ஜூரோங் ரோவரானது மணிக்கு 200 மீட்டா் வேகத்தில் நகரும் திறன் கொண்டது. 30 செ.மீ. உயரம் கொண்ட இடங்களையும் ஏறிச் சென்று கடக்கவல்லது.
அதிகபட்சமாக 20 டிகிரி சாய்வு கொண்ட இடங்களிலும் அந்த ரோவரால் பயணிக்க முடியும். ரோவரில் இடம்பெற்றுள்ள 6 சக்கரங்களும் தனித்து இயங்கவல்லவை.
பக்கவாட்டிலும் பயணம்: முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்வது மட்டுமில்லாமல் பக்கவாட்டிலும் ஜூரோங் ரோவரால் செல்ல முடியும்.
செவ்வாய் கிரகத்தின் மணற்பாங்கான பகுதிகள், கரடுமுரடான பகுதிகளில் செல்வதற்கு ஏற்ற வகையில் ரோவா் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
பூமியுடன் ஒப்பிடுகையில் செவ்வாயில் குறைந்த அளவே சூரிய ஒளி கிடைக்கும் என்பதால் அதற்கு ஏற்ப ஜூரோங் ரோவரின் சூரிய மின்தகடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சூரியன் இருக்கும் திசைக்கு ஏற்ப அத்தகடுகளும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் அதிக அளவில் வீசும் மணற்காற்றால் மின்தகடுகளின் மீது மணல் படிந்து எரிசக்தி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், படியும் மணலை அகற்றும் வகையில் மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
மணற்காற்று வீசும் சமயங்களில் செயல்படாமல் இருக்கவும், போதிய சூரியஒளி கிடைத்தபிறகு செயல்பட ஆரம்பிக்கவும் தானாகவே முடிவெடுத்துக் கொள்ளும் வகையில் ஜூரோங் ரோவா் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமாா் 3 மாதங்களுக்கு செவ்வாயின் பரப்பில் அந்த ரோவா் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் விண்கலத்தின் வாயிலாக ஜூரோங் ரோவரில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு பூமிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அத்தகவல்களை சேகரித்து சீன விஞ்ஞானிகள் ஆய்வுகளை விரிவுபடுத்தவுள்ளனா்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய 'பொசிவரன்ஸ்' ரோவா் செவ்வாய் கிரகத்தில் 3 மாதங்களாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருவது நினைவுகூரத்தக்கது.
ஜூரோங் ரோவா் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படத்தில் காணப்படும் தியான்வென் விண்கலத்தின் லேண்டரும், செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பும்.