சீனாவின் 'சைனோஃபாா்ம்' தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
- சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது.
- அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
- ஒரு நாடு எந்த தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாலும் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற்றே பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலுக்கு மூல காரணமாக விளங்கிய சீனாவும் சைனோஃபாா்ம் என்ற தடுப்பூசியை தயாரித்தது.
- ஆனால் இந்த தடுப்பூசிக்கு உலக காதார அமைப்பு ஒப்புதல் கிடைக்க தாமதமானதால் பல்வேறு நாடுகள் இதனை பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் சைனோஃபாா்ம் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனவை தடுப்பதில் இந்த தடுப்பூசி 79 சதவீதம் செயல்திறன் மிக்கது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் நியமனம்
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முனைவர் கோவி.செழியன், திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருவிடைமருதூர் தனி தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கோவி.செழியன் என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டி இந்தியாவிற்கு ஐ.நா உதவி
- இந்தியாவுக்கு, ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனம், ஐ.நா., சிறார் நல நிதியம், ஐ.நா., மக்கள் தொகை நிதியம் ஆகியவை, 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளன.
- அத்துடன், ஒரு கோடி முக கவசங்கள், சுகாதார பணியாளர்களுக்கான, 15 லட்சம் முக கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், ஆக்சிஜன் உற்பத்தி பிரிவுகளையும் வழங்கியுள்ளன.
- கொரோனா தடுப்பூசியின் வீரியத்தை பாதுகாக்கும், குளிர்சாதன பெட்டிகளையும் அளித்துள்ளன.கொரோனா வைரஸ் ஆய்வு சாதனம், பரிசோதனை பொருட்கள், விமான நிலையங்களில் தட்பவெப்ப சோதனை இயந்திரங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளன.
- பல இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
தமிழகத்தின் 13வது முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு
- தமிழகத்தின், 13வது முதல்வராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று பதவியேற்றார். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' எனக்கூறி, பதவிப் பிரமாணம் எடுத்தார்.
- தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.10 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வரைத் தொடர்ந்து, 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' புதிய துறை உருவாக்கம் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமனம்
- 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' புதிய துறை உருவாக்கம் செய்து, அந்த துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாரம் செய்தார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் குறைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்று கூறினார்.
- மேலும் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக போடும் வகையில் பெட்டி ஒன்றை பிரசாரத்தில் வைத்தார். இந்த பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின், இந்த பெட்டியில் போடப்படும் மனுக்களை அந்தந்த துறையிடம் ஒப்படைத்து 100 நாட்களில் குறைகள் தீர்க்கப்படும்.
தமிழக தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமனம்
- அண்ணா மேலாண்மை நிலையத்தின் தலைமை இயக்குனராக பதவி வகித்து வந்த டாக்டர் வெ.இறையன்பு ஐஏஎஸ் தமிழக தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தற்போது தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் 1963ல் இறையன்பு பிறந்தார்.
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார்: கவர்னர் தமிழிசை பதவி பிரமாணம்
- புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்கள், பா.ஜ 6 இடங்கள் என பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த 3ம் தேதி என்.ஆர்.காங். சார்பில் சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார்.
- இதைத்தொடர்ந்து, கவர்னர் மாளிகை வளாகத்தில் முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழிலேயே பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து
- முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகம் வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய கோப்புகளில் முதல் கையெழுத்து போட்டார்.
- கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களை போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ரூ.4,000 வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,153.39 கோடி செலவில் ரூ.2,000 வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கப்படும்.
- மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் வருகிற 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்யப்படும்.
- தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை (இன்று) முதல் பயணம் செய்யலாம். இதன்மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு தொகையான ரூ.1,200 கோடியை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.
- தேர்தல் பிரசாரத்தின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்களை பெற்று, அந்த மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு ஐஏஎஸ் அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலை குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கப்படும். இதன்படி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகை முதல் கையெழுத்திட்டாா் முதல்வா் ரங்கசாமி
- புதுவை மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரம் முதியோா் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைக்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டாா்.
- தொடா்ந்து, நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள 2 மாதங்களுக்கான இலவச அரிசித் திட்டத்துக்கான நிதி, புதுவை கல்லூரி மாணவா்களுக்கான நிலுவையில் உள்ள சென்டாக் கல்வி உதவித்தொகை வழங்குதல் ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினாா்.
நாடுமுழுவதும் ஆயஷ் 64 மற்றும் கபசுரக் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் தொடக்கம்
- கோவிட் - 19 தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பெருவாரியான கொரோனா நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் வழங்கும் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
- இந்த இரண்டு மருந்துகளும் சிறப்பாகச் செயல்படுவதாக பலதரப்பட்ட மருத்துவச் சோதனைகளில் தெரியவந்துள்ளதாகவும், அதனாலேயே இத்திட்டத்தை தொடங்கியிருப்பதாகவும் தெரிகிறது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு) மத்திய ஆயுஷ் அமைச்சருமான (கூடுதல் பொறுப்பு) கிரண் ரிஜிஜு, இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.