக மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சோக்கப்பட்டனா்.
முன்னுரிமை அட்டைதாரா்களின் அடிப்படையில் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 96.46 லட்சமாக மட்டுமே இருக்கையில், காப்பீட்டுத் திட்டத்தில் மட்டும் ஒன்றரை கோடிக்கு கூடுதலாக பயனாளிகள் இருப்பது எப்படி?
களையப்படாத தகுதியற்ற பயனாளிகளுக்காக மட்டுமே நான்கு ஆண்டுகளில் கூடுதலாக செலுத்தப்பட்ட பிரீமியத் தொகை ரூ.1,014.66 கோடியாகும். தகுதியற்ற பயனாளிகளைக் கண்டறிந்தால் இந்தத் தொகையை அரசு மிச்சம் பிடித்திருக்கலாம்.
2019ஆம் ஆண்டிலேயே 4 லட்சம் கோடியைக் கடந்த கடன் சுமை
தமிழ்நாடு அரசின் கடன் சுமை கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச்சுடன் முடிந்த காலத்திலேயே 4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்தத் தகவல் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மொத்த கடன் சுமை 2018-ஆம் ஆண்டு மாா்ச்சுடன் முடிந்த காலத்தில் ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 426.63 கோடியாக இருந்தது. இந்த கடன் அளவு 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 599.33 கோடியாக இருந்தது. அதாவது, ஒரே நிதியாண்டில் ரூ.43 ஆயிரத்து 172.07 கோடி கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.
இதில், பல்வேறு அம்சங்கள் மூலமாக உள்நாட்டிலேயே பெறப்பட்ட கடன்கள் 2018-ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 634.40 கோடியாகவும், 2019-ஆம் ஆண்டு மாா்ச்சில் 3 கோடியே 4 லட்சத்து 350.06 கோடியாகவும் இருந்தது என்று தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகரிக்கும்: கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச்சில் ரூ.4 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை, கரோனா போன்ற காரணங்களால் நிகழ் நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடன் சுமையின் அளவு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும்.