மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 4 மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் மாநில அரசு
- மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு நிலவி வந்தது.
- இதற்கிடையே, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நீர்த்து போக செய்யும்படியாக, மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டங்களை நிறைவேற்றும்படி காங்கிரஸ் முதல்வர்களுக்கு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை வழங்கினார்.
- அதன்படி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் சட்டங்களை தடுத்து நிறுத்தும் வகையிலான மசோதாக்களை நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்தது.
- இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- அதன்படி, பஞ்சாபில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ், யாரும் நெல் அல்லது கோதுமை, கொள்முதல் அல்லது விற்பனை செய்ய முடியாது. இதனை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.
- அதே போல், வேளாண் விளைபொருட்களை பதுக்குதல், கள்ளசந்தை விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
- இதன் மூலம் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து சட்டம் நிறைவேற்றிய நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை பஞ்சாப் அரசு பெற்றுள்ளது.
டி.ஆர்.டி.ஓ., கொள்முதல் கையேடு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
- ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில், தனியார் நிறுவனங்களையும் ஈடுபடுத்தும் நோக்கில், திருத்தம் செய்யப்பட்டுள்ள, டி.ஆர்.டி.ஓ.,வின் புதிய கொள்முதல் கையேட்டை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
- நடவடிக்கைராணுவ தளவாடங்கள் தயாரிப்பில், நம் நாட்டை சர்வதேச மையமாக உருவாக்கும் நோக்கில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது.
- உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், ராணுவ தளவாடங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு பணிகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செய்து வருகிறது.
- இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கொள்முதல் கையேட்டின் அடிப்படையில், அனைத்து ஒப்பந்தங்கள், திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி பணிகளை, டி.ஆர்.டி.ஓ., செயல்படுத்தி வருகிறது.
- தேவைகள் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்றார் போல், இந்த கொள்முதல் கையேட்டில், திருத்தங்கள் செய்யப்படும். கடைசியாக, 2016ல் திருத்தம் செய்யப்பட்டது. 'ஸ்டார்ட் - அப்'அதன்பின், பல்வேறு திருத்தங்கள் தற்போது செய்யப்பட்டுள்ளன.
திருவில்லிபுத்தூர் அருகே 2500 ஆண்டு பழமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு
- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் குன்னூர் பகுதியில் பழமையான குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெடுங்கல் என்றும் அழைக்கப்படும் இக்குத்துக்கல் 20 அடி உயரம் கொண்டதாக உள்ளது.
- 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த ஒரு இனக்குழு தலைவனுக்காக எடுக்கப்பட்ட நினைவு சின்னமாகவோ அல்லது ஆநிரை கவர்தல் போரில் இறந்துபட்ட வீரனுக்கு எடுக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.
- சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் முனியாண்டி என்ற பெயரில் இந்த குத்துக்கல்லை வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குத்துக்கல் அதிகம் காணப்படும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் முதன்முதலாக குத்துக்கல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நிலவில் 4ஜி நெட்வொர்க் வசதியை கட்டமைக்க நோக்கியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது நாசா
- நிலவில் 4ஜி செல்லுலார் நெட்வொர்க் வசதியை கட்டமைக்க நாசா நோக்கியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் இதற்கான பணிகளை துவங்க நோக்கியா நிறுவனத்திற்கு நாசா சார்பில் 1.4 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
- நிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்க மொத்தத்தில் 37 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் முதல் முறையாக எல்டிஇ\4ஜி செல்லுலார் வசதி கட்டமைக்கப்பட இருக்கிறது.
- இதற்காக நோக்கியா சார்பில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம், நிலவின் மேற்பரப்பில் தொலைதூர தகவல் பரிமாற்றங்களை அதிவேகமாக மேற்கொள்ள வழி செய்யும். இதுதவிர தற்சமயம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை விட சீரான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் வழி செய்யும்.
- நாசா இலக்கின் படி 2028 ஆம் ஆண்டு வாக்கில் நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள் பணிகளை மேற்கொள்ள செய்யும் திட்டத்தை நிறைவேற்ற விரைவில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என நாசா அதிகாரி ஜிம் பிரைட்ஸ்டைன் தெரிவித்து இருக்கிறார்.
- நோக்கியாவின் ஆராய்ச்சி பிரிவான பெல் லேப்ஸ், லூனார் ரோவர்களை வயர்லெஸ் முறையில் இயக்குவது, நேவிகேஷன் மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்ட வசதிகளை வழங்க பணியாற்றி வருவதாக தெரிவித்து உள்ளது.
- நாசாவின் திட்டத்தின் படி நோக்கியா மட்டுமின்றி பல்வேறு இதர தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற பணிகளை துவங்க இருக்கின்றன. இது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.