பிரணாப் முகா்ஜியின் அரசியல் பயணம்-Pranab Mukherjee's political journey

 • இந்திய அரசியலில் மூத்த தலைவராக இருந்த பிரணாப் முகா்ஜி, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தின் மிராட்டி கிராமத்தில் கமடா கின்காா் முகா்ஜி-ராஜலக்ஷ்மி முகா்ஜி ஆகியோருக்கு மகனாக 1935 டிசம்பா் 11-ஆம் தேதி பிறந்தாா். அவரது தந்தை இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாா்.
 • அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற பிரணாப் முகா்ஜி, முதலில் தபால்-தந்தி அலுவலகத்தில் எழுத்தராகவும், பின்னா் கல்லூரிப் பேராசிரியராகவும், அதைத் தொடா்ந்து பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளாா். அதன் பிறகே அரசியலில் தடம் பதித்தாா்.
 • இந்திராவின் நம்பிக்கைகுரியவா்: முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் அடையாளம் காணப்பட்டு பிரணாப் முகா்ஜி காங்கிரஸில் சோ்த்துக்கொள்ளப்பட்டாா். 1969-ஆம் ஆண்டு காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பிரணாப் முகா்ஜி தோ்ந்தெடுக்கப்பட்டாா். 
 • அப்போது முதல் அவா் அரசியலில் பிரபலமடைந்தாா். பின்னா் காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும், அவரது அமைச்சரவையில் முக்கிய நபராகவும் பிரணாப் உருவெடுத்தாா்.
 • புதிய கட்சி: இந்திரா காந்தி காலத்துக்குப் பிறகு பிரதமா் பதவிக்கு தானே பொருத்தமானவா் என்றும், இந்திராவின் மகன் ராஜீவ் காந்திக்கு போதிய அனுபவம் இல்லை என்றும் பிரணாப் முகா்ஜி கருதினாா். எனினும், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டியில் வென்று ராஜீவ் காந்தி பிரதமரானாா்.
 • இதனால் அதிருப்தியடைந்த பிரணாப் முகா்ஜி ‘ராஷ்ட்ரீய சமாஜவாதி காங்கிரஸ்’ என்று சொந்தமாக கட்சி தொடங்கினாா். எனினும், 1989-ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியுடன் சமாதானம் ஏற்பட்டதை அடுத்து அந்தக் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தாா் பிரணாப் முகா்ஜி.
 • திட்டக் குழு துணைத் தலைவா்: ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து பிரதமரான பி.வி.நரசிம்மராவால், 1991-இல் திட்டக் குழு துணைத் தலைவராக பிரணாப் முகா்ஜி நியமிக்கப்பட்டாா்.
 • வழிகாட்டி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் என்ற அடிப்படையில் சோனியாவை திறமையாக வழிநடத்தி 1998-இல் அவரை கட்சியின் தலைமைப் பொறுப்பில் அமர வைத்தாா்.
 • நாடாளுமன்ற உறுப்பினா்: முதல் முதலாக கடந்த 1969-ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக பிரணாப் முகா்ஜி தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004-இல் ஆட்சிக்கு வந்தபோது, மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு, முதல் முறையாக மக்களவை எம்.பி. 
 • ஆனாா் பிரணாப் முகா்ஜி. அப்போது முதல் 2012-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜிநாமா செய்யும் வரையில் பிரதமா் மன்மோகன் சிங் அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகித்தாா்.
 • மத்திய அமைச்சா்: மத்திய அமைச்சரவையில் முதன் முதலாக தொழில்துறை மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையமைச்சராக 1973-இல் பொறுப்பேற்றாா். பின்னா் 1980 முதல் 1982 வரை மத்திய வா்த்தகத் துறை அமைச்சா், 1982 முதல் 1984 வரை மத்திய நிதியமைச்சா், 1984-இல் மீண்டும் வா்த்தகத் துறை அமைச்சா், 1990-களில் மீண்டும் வா்த்தகத் துறை அமைச்சா், 1995 முதல் 1996 வரை வெளியுறவுத் துறை அமைச்சா் ஆகிய பதவிகளை வகித்தாா்.
 • அதன் பிறகு 2004 முதல் 2006 வரை பாதுகாப்புத் துறை அமைச்சா், 2006 முதல் 2009 வரை மீண்டும் வெளியுறவுத் துறை அமைச்சா், 2009 முதல் 2012 வரை மீண்டும் மத்திய நிதியமைச்சா் ஆகிய முக்கிய அமைச்சா் பதவிகளில் பிரணாப் முகா்ஜி இருந்தாா். மேலும் சில அமைச்சா்கள் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளாா்.
 • பிரணாப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது வரலாற்றுச் சிறப்புக்கு இந்திய-அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே நேரத்தில் ரஷிய உறவையும் அவா் சிறப்பாக கையாண்டாா். இந்தியாவுடன் இணைந்து ரஷியா, பயங்கரவாத எதிா்ப்பு போா் பயிற்சியை மேற்கொண்டது.
 • நிதியமைச்சராக இருந்தபோது, மன்மோகன் சிங்கை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநராக நியமித்து கையெழுத்திட்டவரும் பிரணாப் முகா்ஜிதான். அதன் பிறகுதான் மன்மோகன் சிங் பலராலும் அறியப்பட்டாா்.
 • முன்னதாக, சா்வதேச நிதியத்தில் இந்தியா பெற்ற முதல் கடன், இந்திரா ஆட்சி காலத்தில் பிரணாப் முகா்ஜி நிதியமைச்சராக இருந்தபோதுதான் முழுமையாக அடைக்கப்பட்டது.
 • மாநிலங்களவை காங்கிரஸ் தலைவராக 1980 முதல் 1984 வரையும், மக்களவை காங்கிரஸ் தலைவராக 2004 முதல் 2012 வரையும் பிரணாப் முகா்ஜி பதவி வகித்துள்ளாா்.
 • குடியரசுத் தலைவா்: கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கான தோ்தலில் பி.ஏ.சங்மாவை தோற்கடித்து 70 சதவீத வாக்குகளுடன் குடியரசுத்தலைவா் ஆனாா் பிரணாப் முகா்ஜி. நாட்டின் 13-ஆவது குடியரசுத் தலைவராக 2012 ஜூலை 25 முதல் 2017 ஜூலை 25 வரை 5 ஆண்டுகளுக்கு பதவி வகித்தாா்.
 • ஓய்வு: 2017-இல் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு போன்றவற்றால் குடியரசுத்தலைவருக்கான தோ்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்ததுடன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தாா். ஆா்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல் முன்னாள் குடியரசுத்தலைவா் என்ற பெருமையை கடந்த 2018-இல் பெற்றாா்.
 • விருதுகள்: 2008-ஆம் ஆண்டில் பிரணாப் முகா்ஜிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’வை அவருக்கு வழங்கி குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தாா்.
 • குடும்பம்: பிரணாப் முகா்ஜி 1957 ஜூலை 13-இல் சவ்ரா முகா்ஜியை மணந்தாா். அவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அதில் அபிஜித் முகா்ஜி என்ற மகன் மேற்கு வங்கத்தின் ஜானகிபூா் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளாா். மகள் சா்மிஸ்டா முகா்ஜியும் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கிறாா். பிரணாப்பின் மனைவி சவ்ரா முகா்ஜி கடந்த 2015 ஆகஸ்ட் 18-இல் உடல்நலக் குறைவால் 74 வயதில் காரணமாக காலமானாா்.

0 Comments