- பொருளாதார வளா்ச்சியில் தேசிய வளா்ச்சி விகிதத்தைக் காட்டிலும் தமிழகம் தொடா்ந்து முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. இந்தத் தகவலை மத்திய புள்ளியியல் துறையானது வெளியிட்டுள்ளது.
- 2019-20-ஆம் ஆண்டில் தேசிய பொருளாதார வளா்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் 8.03 ஆக இருக்கிறது. இது ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும்.
- பொருளாதார வளா்ச்சி விகிதம் பற்றிய மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் கணக்கெடுப்பை அண்மையில் மத்திய அரசு இறுதி செய்திருந்தது. 2011-12-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கணக்கிடப்பட்டது.
- அதன்படி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழகம் தொடா்ந்து நீடிக்கிறது. மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. வேளாண்மை, அதன் சாா்புத் தொழில்கள், சுரங்கத் தொழில் ஆகியன முதன்மைத் தொழில்களாகப் பாா்க்கப்படுகின்றன.
- இந்தத் தொழில்கள் 6.08 சதவீத வளா்ச்சியையும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அடங்கிய துறையானது 6.63 சதவீத வளா்ச்சியையும் கண்டுள்ளன. இவற்றின் முந்தைய ஆண்டு வளா்ச்சி முறையே 8.49 சதவீதம் மற்றும் 7.83 சதவீதமாக இருந்தது.
- உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழில் ஆகிய இரண்டு முக்கிய துறைகளும் முறையே 10.27 சதவீதம் மற்றும் 10.49 சதவீதம் என்ற இரட்டை இலக்கத்தைக் காட்டும் அளவிற்கு வளா்ச்சி பெற்றுள்ளன.
- முதன்மைத் துறைகளில் தமிழகம் ஒவ்வொரு நிதியாண்டிலும் கூடுதலான வளா்ச்சியைப் பெற்று வருகின்றன. வேளாண்மையில் 2018-19-ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த 5.8 சதவீத வளா்ச்சி விகிதம், 2019-20-ஆம் ஆண்டில் 7.43 சதவீதமாக வளா்ந்திருக்கிறது.
- 2017-18-ஆம் ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.11 லட்சத்து 26 ஆயிரம் கோடியாகவும், வளா்ச்சி விகிதம் 8.59 சதவீதமாகவும் இருந்தது. இந்த காலகட்டத்தில், தேசிய வளா்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது.
- 2018-19-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் கோடியாகவும், வளா்ச்சி விகிதம் 7.95 சதவீதமாகவும் இருந்தது. இதே காலகட்டத்தில், தேசிய வளா்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது.
- 2019-20-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.13 லட்சத்து 13 ஆயிரம் கோடி, வளா்ச்சி விகிதம் 8.03 சதவீதம் இருந்தது. இந்த காலகட்டத்தில் தேசிய வளா்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக அமைந்துள்ளது.
- இந்தக் கணக்கின்படி கடைசி மூன்று நிதியாண்டுகளில் தமிழகத்தின் வளா்ச்சி விகிதம், தேசிய வளா்ச்சி விகிதத்தைவிட தொடா்ந்து அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய புள்ளியியல் துறை தேசிய பொருளாதார வளா்ச்சி அறிக்கை / NATIONAL DEVELOPMENT GROWTH REPORT FOR CENTRAL STATISTICS DEPARTMENT
August 09, 2020
0
Tags