எண்ணெய், எரிவாயு சேமிப்பு விழிப்புணர்வு தமிழகத்துக்கு தேசிய அளவில் விருது
- எண்ணெய், எரிவாயு சேமிப்புகுறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய செயல் திறன் விருது கிடைத்துள்ளது
- மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2020-ம் ஆண்டு, 'சக்ஷம்' என்றபெயரில் எரிபொருள் சிக்கனம் குறித்து ஒரு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை எண்ணெய் நிறுவனங்கள் நடத்தின.
- இதில், எரிபொருள் சிக்கனம் குறித்து கடந்த ஆண்டில் அதிகஅளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய அளவிலான சிறந்த செயல் திறன் விருது வழங்கப்பட்டு உள்ளது.
- கடந்த மாதம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், இந்தியன்ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி.ஜெயதேவன் விருதைப் பெற்றுக் கொண்டனர்.
கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021
- டெல்லியில் கடல்சார் இந்தியா உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்து பேசினார்.
- இந்தியா கடல்சார் துறையில் இயற்கையாகவே பெரிய தலைவராக திகழ்கிறது. நமது நாடு வளமான கடல்சார் வரலாற்றைப் பெற்றிருக்கிறது. நமது கடற்கரைகளில் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கிறது.
- பல்லாயிரம் ஆண்டுகளாக நமது துறைமுகங்கள் முக்கிய வர்த்தக மையங்களாக விளங்கின. நமது கடற்கரைகள், நம்மை உலகுடன் இணைத்துள்ளன. இந்த கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டின்வழியே, இந்தியாவுக்கு வந்து நமது முன்னேற்றத்தின் ஒரு அங்கமாக ஆகும்படி உலக நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு நான் அழைப்பு விடுக்க விரும்புகிறேன்.
- இந்தியா கடல்சார் துறையில் வளர்ச்சி காண வேண்டும், உலகின் முன்னணி நீல பொருளாதாரமாக உருவாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
- அந்த வகையில், தற்போதைய உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், புதிய தலைமுறை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சீர்திருத்த பயணத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்துகிறது.
- இந்த நடவடிக்கைகளின் வாயிலாக நமது சுயசார்பு இந்தியா என்னும் பார்வைக்கு நாம் பலம் சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம். 2014-ம் ஆண்டு இந்தியாவில் முக்கிய துறைமுகங்களின் திறன், 870 மில்லியன் டன்களாக இருந்தது. தற்போது அது ஆண்டுக்கு 1550 மில்லியன் டன் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.
- இந்த முன்னேற்றம், நமது துறைமுகங்களுக்கு உதவுவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கிறது. நமது துறைமுகம், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம், முதலீட்டுக்கான 400 திட்டங்களின் பட்டியலை உருவாக்கி உள்ளது. இந்த திட்டங்கள், 31 பில்லியன் டாலர் அல்லது ரூ.2.25 லட்சம் கோடி முதலீட்டு திறனை கொண்டுள்ளன. நமது கடல்சார் துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சி காண வேண்டும் என்ற நமது உறுதிக்கு இது மேலும் பலம் சேர்க்கும்.
- 'இந்தியா கடல்சார் பார்வை 2030' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசின் முன்னுரிமைகளை கோடிட்டுக்காட்டுகிறது. மெர்கண்டைல் கடல்பிரதேச விழிப்புணர்வு மையமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகடல்சார் பாதுகாப்பு, தேடல், மீட்பு திறன், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை அதிகரிப்பதற்கான தகவல் அமைப்பு ஆகும்.
- சாகர்மாலா திட்டத்தின்கீழ் துறைமுகங்களை பிரதானமாக கொண்ட வளர்ச்சியை மேம்படுத்துற்கு 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய துறைமுகங்களில் 574-க்கும் மேற்பட்ட திட்டங்களை 82 பில்லியன் டாலர் அல்லது ரூ.6 லட்சம் கோடியில் 2015-2035 ஆண்டு கால கட்டத்தில் செயல்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது.
- 2030-க்குள் 23 நீர்வழிகளை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு நீர்வழிகளில் எங்கள் அரசு முதலீடு செய்கிறது.
- உள்நாட்டு நீர்வழிகள், குறைந்த செலவிலானவை, சரக்குகளை கொண்டு செல்வதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. இந்திய கடற்கரையோரத்தில் உள்ள 189 கலங்கரை விளக்கங்களில் 78-க்கு அருகில் உள்ள நிலத்தில் சுற்றுலாவை மேம்படுதுதுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டள்ளன.
- உள்நாட்டில் கப்பல் கட்டுவதிலும், கப்பல் பழுதுபார்க்கும் சந்தையிலும் இந்தியா கவனம் செலுத்துகிறது. உள்நாட்டில் கப்பல் கட்டுவதை ஊக்குவிப்பதற்காக இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்காக கப்பல் கட்டும் நிதி உதவி கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.
- 2022-ம் ஆண்டுக்குள் இரு தரப்பிலும் கப்பல் பழுதுபார்க்கும் திரள்கள் உருவாக்கப்படும். கழிவில் இருந்து செல்வத்தை உருவாக்கும் விதமாக உள்நாட்டு கப்பல் மறுசுழற்சி துறை உருவாக்கப்படும். இந்தியா, கப்பல் மறுசுழற்சி சட்டம், 2019-ஐ இயற்றி இருக்கிறது.
- இந்தியாவின் நீண்ட கடற்கரை உங்களுக்காக (பன்னாட்டு முதலீட்டாளர்களுக்காக) காத்திருக்கிறது. இந்தியாவின் கடின உழைப்பாளி மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். இந்தியா உங்கள் விருப்பத்துக்கு உரிய தொழில் இடமாக இருக்கட்டும். உங்கள் துறைமுகங்களில் முதலீடு செய்யுங்கள்.
13 அரசு நிறுவனங்களை இணைத்து டெல்லி திறன், தொழில் முனைவோர் பல்கலைக்கழகம்
- டெல்லியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் திறன் கல்வியை சீராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி பல்கலைக்கழக கலைக் கல்லூரி மற்றும் டெல்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றை இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இனி இவை இணைப்புக்கு பின்னர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக செயல்படும்.
- இணைக்கப்படும் நிறுவனங்களில் 10 அரசு தொழில்நுட்ப நிறுவனங்கள், டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் டூல் இன்ஜினியரிங் (வஜீர்பூர் மற்றும் ஓக்லா வளாகம்) மற்றும் கோவிந்த் பல்லப் பந்த் பொறியியல் கல்லூரி ஆகியவை அடங்கும்.
- இதுதவிர, மாணவர்களுக்கு திறன் வாய்ப்பை வழங்குவதற்காகவும், புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் அவர்களின் வேலை வாய்ப்புகளை உயர்த்துவதற்காகவும் புஷ்ப் விஹாரில் அரசாங்கத்தின் புதிய உலகத் தரம் வாய்ந்த திறன் மையத்தை நிறுவுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதற்காக புதிய மையத்திற்கு அமைச்சரவை ₹ 9.9 கோடியை ஒதுக்க அனுமதி வழங்கியது. டெல்லி முழுவதும் 25 உலகத்தரம் வாய்ந்த திறன் மையங்களை நிறுவுவது அரசாங்கத்தின் தொலைநோக்கின் ஒரு பகுதியாகும்.