புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி ஆயோக் தரப் பட்டியலில் 3-வது இடத்தில் தமிழகம்
- புதிய கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியல் விதிமுறைகளின்படி இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 3 வகைகளாகப் பிரித்து அவற்றை ஆய்வு செய்து நிதி ஆயோக் அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி 2020-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
- நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் சிஇஓஅமிதாப் கந்த் இதனை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் 5 மாநிலங்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கேரளா ஆகியவை இடம் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பிஹார் ஆகிய 3 மாநிலங்களும் பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.
- புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்து மாநிலங்களின் ஈடுபாடு, அவற்றின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- மேலும் இந்த அறிக்கையில் மாநிலங்களின் கொள்கை சார்ந்த பலம் மற்றும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி உள்ளது. இதன் மூலம் மாநிலங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நிதி ஆயோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
- அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியை அறுவடை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெற்றது.
- தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு விழா தொடங்கியது. இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் முதலில் துணை அதிபராக பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அமெரிக்காவில் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.
ஷாஹீன் - 3 அணு ஏவுகணை சோதனை
- பாகிஸ்தானில் தரைப்பகுதியில் இருந்து 2750 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு பகுதியை தாக்கும் அணு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
- ஷாஹீன் - 3 என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.அணு ஆயுதங்கள் உட்பட வெடி பொருட்களுடன் இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையில் கூடுதல் தொழில்நுட்பங்கள் இணைக்கப்படும் என ராணுவம் கூறியுள்ளது.
- ஏவுகணையை வடிவமைத்த விஞ்ஞானிகளுக்கு அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
பூடான், மாலத்தீவுகளுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைப்பு
- நாட்டில் கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
- இத்தகைய சூழலில், பூடான், மாலத்தீவுகளுக்கு அனுப்பப்பட்ட கரோனா தடுப்பூசிகள் அந்நாடுகளைப் புதன்கிழமை சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
- சீரம் மையத்தால் தயாரிக்கப்பட்ட 1.5 லட்சம் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை பூடானுக்கும், 1 லட்சம் தடுப்பூசிகளை மாலத்தீவுகளுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. அனைத்து நாடுகளுக்கும் தேவையான மருந்துகளை இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.
- உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவிய காலகட்டத்தில், அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ரெம்டெசிவிா், பாராசிட்டாமல் மாத்திரைகள், முகக் கவசங்கள், கையுறைகள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்டவற்றை மற்ற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது.