டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி முதன்முறையாக 4 பேர் தகுதி பெற்று சாதனை
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்று பாய்மர படகு போட்டி ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக் கான லேசர் ரேடியல் பிரிவில் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன் 30 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த பட்டியலில் 2-வது இடம் பிடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- இந்நிலையில் ஆடவருக்கான லேசர் ஸ்டாண்டர்டு கிளாஸ் பிரிவில் இந்தியாவின் விஷ்ணு சரணவன் ஒட்டுமொத்தமாக 53 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடம் பிடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- இதைத் தொடர்ந்து 49இஆர் கிளாஸ் பிரிவில் இந்தியாவின் கணபதி செங்கப்பா, வருண் தக்கார் ஜோடி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
- இதற்கு முன்னர் பாய்மர படகு போட்டியில் அதிகபட்சமாக 2 இந்தியர்கள், 4 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஆனால் இவர்கள் ஒரே பிரிவு போட்டியில்தான் கலந்து கொண்டனர்.
- இந்தியாவின் பரோக் தாராபூர், துருவ் பண்டாரி ஆகியோர் 1984 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். தொடர்ந்து 1988 ஒலிம்பிக்கில் பரோக் தாராபூர், கெல்லி ராவ் கலந்து கொண்டனர். 1992 ஒலிம்பிக்கில் பரோக் தாராபூர், சைரஸ் காமா ஆகியோரும், 2004 ஏதன்ஸ் ஒலிம்பிக்கில் மலாவ் ஷிராஃப், சுமித் படேல் ஆகியோரும் பங்கேற்றனர்.
- இதில் மலாவ், ஸ்மித் ஆகியோர் 49இஆர் கிளாஸ் ஸ்கிஃப் பிரிவில் கலந்து கொண்டனர். மற்ற அனைவரும் 470 கிளாஸ் பிரிவு போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
ஏப்.11 முதல் 14ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா
- கொரோனா தடுப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, 'அனைத்து சவால்களும் இருந்த போதிலும் முன்பைவிட சிறந்த அனுபவமும், வளமும் நம்மிடம் உள்ளன.
- 70 சதவீதம் ஆர்.டி-பிசிஆர் பரிசோதனை என்பது இலக்காக இருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பரவுவதை தடுக்க கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு என்பது சிறந்த வழியாக இருக்கும்.
- நோயாளிகள் பற்றிய விரிவான தரவு நம்மிடம் இருந்தால் உயிர்களைக் காப்பாற்ற அது உதவும். இரவு நேர ஊரடங்கை இரவு 9 மணி முதல் காலை 5 அல்லது 6 மணி வரை அமல்படுத்துவது நல்லது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
- கொரோனா தொடர் எச்சரிக்கைக்கு ஏற்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தைய பயன்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
ஜி.டி.பி.,க்கு நிகரான கடன் குறையும் - பன்னாட்டு நிதியம்
- 'இந்தியாவில், 'ஜி.டி.பி.,' எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன் உயர்ந்துள்ள போதிலும், மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் காரணமாக, அது குறையும்' என, பன்னாட்டு நிதியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- கொரோனா தாக்கத்தால், 2019 டிச., - 2020 டிச., வரையிலான ஓராண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன், 74 சதவீதத்தில் இருந்து, 90 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது மிகவும் அதிகம் தான். பணக்கார, வளரும் நாடுகளிலும் இத்தகைய உயர்வு காணப்படுகிறது.
- ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதால், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன், விரைவில், 80 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் துணை புரியும்.
- அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் தொடர முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த ஆண்டு பட்ஜெட், அனைத்து தரப்பினர் நலனையும் உள்ளடக்கியதாக உள்ளது.
- அதேசமயம், பொது நிதிச் செயல்பாடுகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை, மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு, நம்பகத்தன்மையுள்ள இடைக்கால நிதிச் செயல்பாட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும்.