மலபார் கடற்பயிற்சி ஒத்திகை 2020
- ஆண்டுதோறும் பல்வேறு நட்பு நாடுகளின் கடற்படை கப்பல்கள் ஒத்துழைப்புடன் இந்திய கடற்படை கூட்டு போர் பயிற்சியை நடத்துவது வழக்கம்.
- அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களுடன் இந்தியா கூட்டு போர் பயிற்சியை தொடங்கியது. இந்தப் பயிற்சிக்கு மலபார் கடற்பயிற்சி ஒத்திகை என பெயரிடப்பட்டுள்ளது.
- வங்கக் கடலில் மலாக்கா நீரிணை அருகே இந்தப் பயிற்சி அதிகாலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து அரபிக் கடலிலும் இதேபோன்ற போர் பயிற்சி ஒத்திகையை நடத்த இந்த 4 நாடுகளும் முடிவு செய்துள்ளன.
- இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், அமைதியை பராமரித்து, சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இணைந்து, 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் முதன் முறையாக கூட்டுபோர் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த பயிற்சியின்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உட்பட 5 கப்பல்கள் பங்கேற்றன. அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பல், ஆஸ்திரேலியாவின் பல்லாரட் பிரிகேட் கப்பல், ஜப்பானின் பிரம்மாண்ட போர்க்கப்பல் ஆகியவை பங்கேற்றதாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல் கட்ட போர் பயிற்சி ஒத்திகை நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து இந்திய, அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும்.
- இரண்டாவது கட்ட பயிற்சி, அரபிக் கடலில், நவம்பர் 17 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மலபார் போர் பயிற்சியில், இந்தாண்டு முதல் முறையாக ஆஸ்திரேலிய கடற்படையும் இணைய சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு, சட்டீஸ்கர் உள்ளிட்ட 15 மாநிலங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடை மூலம் விநியோகம்
- நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக, ரேஷன் கடைகள் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் மத்திய அரசின் பரிசோதனை திட்டத்தை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயல்படுத்துகிறது.
- 2019-20ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பரிசோதனைத் திட்டத்தை ரூ.174.6 கோடி செலவில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தலா ஒரு மாவட்டத்தில் அமல்படுத்த 15 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஒரு மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்
- குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த எம்.எஸ். ஜாஃபர் சேட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- இதுவரை டாக்டர் சி. சைலேந்திர பாபுவிடம் கூடுதல் பொறுப்பாக இருந்த தீயணைப்புத் துறை டிஜிபி பதவி தற்போது ஜாபர் சேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ஜாபர் சேட் இதுவரை வகித்து வந்த குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பதவியை, இனி சென்னை ரயில்வே துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.