யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓர்ச்சா
- ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலக அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. யுனெஸ்கோ பாரம்பரிய நகரப் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் மூலம் குவாலியர், ஓர்ச்சா நகரங்களின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்.
- யுனெஸ்கோவின் அங்கீகாரத்துக்குப்பின், யுனெஸ்கோவும், மாநில சுற்றுலாத் துறையும் இணைந்து இந்த இரு நகரங்களையும் மேலும் அழகுபடுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும்.
- அடுத்த ஆண்டு யுனெஸ்கோ குழு மத்திய பிரதேசத்துக்கு வருகை தந்து, இந்த பாரம்பரிய சொத்துகளைப் பார்த்த பிறகு அவற்றின் வளர்ச்சி, பாதுகாப்புக்கான திட்டத்தைத் தயாரிக்கும் என்றார்.
- குவாலியர் கோட்டை 9 - ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். இந்த ராஜ்ஜியத்தை குர்ஜார் பிரதிஹார் ராஜ்வன்ஷ், தோமர், பாகேல் கச்வாஹா, சிந்தியா ஆகியோரால் ஆளப்பட்டது. அவர்கள் விட்டுச் சென்ற நினைவுச்சின்னங்கள், கோட்டைகளிலும், அரண்மனைகளிலும் இன்றும் ஏராளமாகக் காணப்படுகின்றன.
- குவாலியர் நகரம், அரண்மனைகள், கோயில்களுக்கு பெயர் பெற்றதாக உள்ளது. இங்குள்ள சாஸ் பாஹு கா கோயில் அரிய வகையில் செதுக்கப்பட்ட கட்டுமானக் கலைக்கு உதாரணமாக விளங்குகிறது.
- குவாலியர் கோட்டை நகரத்தில் சமணர் சிலைகளும், உயரமான கோட்டைச் சுவர்களும் உள்ளன. 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குஜாரி மகால் அரண்மனை தொல்பொருள் அருங்காட்சியகமாகக் காட்சியளிக்கிறது.
- இதேபோல ஓர்ச்சா நகரத்திலுள்ள கோயில்களுக்கும் அரண்மனைகளும் பிரபலமானவை. 16 ஆம் நூற்றாண்டில் புண்டேலா ராஜ்ஜியத்தின் தலைநகராக ஓர்ச்சா திகழ்ந்தது.
- இங்குள்ள ராஜ் மகால், ஜஹாங்கிர் மகால், ராம்ராஜா கோயில், ராய் பிரவீண் மகால், லட்சுமிநாராயண் கோயில் ஆகியவை இந்த நகரத்தின் புகழ்பெற்ற இடங்களாக விளங்குகின்றன.
தமிழகம் - பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தலைமை செயலகத்தில், தமிழ்நாடு மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே பொருளாதார உறவினை பலப்படுத்திடவும், பிரான்ஸ் நிறுவனங்களுக்காக தமிழ்நாட்டை ஒரு முதலீட்டு தளமாக தேர்ந்தெடுத்து, அதன்மூலம் விநியோக அமைப்புகளை பலப்படுத்திடவும் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு வழிகாட்டு நிறுவனத்திற்கும், இந்திய பிரான்ஸ் வர்த்தக சபைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு வழிகாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல், இந்திய பிரான்ஸ் வர்த்தக சபை சார்பில் அதன் துணை தலைவர் ஜோயல் வெரானி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
உலக சுகாதார நிறுவன அறக்கட்டளை தலைமை நிர்வாகியாக இந்தியர் அனில் சோனி நியமனம்
- உலக சுகாதார நிறுவனத்தின் அறக்கட்டளை வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிறுவப்பட உள்ளது. இதற்கு தலைமை நிர்வாகியாக இந்தியரான அனில் சோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
- 20 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் வாய்ந்த அனில் சோனி, பல அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணி புரிந்த பணிபுரிந்துள்ளார்.
- இந்த அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய மற்றும் நடுத்தர பொருளாதாரம் கொண்ட நாடுகளுக்கு உதவ உலக சுகாதார நிறுவனத் தலைமை முடிவெடுத்துள்ளது.
- ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த அறக்கட்டளை வரும் 2023-ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. அனில் சோனி வியாடிரஸ் எனும் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது எச்ஐவி-க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளார்.
- மேலும் கிளின்டன் ஹெல்த் ஆக்சிஸ் இனிஷியேடிவ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். மலேரியா, டியூபர்குளோஸிஸ் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க இவர் நிதி திரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முன்னதாக அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸின் தொண்டு நிறுவனமான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக்ரா மெட்ரோ திட்டத்தின் கட்டுமான பணியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
- உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் மெட்ரோ ரயில் திட்டம் இரு வழித் தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. ஆக்ரா மக்களுக்கும், ஆண்டுதோறும் அங்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.
- இந்தத் திட்டத்தின் கீழ் தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவுப் போக்குவரத்தை அளிக்கும், ரூபாய் 8,379.62 கோடி மதிப்பிலான இந்த மெட்ரோ ரயில் திட்டம், 5 ஆண்டுகளில் நிறைவடையும். இத்திட்டத்தின் கட்டுமானப் பணியை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு & புள்ளி விவரம் சேகரிக்க ஆணையம் அமைத்தது தமிழக அரசு
- தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
- அதன், அடிப்படையிலும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
- இதனை, எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களை பெறுவதற்காகவும், தற்போதைய நிலவரப்படியான சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 1ம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
- இந்த உத்தரவைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விபரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அதன் அடிப்படையில் புள்ளி விபரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஹ.குலசேகரன் அவர்களின் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியையும் துவக்கும். மேலும், சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கப்படும் என்று இந்த அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.