தேசிய திரைப்பட விருதுகள் 2019 / NATIONAL FILM AWARD 2019
TNPSCSHOUTERSMarch 23, 2021
0
சிறந்த திரைப்படங்களையும், திரைப்பட துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில், ஆண்டு தோறும், தேசிய திரைப்பட விருதுகளை, மத்திய அரசு வழங்கி வருகிறது.
கடந்த, 2019ம் ஆண்டிற்கான விருதுகள், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆண்டு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், டில்லியில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 2019ம் ஆண்டிற்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை, நடிகர் மோகன்லால் நடிப்பில், விரைவில் வெளியாக உள்ள மலையாள படமான, மரக்கர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் திரைப்படம் தட்டிச் சென்றது.
சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது, வெற்றிமாறன் இயக்கிய, அசுரன் படத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதேபோல், சிறந்த ஹிந்தி திரைப்படத்திற்கான விருது, சிச்சோரே படத்திற்கும்; சிறந்த மலையாள படத்திற்கான விருது, கள்ள நோட்டம் படத்திற்கும்.
சிறந்த தெலுங்கு படத்திற்கான விருது, ஜெர்சி படத்திற்கும்; சிறந்த கன்னட திரைப்படத்திற்கான விருது, அக்ஷி படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பார்த்திபன் இயக்கிய, ஒத்த செருப்பு சைஸ் - 7 திரைப்படம், சிறப்பு ஜூரி விருதையும், சிறந்த ஒலிப்பதிவுக்கான விருதையும் தட்டிச் சென்றது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது, அசுரன் படத்தின் கதாநாயகன் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை, போன்ஸ்லே ஹிந்தி படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயுடன், தனுஷ் பகிர்ந்துள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருது, மணிகர்ணிகா மற்றும் பங்கா ஹிந்தி படங்களில் நடித்த கங்கனா ரணாவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனருக்கான விருது, பகத்தர் ஹூரெய்ன் என்ற ஹிந்தி படத்தை இயக்கிய சஞ்சய் பூரன் சிங் சவுகானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, விஸ்வாசம் படத்திற்காக, இமானுக்கு அறிவிக்கப்பட்டது.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு, சிறந்த துணை நடிகருக்கான விருதும்; கே.டி., படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.