2035 வரை ஷி ஜின்பிங் சீன அதிபா்: சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல்
- சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பெய்ஜிங்கில் கடந்த 4 நாள்களாக நடைபெற்றது.
- இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் 198 மத்தியக் குழு உறுப்பினா்கள், 166 மாற்று உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சாா்பில் மத்தியக் குழு உறுப்பினா்கள், அதிபா் ஷி ஜின்பிங்கின் செயல்பாடுகளை மதிப்பிட்டனா்.
- தொடா்ந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஷி ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 14-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் (2021-2025) ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இதில், உள்ளூா் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்றுமதியை அதிகம் நம்பியிருக்காமல், உள்நாட்டு நுகா்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது சீன அதிபா் ஷி ஜின்பிங் முன்வைத்த முக்கிய யோசனை என்றும் தெரிய வந்துள்ளது.
- சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மா சேதுங்குக்குப் பிறகு கட்சியின் அதிகாரமிக்க தலைவராக ஷி ஜின்பிங் இப்போது வளா்ந்துள்ளாா். அதிபா் பதவி தவிர, கட்சியின் பொதுச் செயலா் பதவி, ராணுவத்தின் தலைமைப் பதவி ஆகியவற்றையும் அவரே வைத்துள்ளாா்.
- ஆயுள் முழுவதும் அவா்தான் இப்பதவிகளில் இருப்பாா் என்று தெரிகிறது. ஏனெனில், இப்போது வழங்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் முடியும்போது அவருக்கு 82 வயதாகும். அதற்கு முன்னதாகவே அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.
- கடந்த 2012-ஆம் ஆண்டு சீன அதிபராகப் பொறுப்பேற்ற ஷி ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022-இல் முடிவடைய இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பதவியில் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளாா்.
நாடு முழுதும், 736 அணைகளை, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புனரமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கூறியதாவது.
- அணைகள் பராமரிப்பில் தீவிர கவனம் செலுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுதும் தேர்வு செய்யப்பட்ட, 736 அணைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டம், 10 ஆயிரத்து, 121 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சர்க்கரையை தவிர மற்ற தானியங்களை, சணல் பைகளிலேயே மூட்டை கட்ட, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
- சர்க்கரையை தவிர மற்ற தானியங்களை, சணல் பைகளிலேயே மூட்டை கட்ட, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதனால், சணல் பை தயாரிப்பாளர்கள் பயன்அடைவர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில், 20 சதவீதம், சணல் மூட்டைகளில் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
118 கோடி மதிப்பில் 1.10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்
- சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், நந்தனத்தில் 73 கோடியே 17 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டிடம், 4 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ராஜபாளையம் மற்றும் பழனியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் மதுரை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள 3 மின்தூக்கிகள் என மொத்தம் 77 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டிடங்கள் மற்றும் மின்தூக்கிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- இதேபோல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 118 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 64 ஊராட்சிகளுக்குட்பட்ட 1,143 குக்கிராமங்களில் உள்ள 1,10,288 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
- மேலும், 2021-22ம் நிதியாண்டில் 173 கிராம ஊரட்சிகளுக்குட்பட்ட 1,779 குக்கிராமங்களில் உள்ள 1,90,079 வீடுகளுக்கும், 2022-23ம் நிதியாண்டில் 138 கிராம ஊரட்சிகளுக்குட்பட்ட 1,538 குக்கிராமங்களில் உள்ள 1,83,733 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இதன்மூலம், மொத்தம் மூன்றாண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாத 5,71,683 வீடுகளுக்கும் 2022-23ம் நிதியாண்டிற்குள் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இதை தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சேலம், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 25 இடங்களில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சுற்றுப்புற காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களை திறந்து வைத்தார்.
மக்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள 'நமது அரசு' வலைதளம்: முதல்வர் எடப்பாடி துவக்கினார்
- 'நமது அரசு' வலைத்தளம் 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீல் தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
- இதில், அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கும், அரசுக்குமிடையே உரையாடல்கள் வாயிலாக கருத்துப் பரிமாற்றம் செய்து, மக்கள் நலன் சார்ந்த நேர்வுகளில் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் தளமாக இருக்கும்.
- அரசு இயந்திரத்தை எளிதாக மின்னணு வழியில் தொடர்பு கொள்ளவும். மேலும், தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்களைப் பெற்று, அவற்றை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ளவும், மக்களின் தேவைகளுக்கேற்ப புதிய திட்டங்களை வகுக்கவும் அரசுக்கு உறுதுணையாக அமையும்.
- அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வந்தன.
- அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா செப். 15ல் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் இன்னமும் ஒப்புதல் வழங்கவில்லை.