கட்டபொம்மன் கோட்டை, மனோரா உட்பட தொல்லியல் சின்னங்கள் ரூ.3.50 கோடியில் புனரமைப்பு: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
- ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி திட்டத்தில், சுற்றுலாத் துறையின் மூலம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நினைவுச் சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன.
- இப்பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடியே 81 லட்சத்து 38 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள கட்டபொம்மன் கோட்டையின் எஞ்சிய பகுதியை புனரமைத்து பாதுகாக்கும் வகையில், ரூ.92 லட்சத்து 43 ஆயிரம் செலவில், கோட்டை பகுதிகளை சுண்ணாம்பு கலவை கொண்டு சீரமைத்து, சுற்றிலும் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்து, குடிநீர், கழிவறை வசதிகள், பாதுகாவலர் அறை, புல்வெளித்தளம், மின்விளக்குகள், வழிகாட்டு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- அதேபோல் தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம் சரபேந்திரராஜபட்டினம் கிராமத்தில், 8 அடுக்குகளை கொண்ட75 அடிஉயரமுள்ள அறுகோண அமைப்புடைய மனோரா நினைவு சின்னத்தை புனரமைத்து பாதுகாக்கும் வகையில், ரூ.2 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரம் செலவில், கோட்டையைச் சுற்றிலும் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பினால் ஆன பாதுகாப்பு கிரில் அமைத்து, குடிநீர் வசதி, பாதுகாவலர் அறை, புல்வெளித்தளம், மின்விளக்குகள், வழிகாட்டு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள்அமைக்கப்பட்டுள்ளன.
- நாகை மாவட்டத்தில் உள்ள டச்சுக் கல்லறையை புனரமைத்து பாதுகாக்கும் வகையில், 25 லட்சத்து 94 ஆயிரம் செலவில் கல்லறையை சீரமைத்து சுற்றிலும் கற்கட்டுமானத்துடன் கூடியஇரும்பினால் ஆன பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டு புல்வெளித்தளம், வழிகாட்டுப்பலகை, மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.
- தொல்லியல் துறை சார்பில் ரூ.3 கோடியே 51 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்த நினைவுச் சின்னங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
'குவாட்' என்றழைக்கப்படும் நாற்கர கூட்டமைப்பு
- 'குவாட்' என்றழைக்கப்படும் நாற்கர கூட்டமைப்பைச் சோந்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த வளா்ச்சி காணப்பட வேண்டும் என்று கூட்டமைப்பைச் சோந்த நாடுகள் விரும்புகின்றன.
- இறையாண்மை, சா்வதேச சட்டங்கள், வெளிப்படைத்தன்மை, சா்வதேச கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, சச்சரவுகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பது உள்ளிட்டவற்றுக்குத் தொடா்ந்து மதிப்பளித்து வருகிறோம்.
- இந்தோ-பசிபிக் பிராந்தியம் தொடா்பான கருத்துருவுக்கு பல்வேறு தரப்பினா் ஆதரவு தெரிவித்து வருகின்றனா். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
- அதேபோல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றும் நாடுகளுக்கிடையே பொருளாதாரத் தொடா்பை ஏற்படுத்துவதும் அவசியமாக உள்ளது.
- கரோனா நோய்த்தொற்று பரவலானது நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக, வரும் ஜனவரி முதல் இந்தியா செயல்படவுள்ளது.
- உலக நாடுகள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்களைப் புகுத்தும் நோக்கிலும் இந்தியாவின் செயல்பாடு அமையும் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.
- இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ, ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டொஷிமிட்சு மொதேகி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் மாரிஸ் பெய்ன் ஆகியோரும் பங்கேற்றனா்.
- மாநாட்டின்போது ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டொஷிமிட்சு மொதேகி பேசுகையில், ''கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில் நாற்கர கூட்டமைப்புடன் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது'' என்றாா்.
- அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ பேசுகையில், ''இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவி வரும் சுதந்திரம், ஜனநாயகம், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை சிதைப்பதற்கு சீனா முயன்று வருகிறது.
- கிழக்கு சீனக் கடல், தென் சீனக் கடல், லடாக், தைவான் உள்ளிட்ட பகுதிகளில் சீனா தொடா்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. கரோனா நோய்த்தொற்று தொடா்பான தகவல்களை சீனா வேண்டுமென்றே மறைத்தது. அதன் காரணமாக உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் மோசமான நிலைக்குச் சென்றது.
- சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுரண்டலிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் நட்பு நாடுகளைக் காக்க வேண்டியுள்ளது. நாற்கர கூட்டமைப்பைச் சோந்த நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதற்கு முன்பை விட தற்போது தான் அதிக அவசியம் ஏற்பட்டுள்ளது'' என்றாா்.
எரிசக்தி அமைச்சகத்துடன், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்
- நடப்பு 2020-21 நிதியாண்டுக்கான இந்த ஒப்பந்தத்தில் மத்திய எரிசக்தி துறை செயலாளர் சஞ்சீவ் நந்தன் சகாய் மற்றும் பவர்கிரிட் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
- நிதி மற்றும் திட்ட செயலாக்கம் தொடர்பான பல்வேறு இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட், மகாரத்னா அந்தஸ்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் 1993-94ல் கையெழுத்தானது.
- ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் 4.285 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீல் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
- இந்த ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த சில வாரங்களாக உலக அளவிலுள்ள முன்னணி முதலீட்டு நிறுவனங்களிலிருந்து 37,710 கோடி ரூபாயை முதலீடாக கவர்ந்துள்ளது.
- ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில்வர் லேக், ஜென்ரல் அட்லாண்டிக், முபாடாலா, ஜி.ஐ.சி, கே.கே.ஆர், டி.பி.ஜி, ஏ.ஐ.டி.ஏ(அபுதாபி முதலீட்டு நிறுவனம்) ஆகிய நிறுவனங்களிலிருந்து கடந்த நான்கு வாரங்களில் இந்த முதலீட்டைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடை நீக்கம்
- கடந்த மார்ச் மாதத் துவக்கத்தில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் பரவல் அதிகரிக்க துவங்கியவுடன், பொதுவாக மருத்துவத் துறையினரால அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்-95 ரக முகக்கவசங்களுக்கான உள்நாட்டுத் தேவை அதிகரித்தது. இதையடுத்து அந்த கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
- பின்னர் உற்பத்தி நிலைமை வெகுவாக சீரடைந்தவுடன், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, ஒரு மாதத்திற்கு 50 லட்சம் முகக்கவசங்களை மட்டும் ஏற்றுமதி செய்யலாம் என்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில் என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடையை நீக்கி மத்திய வர்த்தகத் துறை தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம், கைப்பேசி செயலி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
- "பூம்புகார் என அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பொதுத்துறை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, 1973 ஆம் ஆண்டு முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- தமிழக கைவினைஞர்களின் கடுமையான உழைப்பினால் பித்தளை, பஞ்சலோகம், மரம், கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த கைவினைப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதோடு, கைவினைஞர்களின் திறமையை மேம்படுத்த பயிற்சி அளித்தல்,
- கைவினைஞர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உயர்த்துதல், வடிவமைப்புகளில் புதுமையை ஊக்குவித்தல், கைவினைஞர்களுக்கு சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் செயல்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் (Poompuhar Virtual Reality Showroom) மூலம் தமிழக கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை வாடிக்கையாளர்கள் எந்த இடத்திலிருந்தும் முப்பரிமாண முறையில் பார்க்க முடியும்.
- இந்த மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பத்தை விமான நிலையம், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் அமைத்து கைவினைப் பொருட்களை எளிதாகச் சந்தைப்படுத்த இயலும்.
- குறிப்பாக, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நடத்தப்படும் கண்காட்சிகளில் மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பம் மூலம் அக்கைவினைப் பொருட்களை அந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லாமலே, அவற்றை முப்பரிமாண வடிவமைப்பில் வாடிக்கையாளர்கள் பார்த்து இணையதள வழியாக வாங்கக்கூடிய வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.
- இத்தொழில்நுட்பம் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்த உறுதுணையாக இருக்கும். மேலும், தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வகையில், புதிய முயற்சியாக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மெய்தோற்ற கைப்பேசி செயலி (Augmented Reality Mobile App) மூலம், கைவினைப் பொருட்களை முப்பரிமாணத்தில் காட்சிப்படுத்தி, அலுவலகம், வீடு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அலங்கரித்து காட்டி கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.