தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமனம்
- புதிதாக திமுக அரசு பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அமைச்சரவை பதவியேற்பை தொடர்ந்து முதல்வரின் செயலாளர்களாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
- மருத்துவத் துறை சிறப்பு அதிகாரியாக பி.செந்தில்குமார், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக ஜெகந்நாதன், தேசிய சுகாதார திட்டக் குழு இயக்குனராக தரேஸ் அகமது, சுகாதார திட்ட இயக்குனராக உமா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996 முதல் 2001 வரை தமிழக அரசு வழக்கறிஞராக பணியாற்றிய சண்முகசுந்தரம், 2002 முதல் 2008 வரை ராஜ்யசபா எம்.பி.யாக பொறுப்பு வகித்தவர்.
தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன் ஆக உயர்த்திய மத்திய அரசு
- பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று தொலைபேசி வாயிலாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா 2 வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் ஆக்சிஜன் அளவை உயர்த்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
- இதனையடுத்து முதல்வரின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்த நிலையில், தற்போது தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளவை 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க 12 பேர் குழு உச்ச நீதிமன்றம் நியமனம்
- நாடு முழுவதும் நாள்தோறும் 4 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
- இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு, மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்து அளிப்பது தொடர்பாக 12 பேர் குழுவை நியமிக்கிறோம்.
- மேற்கு வங்க பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மருத்துவர் பாபாதோஷ் பிஸ் வாஸ், டெல்லி சர் கங்காராம் மருத்துவமனை தலைவர் தேவேந்தர் சிங் ராணா, பெங்களூரு நாராயணா ஹெல்த்கேர் தலைவர் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, தமிழகத்தின் வேலூரில் செயல்படும் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ககன்தீப், வேலூர் மருத்துவ கல்லூரி இயக்குநர் பீட்டர், குருகிராம் மேதாந்தா மருத்துவமனை தலைவர் நரேஷ், போர்டிஸ் மருத்துவமனை இயக்குநர் ராகுல் பண்டிட், டெல்லி சர் கங்காராம் மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் சவுமித்ரா ராவத், டெல்லி ஐஎல்பிஎஸ் மூத்த பேராசிரியர் சிவகுமார், மும்பை பிரிச் கேண்டி, இந்துஜா மருத்துவமனை இதயநோய் மருத்துவர் ஜாரிர் எப் உத்வாடியா மற்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர், கேபினட் செயலாளர் ஆகியோர் குழுவில் இடம்பெறுகின்றனர்.
- அனைத்து மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை நிபுணர் குழு ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக ஆக்சிஜன் பகிர்ந்து அளிக்கப்படும். தற்போதைய ஆக்சிஜன் இருப்பு, விநியோகம், எதிர்கால தேவை குறித்து நிபுணர் குழு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
- ஆக்சிஜன் தேவை, விநியோகம் தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் துணைக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளை 12 பேர் குழு பரிசீலிக்கும். ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு முறையாக சென்று சேர்ந்ததா என்பதை நிபுணர் குழு உறுதி செய்ய வேண்டும்.
- குழுவில் தமிழகம் முதல் டெல்லி வரை பல மாநில மூத்த மருத்துவர்கள் உள்ளனர். இடம்பெற்றுள்ளனர். குழுவில் 10 பேர் மருத்துவர்கள். 2 பேர் அரசு அதிகாரிகள்.
தமிழகத்துக்கு 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே
- கொரோனா நோயாளிகளுக்காக 450 ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் தமிழக முதலமச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது.
- இந்நிலையில் சிஎஸ்கே வழங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நடத்தும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி ரூ.2.22 கோடி நிதியுதவி
- கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு கை கொடுக்கும் விதமாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி (இஐபி) 2,50,000 யூரோ (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.22 கோடி) நிதியுதவியை அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி
- பல்கேரியாவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி மல்யுத்தப்போட்டியின் 50கிலோ பிரிவில் அரையிறுதியில் வென்ற சீமா பிஸ்லா 4வது இந்திய வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.
- பல்கேரியாவின் சோபியா நகரில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று மல்யுத்தப்போட்டி நடக்கிறது. அதில் மகளிர் 50கிலோ எடை பிரிவு அரையிறுதிப் போட்டி நடந்தது.
- அதில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா(29), போலாந்து வீராங்கனை அன்னா லூசியாக்(33) உடன் மோதினார். மொத்தம் 3 சுற்றுகளாக நடந்த போட்டியில் ஆரம்பம் முதலே தற்காப்பு மோதலை கடைபிடித்த சீமா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாக்குதலை நடத்தி புள்ளிகளை குவித்தார்.
- இறுதியில் 2-1 என்ற கணக்கில் அன்னாவை மண்டியிட வைத்தார். அதன் மூலம் சீமா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கூடவே விரைவில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெறும் 4வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை சீமா பெற்றார்.
- இந்திய வீராங்கனைகள் வினேஷ் போகத் (53கிலோ), அன்சு மாலிக் (57கிலோ), சோனம் மாலிக்(62கிலோ) ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்று விட்டனர். ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கு 4 இந்திய வீராங்கனைகள் தகுதிப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
- சோபியாவில் நடைபெறும் போட்டியின் மூலம் இந்திய வீரர் சுமித் மாலிக்(125கிலோ) ஒலிம்பிக் போட்டிக்கு நேற்று முன்தினம் தகுதிப் பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் ரவி தஹியா(57கிலோ), பஜ்ரங் புனியா(65கிலோ), தீபக் புனியா(86கிலோ) ஆகியோர் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு
- தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.மாநில பேரிடர் நிவாரணத்திலிருந்து ரூ.59 கோடியே 30 லட்சத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.
- இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121 நகராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.
- தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ளும் முதல் நிதி ஒதுக்கீடு ஆகும்.
தமிழக சட்டப்பேரவை முன்னவராக துரைமுருகன் நியமனம்
- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
- இந்நிலையில் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில் சட்டப்பேரவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அதிமுக 65 இடங்களை பிடித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.
- ஆளும் கட்சியாக உள்ள திமுகவுக்கு அவை முன்னவர் பதவி வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை முன்னவராக துரைமுருகனை நியமனம் செய்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.