சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் என்.வி.ரமணா
- உச்ச நீதிமன்றதலைமை நீதிபதியாக உள்ள, எஸ்.ஏ.பாப்டே, வரும், 23ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி, என்.வி. ரமணாவின் பெயரை, அவர் பரிந்துரைத்திருந்தார்.
- அது ஏற்கப்பட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, நீதிபதி, என்.வி. ரமணா நியமிக்கப்படுவதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மரபுபடி, பிரதமரின் முதன்மைச் செயலர், பி.கே. மிஸ்ரா, சட்டத் துறை செயலர் பரூன் மித்ரா ஆகியோர், நியமன உத்தரவை, நீதிபதி ரமணாவிடம் ஒப்படைத்தனர்.
- வரும், 24ம் தேதி, நாட்டின், 48வது தலைமை நீதிபதியாக, ரமணா பதவியேற்க உள்ளார். வரும், 2022, ஆக., 26 வரை, அவர் இந்தப் பதவியில் இருப்பார்.
- ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், பொன்னாவரம் கிராமத்தில் பிறந்த ரமணா, 1983ல், வழக்கறிஞராக பணியாற்றினார். ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2000ல் நியமிக்கப்பட்டார். அங்கு, 2013ல், பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார்.
- பின், டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2014ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவை நீக்கியது தொடர்பான வழக்கு, 'தகவல் அறியும் சட்டம், தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் பொருந்தும்' என்ற வழக்கு உள்ளிட்ட, பல முக்கிய வழக்கில் தீர்ப்பு அளித்த அமர்வில், இவர் இடம்பெற்று இருந்தார்.
பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம்
- தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தவழக்குகளை விசாரிக்க டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு உருவாக்கப்பட்டது.
- அதன்தொடர்ச்சியாக சென்னை கொல்கத்தா, புணே, போபால் ஆகிய இடங்களிலும் மண்டல அமர்வுகள் தொடங்கப்பட்டன. இவற்றுக்கு நீதித்துறை உறுப்பினராக நியமிக்க தமிழகத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் பெயர்களை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகம் கருத்துரு அனுப்பியது.
நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளரும் ஐ.எம்.எஃப். கணிப்பு
- உலக வங்கியின் வருடாந்திர மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டின் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 12.5 சதவீதம் அதிகரிக்கும். இது, அடுத்த நிதியாண்டில் 6.9 சதவீதம் அதிகரிக்கும்.
- கடந்த ஆண்டு கரோனா பரவலால் பாதிப்புகள் இருந்தபோதிலும், சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளா்ச்சி அடைந்தது.
- நடப்பு நிதியாண்டில் அது, 8.6 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 5.6 சதவீதமாகவும் இருக்கும். நடப்பு நிதியாண்டில் சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் முதல் கூட்டம்
- பிரிக்ஸ் நாடுகளின் முதல் கூட்டம் தலைநகர் டெல்லியில் கணொலி மூலம் நடைபெற்றது. பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டம் தலைநகர் டெல்லியில் கணொலி மூலம் இந்தியா நடத்தியது.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கணொலி மூலம் பங்கேற்றனர்.
- இதில் உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம், புதிய மேம்பாட்டு வங்கி, சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்கள், பிரிக்ஸ் பத்திர நிதி மற்றும் பிரிக்ஸ் விரைவான தகவல் பாதுகாப்பு சேனல் போன்றவை விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.