பருவ நிலை மாறுபாட்டால் சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சி - புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு
- மிகவும் பழமை வாய்ந்த நாகரிகமாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம், வீழ்ச்சி அடைந்ததற்கு பருவ நிலை மாறுபாடு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
- பண்டைய இந்தியாவில் தோன்றிய சிந்து சமவெளி நாகரிகமானது உலகின் மிகப் பழமை வாய்ந்த நாகரிகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள், இந்த நாகரிகமானது சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறது.
- இந்தோ - ஆரியர்களின் படையெடுப்பு, பூகம்பம் ஆகியவற்றின் காரணமாக இந்த நாகரிகம் வீழ்ச்சி அடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் இதுவரை தெரிவித்து வந்தனர்.
- இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய விஞ்ஞானி நிஷாந்த் மாலிக் என்பவர் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.
- சிந்து சமவெளி நாகரிகம் இருந்த தெற்காசியப் பகுதிகளில் உள்ள குகைகளில் 'ஸ்டேல்காமைட்' என்ற ஒரு வகை உப்புக் கனிமங்கள் தேங்கியிருந்தன. இதனை பகுப்பாய்வு செய்ததில், அப்பகுதிகளில் கடந்த 5,700 ஆண்டுகளாக பெய்த பருவ மழையின் தரவுகள் கிடைக்கப் பெற்றன.
- இதனை வைத்து பார்க்கும் போது, சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியதற்கு சற்று முன்பு அங்கு நிலவிய பருவ நிலைக்கும், அந்த நாகரிகம் முடிவடைந்த போது அங்கு நிலவிய பருவ நிலைக்கும் மிகப்பெரிய மாறுபாடுகள் இருந்தன.
- எனவே, சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்ததற்கு பூகம்பம், இந்தோ - ஆரியர் படையெடுப்பு ஆகியவற்றைக் காட்டிலும் பருவ நிலை மாறுபாடே முக்கிய காரணமாக இருந்திருக்கும்.
- புதிய கணித முறையின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக விஞ்ஞானி நிஷாந்த் மாலிக் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் முதல்முறையாக பெண் நீதிபதிகள் நியமனம்
- குவைத் நாட்டில் முதல்முறையாக 8 பெண்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக புதிதாக 54 பேர் நியமிக்கப்பட்டனர். அதில், 8 பெண்கள் அடங்குவர்.
- பெண் நீதிபதிகளின் பணிகள் குறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் மதிப்பீடு செய்யப்பட்டு மற்ற முடிவெடுக்கப்படும் என குவைத் உச்சநீதிமன்ற குழுத் தலைவர் யூசெப் அல் மாதாவா கூறினார்.
- குவைத் மகளிர் கலாச்சார மற்றும் சமூக சங்கத்தின் தலைவரான லுல்வா சலேஹ் அல் முல்லா கூறுகையில், நீதிபதிகளாக பணியாற்றுவதற்காக பெண்களின் உரிமைக்காக தனது அமைப்பு நீண்ட காலமாக போராடி வருகின்றது.
- குவைத்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மற்றும் அரசியல் பதவிக்கு போட்டியிட 2005-ம் ஆண்டு உரிமைக் கிடைத்த நிலையில், தற்போது நீதித்துறையிலும் உரிமைக் கிடைத்துள்ளது.