தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி ஒப்பந்தம்
- நாடு முழுவதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க 'ஒஏஎல்பி' எனப்படும் திறந்தவெளி அனுமதி எனும் புதிய முறை 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் (டிஜிஎச்), இதுவரையில் 4 ஏலங்கள் விட்டு, பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
- இவற்றில் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் 6 வட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தமாகி உள்ளது. இவற்றில் வேதாந்தா நிறுவனத்துக்கு 2, ஐஓசி 1, ஓஎன்ஜிசி.க்கு 3 ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 வட்டாரங்களிலும் நேரடியானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
- இதற்கு தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பு காரணம். இச்சூழலில், ஓஏஎல்பி.யின் 5-வது சுற்று ஏலம் நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
- மொத்தம் 11 வட்டாரங்களுக்கான இந்த ஒப்பந்தம், ஓஎன்ஜிசி.யுடன் 7 மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் 4 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஓன்என்ஜிசி.யின் 7-ல் ஒரு இடம் தமிழகத்தில் இடம் பெற்றுள்ளது.
- இது, தமிழகத்தில் காவிரி படுகைக்கு கிழக்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில் உள்ளது. தமிழகத்தின் காவிரி படுகையில் பெரும்பான்மையான நிலப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், முதல் முறையாக ஆழ்கடல் பகுதியில் அதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
- ஐந்தாவது ஒஏஎல்பி முறையில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் மொத்த பரப்பளவு 19,789,04 சதுர கி.மீ ஆகும். இதில், தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் 4,064,22 சதுர கி.மீ இடம் பெற்றுள்ளது. மற்றவை ராஜஸ்தான் 2, குஜராத் 4, அசாம் 2, மகராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் நிலப்பகுதி மற்றும் கடல் பகுதிகளில் அமைந்துள்ளன.
12வது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு
- 'பிரிக்ஸ்' அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 12-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஜூலை 21-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து 12-வது பிரிக்ஸ் மாநாடு காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோஸா ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
- மாநாட்டில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதேபோல உலக சுகாதார அமைப்பு, சர்வதேச செலாவணி நிதியம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.
- கரோனா வைரஸுக்கு தேவையான மருந்துகளை சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது. இந்திய மருந்து நிறுவனங்களின் உற்பத்தித் திறனை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. மனித குலத்தின் நன்மைக்காக கரோனா தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து வழங்கும்.
- கரோனா வைரஸ் கால கட்டத்தில் 'சுயசார்பு இந்தியா' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். இதன்மூலம் சர்வதேச சந்தைக்கு தேவையான பொருட்களை இந்தியா உற்பத்தி செய்து விநியோகிக்கும். பிரிக்ஸ் நாடுகளின் தனியார் நிறுவனங்கள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
- பிரிக்ஸ் அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பில் ரஷ்யா இருந்தது. காணொலி மாநாட்டின் போது இந்தியாவிடம் தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதன்படி அடுத்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்தும்.
- அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். பிரிக்ஸ் மாநாட்டில் இரு நாடுகளின் தலைவர்களும் 2-வது முறையாக காணொலி மூலமாக பங்கேற்றனர்.
இந்திய அணி கிட் ஸ்பான்சராக எம்பிஎல் நிறுவனம்
- கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 'நைக்' நிறுவனம் ஈடுபட்டிருந்த நிலையில், ஒப்பந்தம் நீட்டிப்பு சர்ச்சை காரணமாக நைக் விலக முடிவு செய்தது. புதிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஏல அறிவிப்பை பிசிசிஐ ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.
- புமா, அடிடாஸ் உட்பட பல நிறுவனங்கள் ஒப்பந்த படிவத்தை வாங்கிச் சென்றாலும், ஏலப்புள்ளிகளை சமர்ப்பிக்கவில்லை. நைக் நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை. அதனால் ஏல நடவடிக்கைகளை பிசிசிஐ நிறுத்தி வைத்தது.
- கூடவே ஆட்டம் ஒன்றுக்கு 88 லட்சமாக இருந்த ஏலத்தொகை 61 லட்சமாக குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆண்டுக்கு குறைந்தது 6 கோடி எனவும் நிர்ணயிக்கப்பட்டது. ஒப்பந்தகாலம் 3 ஆண்டுகள்.
- ஏலத்தொகை குறைத்தும் கொரோனாவால் ஏற்பட்ட இழப்பு காரணமாக பல நிறுவனங்கள் முன்வரவில்லை. இந்தியாவில் போலிகள் அதிகம் என்பதால் ஒப்பந்த நிறுவனங்களின் வருவாய் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
- இந்நிலையில் 'எம்பிஎல் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவையான சீருடை, உபகரணங்களை வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. இந்த ஒப்பந்தம் 2023 டிசம்பர் வரை அமலில் இருக்கும்.
லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது - நிதி அமைச்சகம்
- லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிவிப்பு டிசம்பர் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி நிதியமைச்சகம் அறிவிக்கும்.
- அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்று தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவசர செலவுகள், மருத்துவ சிகிச்சை, கல்வி கட்டணம் செலுத்துதல், திருமண செலவுகள் என முக்கியமான செலவுகளுக்கு விலக்கும், தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு, மத்திய ரிசர்வ் வங்கி RBI-இன் அனுமதி தேவைப்படும்.
- கடந்த மூன்று ஆண்டுகளாக, தி லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் (The lakshmi vilas bank) நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருவதால், வங்கியின் நிகர மதிப்பு குறைந்துள்ளது,
- இதனால், என்.பி.ஏ அதிகமாகியிருக்கிறது. நஷ்டங்கள் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- லட்சுமி விலாஸ் வங்கியின் இந்த சரிவுக்கு காரணங்கள் என்று பார்த்தால், நிகர மதிப்பு எதிர்மறையாக சென்றது முதல் காரணம். அடுத்து, தொடர்ந்து ஏற்பட்ட நட்டங்களை சமாளிக்க போதுமான மூலதனத்தை திரட்ட முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புகளை தொடர்ந்து திரும்பப் பெற்று வருகின்றனர் என்பதோடு, வங்கியின் பணப்புழக்கமும் குறைந்துவிட்டது.
- இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே லட்சுமி விலாஸ் வங்கி prompt corrective action (PCA) எனப்படும் உடனடி திருத்த நடவடிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
- இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த முதலீட்டாளர்களுடன் இன்னும் உடன்பாடு எட்டியதாக தெரியவில்லை. எனவே, வங்கியில் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமையகம் கரூரில் அமைந்துள்ளது. கரூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள வணிகர்களுக்கும் உழவர்களுக்கும் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்காக, வி. எஸ். என். ராமலிங்க செட்டியார் தலைமையில் கரூரின் ஏழு தொழிலதிபர்கள் ஒன்றாக இணைந்து 1926 நவம்பர் 3ஆம் தேதியன்று கரூரின் ஏழு தொழிலதிபர்கள் வங்கியை தோற்றுவித்தனர்.