வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.6,399 கோடி ஒதுக்கீடு
- நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.6,399 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
- அதன்படி கடந்த 7-ஆம் தேதி வரை 15 நிதி நிறுவனங்களுக்கு ரூ.6,399 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 37 நிதி நிறுவனங்கள் ரூ.11,037 கோடி நிதி கோரியுள்ளன.
- மத்திய அரசின் கடன் பத்திரங்களை வாங்கியதன் மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வழங்கிய தொகையை வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பொருளாதார வளா்ச்சியில் தேசிய வளா்ச்சி விகிதத்தைக் காட்டிலும் தமிழகம் தொடா்ந்து முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. இந்தத் தகவலை மத்திய புள்ளியியல் துறையானது வெளியிட்டுள்ளது.
- 2019-20-ஆம் ஆண்டில் தேசிய பொருளாதார வளா்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் 8.03 ஆக இருக்கிறது. இது ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும்.
- பொருளாதார வளா்ச்சி விகிதம் பற்றிய மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் கணக்கெடுப்பை அண்மையில் மத்திய அரசு இறுதி செய்திருந்தது. 2011-12-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கணக்கிடப்பட்டது.
- அதன்படி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழகம் தொடா்ந்து நீடிக்கிறது. மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. வேளாண்மை, அதன் சாா்புத் தொழில்கள், சுரங்கத் தொழில் ஆகியன முதன்மைத் தொழில்களாகப் பாா்க்கப்படுகின்றன.
- இந்தத் தொழில்கள் 6.08 சதவீத வளா்ச்சியையும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அடங்கிய துறையானது 6.63 சதவீத வளா்ச்சியையும் கண்டுள்ளன. இவற்றின் முந்தைய ஆண்டு வளா்ச்சி முறையே 8.49 சதவீதம் மற்றும் 7.83 சதவீதமாக இருந்தது.
- உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழில் ஆகிய இரண்டு முக்கிய துறைகளும் முறையே 10.27 சதவீதம் மற்றும் 10.49 சதவீதம் என்ற இரட்டை இலக்கத்தைக் காட்டும் அளவிற்கு வளா்ச்சி பெற்றுள்ளன.
- முதன்மைத் துறைகளில் தமிழகம் ஒவ்வொரு நிதியாண்டிலும் கூடுதலான வளா்ச்சியைப் பெற்று வருகின்றன. வேளாண்மையில் 2018-19-ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த 5.8 சதவீத வளா்ச்சி விகிதம், 2019-20-ஆம் ஆண்டில் 7.43 சதவீதமாக வளா்ந்திருக்கிறது.
- 2017-18-ஆம் ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.11 லட்சத்து 26 ஆயிரம் கோடியாகவும், வளா்ச்சி விகிதம் 8.59 சதவீதமாகவும் இருந்தது. இந்த காலகட்டத்தில், தேசிய வளா்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது.
- 2018-19-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் கோடியாகவும், வளா்ச்சி விகிதம் 7.95 சதவீதமாகவும் இருந்தது. இதே காலகட்டத்தில், தேசிய வளா்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது.
- 2019-20-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.13 லட்சத்து 13 ஆயிரம் கோடி, வளா்ச்சி விகிதம் 8.03 சதவீதம் இருந்தது. இந்த காலகட்டத்தில் தேசிய வளா்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக அமைந்துள்ளது.
- இந்தக் கணக்கின்படி கடைசி மூன்று நிதியாண்டுகளில் தமிழகத்தின் வளா்ச்சி விகிதம், தேசிய வளா்ச்சி விகிதத்தைவிட தொடா்ந்து அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய தூய்மை மையம் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
- மகாத்மா காந்தியின், 'துாய்மையான இந்தியா' எனும் கனவை நிறைவேற்றும் வகையில், கடந்த, 2014-, அக்டோபர், 2ல், துாய்மை இந்தியா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
- இதையடுத்து இன்று நடந்த விழாவில் 'ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா' எனப்படும், தேசிய தூய்மை மையத்தை, டில்லியில், காந்தி சமாதி உள்ள ராஜ்காட்டில், பிரதமர் துவக்கி வைத்தார்.
- குப்பைகள் இல்லாத இந்தியா என்னும் ஒரு வாரகால பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
- தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக, 'குப்பைகள் இல்லாத இந்தியா' என்னும் தூய்மைப் பிரசாரம், சுதந்திர தினம் வரை ஒரு வாரத்துக்கு நடைபெறும்.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாற்று உச்சம்
- கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1,194 கோடி டாலா் அதிகரித்து 53,457 கோடி டாலராக புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
- இதற்கு முந்தைய ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 499 கோடி டாலா் உயா்ந்து 52,263 கோடி டாலராக காணப்பட்டது.
- இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது ஜூன் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் முதல் முறையாக அரை டிரில்லியன் டாலா் என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்திருந்தது.
- அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1,035 கோடி டாலா் உயா்ந்து 49,083 கோடி டாலராக இருந்தது.
- மேலும், தங்கத்தின் கையிருப்பு மதிப்பும் 152 கோடி டாலா் அதிகரித்து 3,762 கோடி டாலரானது. கணக்கீட்டு வாரத்தில் சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மதிப்பு 1.2 கோடி டாலா் அதிகரித்து 147 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 5.4 கோடி டாலா் உயா்ந்து 464 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
230 மில்லியன் ஆண்டுகள் பழமையான 236 காரட் சுத்த வைரம் - ரஷ்யாவில் கண்டுபிடிப்பு
- யாகுட்டியாவின் வடக்கே அனாபர் நதிக்கு அருகேயுள்ள எபிலியாக் சுரங்கத்தில் தொழிலாளர்களால் ஒரு விலை மதிப்பற்ற கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது லப்தேவ் கடற்கரைக்கு அருகே உள்ளது. யாகுட்ஸ்கிலிருந்து 1,211கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது.
- இந்த சுரங்கம் அல்ரோசா குழுமத்தின் டயமன்ஸ் ஆஃப் அனபருக்கு சொந்தமானது. அரக்கு பிசின் நிறத்தில் இருக்கும் இந்த வைரத்தின் பரிமாணாங்கள் 47x24x22 மிமீ ஆக உள்ளது.
- இத்தகைய உயர்தர மெருகூட்டப்பட்ட பெரிய வைரம் ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு. இந்த கல், நிபுணர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்ப்படும் அல்ரோசாவின் யுனைடெட் விற்பனை அமைப்பின்கீழ் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
- கடந்த பல ஆண்டுகளாக எபிலியாக் சுரங்கத்தில் இருந்து பிரகாசமான கரடுமுரடான பல வைரங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு கோடைகாலத்தில் மட்டும் ஒரு கிரிம்சன், ஒரு இளஞ்சிவப்பு மற்றும் ஒரு அடர் மஞ்சள் கற்கள் ஒரு மாதத்திற்குள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ம.பி.,கவர்னராக லட்சுமிகாந்த்பாஜ்பாய் நியமனம்
- ம.பி.,மாநிலத்தின் கவர்னராக இருந்து வந்த லால்ஜி டாண்டன் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் லக்னோவில் காலமானார்.
- இதனையடுத்து உ.பி., மாநில கவர்னராக இருந்து வரும் ஆனந்தி பென் படேல் ம.பி., கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனிடையே உ.பி., மாநில பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் ம.பி., மாநிலத்தின் புதிய கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.